மனிதர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்வோம்!

நூல் அறிமுகம்:

அரவாணிகள் – இந்த பெயர் ஏற்படுத்திய தாக்கம் தான் இந்த நாவலை நூலகத்தில் இருந்து எடுத்து வர உந்தியது என்னை. இப்போது இதை வாசிக்கும் உங்களையும் நாவலுக்குள் செல்ல அழைக்கின்றேன், வாருங்கள்.

சங்க காலம் முதல் இந்த நவீன காலம் வரையில் திருநங்கைகளின் அவல வாழ்விலிருந்து தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற ஓடிக்கொண்டிருக்கும் சக மனிதப்பிறவியின் உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்கக் கற்றுக்கொள்வோம்.

இந்த நாவல் 25 சிறு தொகுப்புகளாக இருந்தாலும் நான்காய் வகைப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர் முனைவர்.மு.அருணாச்சலம். இதில் பல்வேறு ஆசிரியர்களுடைய நாவலின் மையக் கருத்தை ஆழ்ந்து வாசித்து, அழகிய தொகுப்பாக இங்கு பதிவு செய்திருக்கிறார்..‌

சங்க காலத்தில் அரவாணிகள்:

திருநங்கைகள் பற்றிய பல்வேறு ஆசிரியர்களின் நாவல்களின் மையக்கருத்தை கொண்ட சிறு தொகுப்பு. அவர்களுக்கான சட்ட வரைவுகள் மற்றும் அவர்களின் சுயமுன்னேற்றம் இப்படி நான்காக வகைப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

முதலில் சங்ககாலம் தொட்டு வந்த அரவாண் தொன்மக் கதைகள் அரவாணிகள் தனிப்பிறப்பு அல்ல. அவர்களின் குரோம்சத்தின் குறைபாடுகளால் ஏற்படும் இன்னல்கள் என அத்தனையும் சொல்லி மாளாத அவலங்களை இங்கு காட்சிப் படுத்துகிறார்.

அதற்கு ஒரு சான்று இந்த கவிதை.

கை கழுவி அனுப்புகிறது குடும்பம்
கல்லறைக்கு..
கையேந்த வைக்கிறது சமூகம்
சில்லறைக்கு..
கடை கேட்கிறேன் குடல் பசிக்கு..
என்னை கேட்கிறாய்
உடல் பசிக்கு..
பாலியல் செய்தேனும்
பசி தீர்க்க வேண்டும்
வயிற்று உக்கிரம் எனக்கு..
உடல் வக்கிரம் உனக்கு..

என்று கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதையின் ஊடாக விவரிக்கிறார் திருநங்கைகளின் வாழ்வாதாரப் பிரச்சனையை. இதில் வரும் அத்தனை அரவாணிகளின் கதையும் எண்ணிலடங்கா அவலத்தையும் கண்ணீரையும் சுமந்து வருகிறது.

எப்பிறவி எடுத்தாலும் இப்பிறவி எடுக்காதேயம்மா என்று ஒரு இறந்த போன திருநங்கையின் பிணத்தை செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்தே இறுதிச் சடங்கு செய்யும் வழக்கம் அவர்களிடம் இருக்கிறது என்று அவர்களின் அவலத்தை சித்தரிக்கின்றது.

அரவாணிகள் என்றால் பாலியல் தொழில் மட்டுமே செய்பவர்கள் என்ற ஒரு பரவலான கண்ணோட்டத்தை பல சிறுகதைகள் வாயிலாக மாற்றியமைத்து இருக்கிறார் ஆசிரியர்.

பள்ளிப்படிப்பை முடிக்க முடியாமல் சக மனிதர்களின் கேலிப்பேச்சு, வீட்டிலோ அடி உதை சூடு வைப்பு என தாங்க முடியாச் சூழலில் வீட்டைவிட்டு வெளியேறும் அரவாணிகளுக்கு சமூகப் பாதுகாப்பின்மை காரணமாக வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.

விருப்பபட்டு சில பேர் என்றால் பலவந்தப் படுத்தப்பட்டே பல பேர் பாலியல் தொழிலில் சிக்கிக்கொள்ளும் அவலங்களை தான் இங்கு விவரிக்கிறது நாவல்.

குடும்பத்தில் இருந்து விரட்டப்பட்டவர்களை மூத்த அரவாணிகளே தத்தெடுத்துக்கொள்ளுதல். அவர்களுக்குள் இருக்கும் சட்டதிட்டங்கள் தாயம்மா நிர்வாணச் சடங்கு கூத்தாண்டவர் அரவான் வழிபாடு என அத்தனையும் விவரிக்கிறது.

சமீப காலத்தில் மக்களுக்கு அரவாணிகள் மேல் ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் அதை தொடர்ந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க அவர்கள் எடுக்கும் விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் இடை நிறுத்தா படிப்பு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு ஊடகத்துறை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழியாய் தம்மை முன்னிருத்திக்கொள்ள அவர்கள் எடுக்கும் விடாமுயற்சி அத்தனையும் வியந்து நோக்கவேண்டியதே.

நம் பார்வையில் எப்போதும் காட்சிப் பிழையான திருநங்கைகளின் உணர்வுகளையும் மாற்றப்பட வேண்டிய நம் சமூக பார்வைகளையும் அறிந்தகொள்ள அனைவரும் வாங்கிப் படியுங்கள் ‘அரவாணிகள் சங்க காலம் முதல் நவீன இலக்கியங்கள் வரை.

– நிஷா ராஜேஷ்

*****

#நூல் : அரவாணிகள் சங்க காலம் முதல் நவீன இலக்கியங்கள் வரை
தொகுத்தவர்: முனைவர்.மு.அருணாச்சலம்
சிவகுரு பதிப்பகம்
நூல் தொடர்புக்கு : 9894440530
பக்கங்கள் : 432.
விலை : ரூ.300.

You might also like