பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அதனை மக்களிடையே அதிகம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு புதுவிதமான ப்ரோமோஷன்களை சமீபகாலமாக நிறைய திரைப்படங்களுக்காக செய்து வருகின்றனர்.
ஒரு படத்தின் அறிவிப்பு வரும் நாள் தொடங்கி அது ரிலீஸ் ஆகும் நாள் வரையில் அந்தப் படத்தை எப்படி எல்லாம் விளம்பரம் செய்தால், மக்கள் அதனை கவனிப்பார்கள் என்பதில் பல்வேறு திட்டங்கள் போட்டு அதனை சரியாக வெற்றி பெறும் பட்சத்தில் அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்றடையும்.
சமூக வலைத்தளம் இன்று பரவலாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலான திரைப்பட குழுக்கள் இதனை தங்களின் பிரமோஷன் கருவியாகவும் பயன்படுத்தி வருகிறது.
அதிலும் விதவிதமாக ஒரு படத்தின் டைட்டில் டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இதற்கும் கவனம் செலுத்தி, பல்வேறு விஷயங்களில் நிறைய புதுமையை புகுத்தி ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கின்றனர்.
இதனால், சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானால் கூட அது மக்களுக்கு மிக எளிதாக தெரிந்து விடுகிறது.
அப்படி இருக்கையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் சென்றடைவதற்காக சமூக வலைத்தளம் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் படக்குழு செய்த விஷயம் தான் தற்போது பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.
இன்று சமூக வலைத்தளம் அதிகம் பரவலாக இருந்தாலும் அந்த காலத்தில் எல்லாம் ஒரு படம் வருவதை செய்தித்தாள்கள் மூலம் பெரும்பாலும் தெரிந்து கொள்ள முடியும்.
அப்படி இருக்கையில், சிவாஜி கணேசனின் படத்திற்காக படக்குழு செய்த ப்ரோமோஷனை பற்றி தற்போது பார்க்கலாம். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் தான் பாவமன்னிப்பு.
கடந்த 1961-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தை மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக்க மிகவும் பிரமாண்டமான அதே வேளையில் புதுமையான ஐடியா ஒன்றை கையில் எடுத்திருந்தது பாவ மன்னிப்பு படக்குழு.
ஜப்பானில் இருந்து பெரிய பலூன் ஒன்று வாங்கி வரப்பட்டு, சென்னை சாந்தி தியேட்டர் அருகே உயரத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.
அந்தப் பலூனின் மீது ஏவிஎம் நிறுவனத்தின் பெயர் இடம்பெற, அதன் வால் போல் நீளமாக பாவமன்னிப்பு என படத்தின் பெயரின் எழுத்துக்களும் இடம்பெற்றிருந்தது.
இதன் காரணமாக, சென்னை மவுண்ட் ரோடு வழி போகும் அனைவருமே இந்தப் படத்தின் ப்ரோமோஷனை வியந்தபடியே அண்ணாந்து பார்த்துச் சென்றனர்.
இந்த செய்தியை கேள்விப்படும் பலரும் 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு ப்ரமோஷன் யுக்தியா என ஆச்சரியத்துடன் தான் பார்த்து வருகின்றனர்.
- நன்றி : முகநூல் பதிவு