ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம்
நடனம் என்பது அறுபத்து நான்கு வகை கலைகளில் ஒன்று என்கின்றன நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற குறிப்புகள். அதேநேரத்தில், கடந்த நூற்றாண்டு வரை நடனமாடுதல் என்பதையே புறக்கணிக்கத்தக்கதாகக் கருதி வந்தது இந்தியச் சமூகம்.
பாரம்பரியம் சார்ந்த நடன வகைகளாக இருந்தாலும், மேற்கத்திய தாக்கத்தில் விளைந்ததாக இருந்தாலும், இரண்டும் கலந்த நவீன பாணியானாலும், ஒருகாலத்தில் அவற்றை ரசிப்பதற்கும் பங்கேற்பதற்கும் சிலரே தயாராக இருந்தனர். இன்று, அந்த நிலை மாறியிருக்கிறது.
அதில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் பங்கு மிக அதிகம். அதன் வழியே, நடனமாடுதல் என்பது குடும்பம் சார்ந்த கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
கூடவே, மகிழ்ச்சிக்கான ஆதார வேர் ஆகவும் நடனமாடுதல் கருதப்படுகிறது. இது எப்பேர்ப்பட்ட மாற்றம்!
மனதின் வெளிப்பாடு!
கிராமியக் கலைகளாக அடையாளப் படுத்தப்படுகிற கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், கெக்கலிக்கட்டை ஆட்டம் தொடங்கி பரதநாட்டியம், கதகளி, கதக், குச்சுப்புடி உள்ளிட்ட பெரிதாக விளம்பரப்படுத்தப்படுகிற நடனக்கலைகள் வரை அனைத்துமே நம் உடலசைவுகளையும் முகபாவனைகளையுமே பிரதானப்படுத்துகின்றன.
அதிலுள்ள நெளிவுசுளிவுகளும் நளினமும் நேர்த்தியுமே சிறந்த கலைஞர்களை அடையாளம் காணச் செய்கின்றன.
எந்த நடனமானாலும், அதனை ஆடுபவர் முகத்திலோ, உடலிலோ தளர்ச்சி தெரியக்கூடாது. சோர்வையும் மீறிய புத்துணர்ச்சியும் உற்சாகமும் பொங்கி வழிய வேண்டும். காண்பவரிடத்தில் அந்த மகிழ்ச்சி தொற்றும் அளவுக்கு, அவர்களது கலை வெளிப்பாடு இருக்க வேண்டும்.
அது எப்போது நிகழும்? மனதின் ஆழத்தில் இருந்து அந்தக் கலை வெளிப்பட்டால் மட்டுமே, அது பார்ப்பவரிடத்தில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நடனம் மட்டுமல்லாமல் ஓவியம், இசை, நடிப்பு, எழுத்து என்று எந்த ஒன்றுக்கும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம்.
அதனாலேயே நடனத்தில் வெளிப்படுத்தப்படும் துயரும் மகிழ்ச்சியும் எளிதாகப் பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. அதனை நிகழ்த்துகிற கலைஞர்கள் கொண்டாட்டத்திற்கு உரியவர்களாகின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், இன்று பல நடனப் பயிற்சி வகுப்புகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடும்போது ‘சிரித்துக்கொண்டே ஆட வேண்டும்’ என்பது தாரக மந்திரமாகச் சொல்லப்படுகிறது. ஆடும்போது பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதும் அந்த பால பாடங்களில் ஒன்று.
கலைஞன் தன் மனதில் இருந்து வெளிப்படுத்துவதை, எளிதாகப் பார்வையாளர்கள் பெற வேண்டும் எனும் நோக்கத்தினை அதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஆடுவோம் நடனம்!
இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் போர்க்களமாகவே நமக்குக் காட்சியளிக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையில் விழுவது வரை அனைத்திலுமே நாம் வெற்றி அடைந்தாக வேண்டும்.
ஒவ்வொருவரும் அப்படி நினைக்கும்போது, பதற்றமும் பதைபதைப்பும் இந்தப் பிரபஞ்சத்தில் கலந்து விடுகிறது.
அதனைக் கையிலேந்தியபிறகு, ஒலிம்பிக் சுடர் போல உலகைச் சுற்றி வந்து தீ மூட்ட வேண்டியதுதான் பாக்கி. அதனாலேயே யோகா, தியானம் உள்ளிட்ட மனதை அமைதிப்படுத்தும் வழிமுறைகளுக்கு ஏக கிராக்கி.
எல்லோராலும் அது போன்ற வழிமுறைகளைக் கைக்கொள்ள முடியாது.
