அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

நாளை பதவி ஏற்கும் மோடி உறுதி

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி, அரசியல் சாசனப் புத்தகத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து வணங்கினார்.

மேடையில் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்த 14 கட்சிகளில் 9 கட்சிகளின் தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. மோடியை பிரதமர் பதவிக்கு, ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அமித்ஷா, நிதின் கட்காரி, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் வழி மொழிந்தனர்.

ஒருமனதாக மோடி தேர்வு

இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, அதாவது பிரதமராக, மோடி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது எம்.பி.க்கள் மத்தியில் பேசிய மோடி, “எனது புதிய அரசின் முடிவுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

“தமிழக பாஜக அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – அங்கு நமக்கு எம்.பி.க்கள் இல்லை – ஆனால் தொண்டர்கள் பாஜக கொடியை உயர்த்தி பிடித்துள்ளனர் – இன்று தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை – ஆனால் எங்களது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது” என்று மோடி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ‘’மோடி, பிரதமராவதை எனது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கிறது – 10 ஆண்டுகளாக அவர் பிரதமராக இருந்ததையும், இப்போது மீண்டும் பிரதமராக இருப்பதையும் எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் – இனி எப்போதும் நாங்கள் அவருடன் இருப்போம்” என்று உறுதி அளித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ்குமார் 5 முறை கட்சி மாறியுள்ளதால், இப்போதும் அவர் கட்சி மாறலாம் என செய்திகள் உலா வந்தன. அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதிஷ், இந்த உறுதிமொழியை அளித்ததாக ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், அண்ணாமலை, எல்.முருகன், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாளை இரவு பதவி ஏற்பு

பின்னர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, எம்.பி.க்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனை ஏற்ற குடியரசுத் தலைவர் முர்மு, ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (09.06.2024 – ஞாயிற்றுக் கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் விழாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்கிறது.

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.

பதவி ஏற்பு விழாவில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, நேபாள பிரதமர் பிரசண்டா உள்ளிட்ட அண்டை நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

– மு.மாடக்கண்ணு

You might also like