காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
இயக்குநர் கே. பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டில் அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
42 வருட திரைப்பயணத்தில் கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கிறீர்களே, எப்படி?
நான் முரண்பாடுகளைத் தவிர்த்துவிடுவேன். கழுவுற மீனில் நழுவுற மீன் இல்லை நான். நல்லெண்ணமே, சமூகத்தை உருவாக்கும். இன்னொரு நடிகரின் வீழ்ச்சி எனது வளர்ச்சி ஆகாது. சக நடிகர்கள் பற்றிய பிடிக்காத விஷயங்களையும் மற்றவர்களிடம் பகிரமாட்டேன். மற்றவர்களை விமர்சிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
வாய்ப்பைத் தவறவிட்டு பின்னர் வருத்தப்பட்ட படங்கள் இருக்கிறதா?
வருத்தப்பட்டது கிடையாது. எனது பயணம் நெடிய பயணம் அல்ல. இனிய பயணம். பிடித்த வேலை என்றுமே நம்மை களைப்படையச் செய்யாது.
நகைச்சுவை தாண்டி, இப்போது குணச்சித்திர வேடங்களிலேயே நடித்து வருகிறீர்களே… என்ன காரணம்?
டிரெண்டுக்கு ஏற்றபடி அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறித்தான் ஆகவேண்டும். நான் இப்போது காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடிக்க முடியுமா? அதைவிட பைத்தியக்காரத்தனம் இருக்குமா? டிரெண்டுக்கு ஒத்துப் போவதுதான் வளர்ச்சி.
அப்படி என்றால் ஹீரோவாக நடிக்கலாமே…
ஹீரோவாக நடிப்பது மிகவும் கடினமான பணி. ஒட்டுமொத்த படத்தின் பொறுப்பும் ஹீரோவின் தோளில் தான் இருக்கிறது. நான் ஹீரோவாக நடிக்கவில்லை. எனக்கு ஏற்றபடி மைய கதாபாத்திரங்கள் தருகிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி.
நான் ஹீரோவாக நடிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. அதற்கான கதாபாத்திரங்கள் இன்னும் டைரக்டர்களால் உருவாக்கப்படவில்லை. டைரக்டர்களுக்கு வேண்டுமானால் நான் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் எனக்கு கதை தான் எப்போதுமே ஹீரோ.
திடீரென்று படிப்பில் நாட்டம் காட்டுவது ஏன்?
நான் பல ஆண்டுகளாக புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலையின் வேண்டுகோளை ஏற்று, அங்கு ஆய்வு மாணவராக இணைந்தேன். முனைவர் பட்டமும் பெற்றேன். படிப்பு என்பது என்னை நானே எளிமைப்படுத்திக் கொள்ளும், வலிமைப்படுத்திக் கொள்ளும் ஆயுதமாகவே பார்க்கிறேன்.
எந்த விஷயத்தில் நம்பிக்கையாக இருக்கிறீர்கள்?
கூடுமானவரை இன்னொருவரை என்னுடைய சுயநலத்துக்காக ஏமாற்ற விரும்பாதவன். இப்படி நான் இருக்கும்போது, அடுத்தவர்கள் நிச்சயம் என்னை ஏமாற்ற மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.
குடும்பம் பற்றி சொல்லுங்க…
எனது பெற்றோர் இருவருமே கோவில்பட்டியில் ஆசிரியர்கள். 3 தங்கைகள், ஒரு தம்பி.
எனக்கு அன்பான மனைவி, 2 பாசமான மகன்கள்.
மூத்தவருக்கு திருமணமாகிவிட்டது. இளையவருக்கு ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.
திருப்புமுனை ஏற்படுத்திய படம் எது?
‘நியாயத் தராசு’ படம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம். காரணம், அந்த படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. எனக்கு திருப்பு முனைத்தந்த படம் அது.
– நன்றி: தினத்தந்தி
#நடிகர்_சார்லி #Actor_Charlie #Actor_Charlie_interview #நியாயத்_தராசு #niyaya_tharasu_movie #கலைஞர்_கருணாநிதி #kalaignar_karunanithi