ஒவ்வொரு ஆண்டும், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சில ஆண்டுகள் இமயமலைக்குச் செல்லாமல் இருந்தார். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் அங்கு சென்றார்.
பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட்டார். ‘லால் சலாம்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வந்தார்.
இந்தப் படத்தில் இந்தி ‘சூப்பர்ஸ்டார்’ அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
இதையடுத்து ஓய்வுக்காக ரஜினிகாந்த் அபுதாபி சென்றார். இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு கடந்த 28 -ம் தேதி சென்னை திரும்பினார்.
சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தார். கடந்த 29-ம் தேதி தனது நண்பர்கள் ஸ்ரீஹரி உள்ளிட்டோருடன், ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து இமயமலைக்குக் கிளம்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினி பேட்டி அளித்தார்.
அப்போது மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? பாஜக வெற்றி பெறுமா? என்று அவரிடம் வினாக்கள் எழுப்பப்பட்டன.
‘தயவு செய்து அரசியல் கேள்விகள் வேண்டாம்’ என்று பதில் சொல்லி, அந்த கேள்விகளைத் தவிர்த்தார்.
விமானம் மூலம் டேராடூன் சென்ற அவர், அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்று வழிபட்டார்.
பின்னர் பத்ரிநாத் சென்ற அவர் அங்குள்ள கோயிலில் வழிபட்டார். அவரை அங்கு சந்தித்த பக்தர்கள், ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக ரஜினி, கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார்.
வரும் 4-ம் தேதி, சென்னை திரும்பும் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.