ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

தற்போது 3 கட்டங்களைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல். சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை நடந்திருக்கிற தேர்தலில் இல்லாத அளவுக்கு தற்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த விமர்சனங்கள் அதிகப்பட்டிருக்கின்றன.

வாக்குப்பதிவு எந்திரங்களைக் கையாள்வது குறித்தும் சில சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. 

வட மாநிலங்களில் சில பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்தும் அளவுக்கு வன்முறை நடந்தேறியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் பரப்புரையில் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எவையெல்லாம் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததோ, அவற்றையெல்லாம் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்களே சர்வ சாதாரணமாக தாண்டிப் போகிறார்கள்.

இத்தகையை மரபு மீறல்களை ஊடகங்கள் வெளிப்படுத்தினாலும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. 

இறுதிக்கட்ட தேர்தல் நடக்கும்வரை இத்தகைய சர்ச்சையும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டு இருப்பதைத் தவிர்க்க இயலாது. 

சரி, ஜூன் 4-ம் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு எப்படிப்பட்ட நிலைமை இருக்கும்?

எப்படியும் பாஜக அதிகப்படியான எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெற்றுவிடும் என்பது பரவலாக ஊடகக்காரர்களின் பொதுக் கருத்தாக இருக்கின்றது. 

இரண்டாவதாக அவர்கள் குறிப்பிடுவது எப்படியும் 230 இடங்களைத் தனித்து பாஜக பெற்றாலும் இதர கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சுலபமாக ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

மத்தியில் ஆளும்கட்சியின் பலத்தைவிட எதிர்க்கட்சிகளின் சரிவர ஒன்றிணையாத பலவீனம் தான் பாஜகவிற்கு கூடுதல் மதிப்பைப் பெற்றுத்தந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் தங்களுக்குரிய இடத்தை சரிவர நிரப்பவில்லை என்கின்ற எண்ணமும் பரவலாக இருக்கின்றது.

அதாவது, வாக்காளர்கள் மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக ஓர் அணியை வலுவுடன் உருவாக்குவதில், எதிர்க்கட்சிகள் சரிவரச் செயலாற்றவில்லையோ என்பதும் பரவலான கருத்தாக இருக்கின்றது. 

இதுவரை இல்லாத அளவுக்கு மதம் சார்ந்த பேச்சுக்கள், நிறப்பாகுபாடு குறித்த பேச்சுக்கள் என்று இதுவரை தேர்தல் பரப்புரை வரலாற்றில் சந்திக்காத பல பிரச்சனைகளை நடந்து கொண்டிருக்கும் தேர்தல் சந்தித்திருக்கிறது. 

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் போன்ற விஷயங்கள் இந்த தேர்தல் பரப்புரையில் பின்தங்கிப் போய்விட்டன. அதேசமயம் மக்களிடம் தேர்தலையொட்டி நடந்த பல்வேறு கருத்துக் கணிப்பில் வேலைவாய்ப்பின்மையும் பொருளாதார நலிவும்தான் மக்களின் அத்தியாவசிய தேவையாக இருந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட தேவைகளை ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அப்படிப்பட்ட தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

-யூகி

#வாக்குப்பதிவு_எந்திரங்கள் #வாக்குப்பதிவு #தேர்தல் #நாடாளுமன்றத்_தேர்தல் #தேர்தல்_ஆணையம் #பாஜக #வாக்காளர்கள் #எதிர்க்கட்சிகள் #vote_machine #voting #polling #election #lok_sabha_election #election_commission #bjp #voters #opposite_party

You might also like