அவற்றைக் கற்க இயலாதவர்கள் சினிமா பாடல்களைக் கேட்டும் பாடியும், மற்றவர்களோடு கதைகள் பேசியும், ட்ராபிக் சிக்னல் உள்ளிட்ட பல இடங்களில் தனது அதிகாரத்தைக் காட்டும்விதமாக அத்துமீறி அரசியல் செய்தும் மனதைச் சமநிலையில் வைக்க முயற்சிக்கின்றன. சில நேரங்களில் அவ்வழிமுறைகளே கூட மனதை அமைதியற்ற நிலைக்கு ஆளாக்குதும் உண்டு.
அதிலிருந்து தப்பித்து மனதை நலத்துடன் பேணப் பல பராக்கிராமங்கள் செய்தாக வேண்டும் என்பதே உண்மை. நடனமாடுதல் அதனை எளிதாகச் சாத்தியப்படுத்தும்.
காலையிலும் சரி, மாலையிலும் சரி; உங்களுக்குப் பிடித்தமான இசைக்கு, உங்களுக்குப் பிடித்தமான வகையில் ஒருமுறை நடனமாடிப் பாருங்கள். அடுத்த நாள், தானாகக் கைகளும் கால்களும் நடனமாட வேண்டுமென்ற விருப்பத்தை நோக்கி நகரும்.
முழுதாக நடனமாடி முடித்தபிறகு, நம்முள் ஒருவித திருப்தி உருவாகும். அது இந்த உலகில் மானுடர்கள் அனுபவிக்கும் சுகங்களின் உச்சமாகத் தெரியும்.
அது நிகழ்ந்தபிறகு, நிகழ்காலக் கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனித்துளியாக மாறியிருக்கும். மனம் மட்டுமல்ல; உடலையும் அது புத்துணர்வு பெறச் செய்யும்.
எடைக்குறைப்புக்காக உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மேற்கொண்டு, அதனாலேயே பல மன அழுத்தங்களுக்கு ஆளாகும் மனிதர்கள் வெறுமனே நடனத்தை பின்பற்றினாலே போதும். உடல் நெகிழ்ச்சியாகவும் இலகுவானதாகவும் மாறிப்போனதை உணர முடியும். இன்று பலரும் ‘ஏரோபிக்’ வகுப்புகளை நோக்கி திசை திரும்பக் காரணம் இதுவே!
நடனத்தைக் கொண்டாடுவோம்!
நடனம் என்பதே ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்குவதற்கான வழிமுறை. சைவ மரபில், சிவன் நடனமாடுவதைத் ‘தாண்டவம்’ என்று குறிப்பிடுகின்றனர்.
அதாகப்பட்டது, உலகின் கவலைகளையும் வருத்தங்களையும் தன்னுள் ஏந்திக்கொண்டு ருத்ர நிலையை அடைகிற இறைவன், அந்த நஞ்சினை அமுதமாக மாற்றுவதற்கான வழிமுறையாக நடனத்தைக் கைக்கொண்டிருக்கிறார் என்பதே அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது.
கிட்டத்தட்ட கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிக்கொண்டு விருட்சங்கள் ஆக்சிஜனை தருவதைப் போன்றது அந்தக் கருத்து.
அப்படிப்பட்ட நடனத்தின் மாண்பை நாம் அனைவரும் அறியவும், அதனைக் கைக்கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு உணர்த்தவும் ‘சர்வதேச நடன தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
நவீன பாலே நடனத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற ஜான் ஜார்ஜஸ் நூவோ ஆற்றிய பங்களிப்பினைப் போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச நிகழ்த்துகலை நிறுவனத்தின் நடனப் பிரிவே இக்கொண்டாட்டத்திற்கு விதை போட்டது. 1982-ம் ஆண்டு முதல் இது உலகம் முழுக்கப் பின்பற்றப்படுகிறது.
அத்தகைய சிறப்புமிக்க நடனத்தின் ஒவ்வொரு கிளையையும் நம்மால் பற்ற முடியாது. ஆனால், கைக்கு அகப்படும் கிளைகளைப் பற்றி மானுட மகிழ்ச்சியின் சிகரத்தை எட்ட முடியும். அதனை அடைவதற்கான ஊக்கப்பொருளாகவும் கூட நடனத்தைக் கருத முடியும்.
நடனம் குறித்த விளக்கங்களைப் பல திசைகளில் இருந்தும் பெறும்போது, ’பாரம்பரிய வழக்கம்’ என்ற பெயரில் அமிர்தத்தைத் தினசரி வாழ்வில் பயன்படுத்தவிடாமல் சிலர் செய்த சதியை நம்மால் உணர முடியும்.
அவர்களைப் பொருட்படுத்தாமல், நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!
– உதய் பாடகலிங்கம்
#கரகாட்டம் #ஒயிலாட்டம் #மயிலாட்டம் #கோலாட்டம் #கெக்கலிக்கட்டை #சர்வதேச நடன தினம் #பரதநாட்டியம் #கதகளி #கதக் #குச்சுப்புடி #karakaatam #oyilattam #mayilattam #kolattam #bharatham #kathakali #kathak #kuchupudi #International_Dance_Day_2024