நூல் அறிமுகம்:
நூலின் பெயரும், அட்டைப்படமும் பார்த்த உடனே வாசிக்க வேண்டும் எனும் ஒரு ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்தும்.
ஆசிரியராக பணியாற்றும் சாந்தசீலா அவர்கள் குழந்தை மையக் கல்வியை வலியுறுத்தி, அதை தன் வகுப்பறையில் கடைபிடிக்கும் ஒரு ஆசிரியர்.
புயலும், மன அழுத்தமும் நிறைந்த வளரிளம் பருவ குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக நின்று இந்த நூலில் பேசி இருக்கிறார் ஆசிரியர்.
பெண் கல்வியில் ஓரளவு முன்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகத்தின் கற்பிதங்களால் பெரும்பாலும் பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு அடக்கி ஒடுக்கி வளர்க்கப்படுகிறார்கள்.
அந்தக் கற்பிதங்களை உடைத்து, பெண் கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தி, அறிவியல் பூர்வமான புரிதல்களை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம பங்கு இருக்கிறது. அதைத்தான் நூல் எங்கும் ஆசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.
பருவ வயது அடையும் வரை சுதந்திரமாக ஒரு பறவையைப் போல் இருந்த பெண் குழந்தை அவள் உடலில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் மனதளவில் குழப்பம் அடைகிறாள்.
அதோடு இந்தச் சமூகமும் அவள் எப்படி சிரிக்க வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி உடை உடுத்த வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்று அவளுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணித்து தொடர் அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் குறைவு. பாலின சமத்துவத்தை இரு குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டுமென்றால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதுபோன்ற நூல்களை வாசிக்க வேண்டும்.
பெண் சுதந்திரம் சார்ந்த பார்வை, மாதவிடாய் சிறுநீர் கழித்தல் போன்ற அவளது ஆரோக்கியம் பற்றிய அவசியம், கருப்பு நிறம் பற்றிய கற்பிதங்களை உடைப்பது, பெண்ணின் உடை பற்றிய புரிதல், சமூகத்தில் பெண்ணை இழிவுபடுத்தும் பொட்டை போன்ற வார்த்தைகளை எவ்வாறு கடப்பது, ஒரு வகுப்பறையில் சமத்துவத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைப் பற்றி எல்லாம் இலகுவான முறையில் உரையாடல் நடையில் ஆசிரியர் தந்திருக்கிறார்.
அதோடு தன் உடம்பை நேசிக்கவும், தவறான தொடுதல்கள் நிகழும்போது எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்வது அப்படி நடந்துவிட்டால் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது பற்றி எல்லாம் விரிவாக இந்த நூல் பேசுகிறது.
வளரிளம் பருவத்தில் அவர்களின் உடல் மட்டுமல்ல மனமும் மிக வேகமாக வளர்ச்சியடைகிறது.
தாங்கள் யார் என்று ஒரு சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள மனம் முயலும்.. அப்படி முயலும்போது ஆழமான கேள்விகளும் மன உளைச்சல்களும் குழப்பங்களும் கண்டிப்பாக ஏற்படும். இதனை அடையாள சிக்கல் என்று உளவியலாளர் எரிக்சன் குறிப்பிடுவார்.
இந்த அடையாளச் சிக்கலை தீர்த்து வைக்க ஒரு பெற்றோராக, ஒரு ஆசிரியராக இல்லாமல் அவர்களைப் புரிந்து கொண்ட ஒரு தோழமையாய் பயணிக்க, நாங்கள் வாயாடிகளே போன்ற நூல்கள் கட்டாயம் துணை நிற்கும்.
இதுபோன்ற நூல்களை வாசிப்போம் வகுப்பறையிலும் வீடுகளிலும் உரையாடல்களை தொடங்குவோம்.
*****
நூல் : நாங்கள் வாயாடிகளே
ஆசிரியர் : சாந்த சீலா
பதிப்பகம் : HER Stories
பக்கங்கள் : 130
விலை : 160.00