அப்பா சாக்கடை அள்ளுபவர்; மகன் மருத்துவர்!

கல்வியால் நிகழ்ந்த மகத்தான மாற்றம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் வறுமையிலும் தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்கள் vs படித்து முடித்து நல்ல நிலையில் இருக்கும் பிள்ளைகள் என்று இரண்டு தரப்பாக விவாதிக்கின்றனர்.

அதில் நடுவராக இருக்கும் ஆவுடையப்பன் பெற்றோரிடம் நீங்கள் உங்களுடைய குழந்தைகளை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வறுமையிலும் படிக்க வச்சீங்க? என்று கேட்க அதற்கு ஒரு பெண், “நான் என்னுடைய பிள்ளைகளை இட்லி கடை வைத்துதான் படிக்க வைத்தேன்” என்று சொல்ல, அந்த பெண்ணின் மகள், “நான் இப்போது நெட்வொர்க் அனலிஸ்ட் ஆக இருக்கிறேன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து இன்னொரு பெண் பேசுகையில், “நான் என்னுடைய பிள்ளைகளை கூலி வேலை செய்து படிக்க வைத்தேன்” என்று சொன்னதும் மறுபக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் மகன், “நான் செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜில் மெடிக்கல் ஆபீஸராக இருக்கிறேன்” என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து பேசிய நபர், “நான் சின்ன வயசுல ஐஸ் வியாபாரம் செஞ்சேன்” என்று சொல்ல எதிர் தரப்பில் இருந்த அவருடைய மகள் “என்னுடைய பெரிய அண்ணன் எம்.பில் முடிச்சு இருக்காங்க, நானும் ஒரு டீச்சரா இருக்கிறேன்” என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து பேசிய நபர், “நான் விவசாயம் செய்தேன் என்று சொல்கிறார்” அவருடைய மகன், “நான் இப்போ டாக்டராக இருக்கிறேன். ஆனால் எங்க அம்மா அப்பா என்னென்ன வேலை எல்லாம் செஞ்சாங்கன்னு சொன்னா அதை கௌரவ குறைச்சலா இருக்குனு சொல்லாம இருக்காங்க சார். அவர் சொல்ல மாட்டாரு. ஆனால் நான் எங்க அப்பா என்ன வேலை செஞ்சாருன்னு சொல்றேன்….”

“என்னை படிக்க வைக்கிறதுக்காக எங்க அப்பா சாக்கடை அள்ளுனாங்க., ரோட்டில் பைப்பு பதிக்க பள்ளம் தோண்டுவாங்க. அந்த வேலையும் எங்க அப்பா செஞ்சிருக்காங்க. அவர் கையில் இருக்கிற தழும்பை பாத்தா உங்களுக்கு தெரிஞ்சிரும்… அந்த தழும்ப பார்க்கும்போது தான்… என்னுடைய பெயருக்கு முன்னாடி இருக்கிற டாக்டர் என்ற பட்டம் இருக்கிறது ஒரு மாதிரி கர்வமா.. ஃபீல் பண்றேன் சார்” என்று சொல்ல அதைக் கேட்டு அவருடைய தந்தை பதில் பேச முடியாமல் ஆனந்த கண்ணீரோடு… இதற்கு மேலே நான் பேச ஒன்றுமில்லை என்று சொல்வது போன்று செய்கையை செய்கிறார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல பெற்றோர் தாங்கள் பட்ட கஷ்டம் தன்னுடைய பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் அதை ஒரு சில குழந்தைகள் அலட்சியப்படுத்தி விட்டு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் தங்களுடைய தந்தை தாயின் வலியை உணர்ந்து வாழ்க்கையில் சாதித்து தங்களுடைய பெற்றோர் தங்களுக்காக செய்த தியாகத்தை உன்னதப்படுத்துகிறார்கள்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like