பாஜக பெண் வேட்பாளரிடம் ரூ.1,400 கோடி!

லண்டன், துபாயில் வீடுகள்!

கோடிகளை வைத்திருப்போருக்கே இனிமேல் மக்களவையில் இடம் என்பது இந்தத் தேர்தலில் நிரூபணம் ஆகி விட்டது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், கோடீஸ்வரர்களாகவே இருக்கிறார்கள்.

தெற்கு கோவா தொகுதியில் பல்லவி என்ற பெண்ணுக்கு பாஜக டிக்கெட் கொடுத்துள்ளது. அவரது கணவர் ஸ்ரீனிவாஸ், பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.

ரியல் எஸ்டேட் முதல் சுரங்கம் வரை, கப்பல் கட்டுதல் முதல் கல்வித்துறை வரை அனைத்திலும் பணத்தைக் கொட்டியுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பல்லவி, தனக்கும், தனது கணவருக்கும் 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த சொத்துக்கள் எங்கெங்கே உள்ளது என, 119 பக்கங்களில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளார்.

சராசரி பெண்களை போன்று தங்க நகைகள் மீது பல்லவிக்கும் அலாதி பிரியம் உண்டு. அவரிடம் உள்ள நகைகளின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய்.

லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இவருக்கு ‘அபார்ட்மெண்ட்’ உள்ளது. விலை ரூ.10 கோடி.
துபாயிலும் ஒரு ‘அபார்ட்மெண்ட்’ உள்ளது. அதன் மதிப்பு இரண்டரை கோடி ரூபாய்.

பல்லவியின் கணவர் ஸ்ரீனிவாசுவுக்கு தமிழ்நாட்டிலும் விவசாய நிலம் உள்ளது. இதனை தனது பிரமாணப் பத்திரத்தில் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கடிதம்

இதனிடையே நாளை முதல் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ளூம் பாஜக வேட்பாளர்களுக்கு, பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ’’நீங்கள் ஒவ்வொருவரும் எனது மிகப்பெரிய சொத்து – வெயிலை பொருட்படுத்தாமல் ஓட்டளிக்க வருமாறு வாக்காளர்களை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் – இது சாதாரணமான தேர்தல் அல்ல என்பதை வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் – கடந்த 50 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் அடைந்த துயரங்களை அவர்களுக்கு நினைவு கூறுங்கள்” என அந்த கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தங்கச் சுரங்கத்தில் ராகுல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், சின்ன வயதில், கோலார் தங்கச் சுரங்கத்தினுள் சென்று, தங்க கற்களைப் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

”என்னுடைய சிறிய வயதில், என் பாட்டி இந்திராகாந்தியுடன், நான் கோலார் தங்கவயலுக்கு வந்துள்ளேன் – அப்போது அவருடன் தங்கச்சுரங்கத்திற்கும் சென்றுள்ளேன் – அங்கு தங்க கற்களைப் பார்த்தேன் – அந்த சுரங்கத்தின் மூலம் கோலார் தங்கவயல் செழிப்பாக இருந்தது – தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலாளர்களுடன் பேசினேன் – அந்த நினைவுகள் இப்போதும் எனக்குள் நிழலாடுகிறது” என்று ராகுல் குறிப்பிட்டார்.

– பி.எம்.எம்

#பாஜக #ராகுல்காந்தி #இந்திராகாந்தி #கோலார்_தங்க_வயல் #தெற்கு_கோவா_தொகுதி #பல்லவி #மோடி #BJP #Goa_candidate #Pallavi #indiragandhi #rahul_gandhi #kolar_gold_mine

You might also like