பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் எனக்கு ரொம்ப பிடித்தமான காட்சி ஒன்றுள்ளது. தனது காதலன் ஆர்யாவிற்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதற்காக நயன்தாரா அழைத்துச் செல்லும் காட்சி. அங்கு வங்கியின் மேலாளராக இருக்கும் சித்ரா லட்சுமணன் கேட்கும் கேள்விகள், அதற்கு ஆர்யா சொல்லும் பதில்கள்..
இந்தக் காட்சியை மறுபடியும் தேடிப் பாருங்கள். இப்போதைய இளம்தலைமுறை மட்டுமல்ல, கடந்த சில பல பத்தாண்டுகளாகவே இளையதலைமுறையின் மனோபாவம் எப்படியிருக்கிறது என்பதை மிக கச்சிதமாக உணர்த்தும் சீன் அது.
எது தமக்குப் பொருத்தமான இலக்கு, அதை நோக்கி எப்படிப் பயணிக்க வேண்டும், அதற்கான தொலைநோக்கு திட்டங்கள் என்ன. அதற்கான தகுதிகள் என்ன. அவற்றை எப்படி வளர்த்துக் கொள்வது. என்று எந்தவித பிளானும் இல்லாமல்தான் பல காலமாக மாணவச் செல்வங்கள் வளர்ந்து வருகிறார்கள்.
இதுதான் படிக்க வேண்டும், இதுதான் என் பாதை என்று திட்டமிட்டு படிக்கும், பயணிக்கும் பிள்ளைகள் மிகக் குறைவு. அதற்கு பெற்றோர், உறவினர், ஆசிரியர் என்று ஒரு கூட்டமே பின்னால் நிற்கும். மட்டுமல்லாமல் அந்த மாணவனுக்கும் கூட கச்சிதமான அஜெண்டாவும் உள்ளுக்குள் அணையாத தீயும் இருக்கும். ஆனால் இப்படிப்பட்டவர்களின் சதவீதம் மிகக் குறைவு.
மாறாக ‘யாரோ சொன்னார்கள், எவரோ சொன்னார்கள், பிரெண்டு சேர்ந்திருக்கான். அதனால நானும் சேர்றேன். சித்தப்பா.. சொன்னாரு.. அப்பா கம்ப்பெல் பண்ணாரு..” என்று தற்செயலான இளங்கலை கல்விகளில் விழுகிறவர்கள்தான் அதிகம்.
என் காலத்திலும் அப்படித்தான் இருந்தது. என் மகள் காலத்திலும் அப்படியேதான் இருக்கிறது. சமீபத்தில் +2 தேர்வு எழுதியிருக்கும் என் மகளிடம் உயர்கல்வி பற்றி கேட்கும்போது ‘பி.ஏ.சைக்கலாஜி’ என்று குத்துமதிப்பாகச் சொன்னாள். எதனால் அதன் மீது அவளுக்கு ஆர்வம் என்று ஒரு சாதாரண கேள்வியைத்தான் கேட்டேன். சரியான விளக்கமில்லை.
“பி.காம் படிப்புதான் மிடில் கிளாஸ் குடும்பங்களின் குலதெய்வ படிப்பு. அதில் சேர். படித்து சம்பாதிக்க ஆரம்பித்து, பிறகு உனக்கு விருப்பமான கல்வியில் ஆர்வம் செலுத்து” என்று ஒரு வழக்கமான தகப்பன் செய்யும் அராஜகமான ஆனால் பிராடிக்கலி உபயோகமாக இருக்கிற விஷயத்தைத்தான் நானும் செய்யப் போகிறேன்.
‘நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணிக்கு விருப்பம் தெரிவித்த இளைஞனுக்கு ப்ரீ புரெடெக்ஷன், போஸ்ட் புரெடெக்ஷன் என்கிற துறை சார்ந்த அடிப்படை வார்த்தை கூட தெரியவில்லை. ‘வீடியோ கேம் ஆடி சம்பாதிப்பேன். அமெரிக்காவில் கேம் டிசைனிங் படிக்கப் போகிறேன். எழுபது லட்சம் வேணும்” என்று அசால்ட்டாக கேட்கிற இளைஞனுக்கு அதில் முன்னணி நிறுவனங்களின் பெயர் கூட தெரியவில்லை.
பணியில் இணைந்தவுடன் மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்கிற கனவுடன்தான் பலரும் இருக்கிறார்கள். அதற்கான தகுதி தம்மிடம் இருக்கிறதா என்று யோசிக்கவில்லை.
தகவல் நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட, +2 முடித்திருக்கும் ஒரு மாணவனிடம் ‘அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டால், மிக அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து பெரும்பாலோனோருக்கு தெளிவாகப் பதில் சொல்லத் தெரியாது.
இத்தனைக்கும் கணிசமான இணைய வீடியோக்கள், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள், கரியர் கவுன்சிலிங் என்று பல வசதிகள் வந்து விட்டாலும் இதுதான் நிலைமை.
ஒரு சமூகமாக நாம் இன்னமும் முன்னேறவேயில்லை என்பதுதான் இதன் பொருள்.
இதற்கு மாணவர்களை மட்டுமே குற்றம் சொல்லி உபயோகமில்லை. பெற்றோர், ஆசிரியர், சமூகம் என்று அனைவரிடமும் இந்தப் பின்னடைவிற்கு பங்கிருக்கிறது.
ஒரு மாணவன் பத்தாவது முடித்துவிட்டு உயர்கல்வியை நோக்கி நகரும்போதே அவனால் எந்தத் துறையில் முன்னேற முடியும், அவனுக்கான தனித்தனமை என்ன. ஆர்வம் என்ன என்பதை அலசி ஆராயும் முறை கல்வித்திட்டத்திலேயே இருக்க வேண்டும். ஆசிரியரும் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் மாணவனும் கலந்து உரையாடி அதைத் தீர்மானிக்கும்படியாக இருக்க வேண்டும்.
வெறும் ஆர்வம் இருப்பது மட்டுமல்ல, அவன் இறங்கவிருக்கும் துறையில் நியாயமான கல்விக் கட்டணம், பணிவாய்ப்பு போன்றவைக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.
சிறந்த குடிமகன்களை உருவாக்குவது அரசாங்கத்தின் அஜெண்டா மட்டுல்ல, பள்ளி, ஆசிரியர், பெற்றோர், மாணவன் என்று இணைந்து இழுக்கும் தேர் இது. அப்போதுதான் ஆரோக்கியமான அறிவுச்சமூகம் உருவாகும். இல்லையென்றால் நாம் இன்னமும் பல நூற்றாண்டுகளுக்கு ‘பாஸ் என்கிற பாஸ்கரனாகவே’ நீடித்துக் கொண்டிருக்கும் அவலம் மட்டும்தான் எஞ்சும்.
– நன்றி: முகநூல் பதிவு