ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்துடன் சேர்த்து மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகளில் 1 தொகுதிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தங்களுக்கு தேர்தலே வேண்டாம் என்று ஒரே நேரத்தில் அங்குள்ள குக்கி மற்றும் மெயிட்டி இனத்தவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
பல்வேறு விஷயங்களிலும் கருத்து மோதல் கொண்டிருக்கும் மெயிட்டி மற்றும் குக்கி இன மக்கள், தேர்தல் வேண்டாம் என்ற விஷயத்தில் மட்டும் ஒரே குரலை எழுப்பி வருகிறார்கள்.
மணிப்பூரில் ஏற்பட்ட இன மோதலால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிற்கும் தற்போதைய சூழலில் தேர்தல் நடத்துவது சரியல்ல என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
தேர்தலில் வாக்களிப்பதால் தங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.
இனக்கலவரத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டு, இப்போது அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் குக்கி இன மக்கள், “கடந்த பல ஆண்டுகளாக குக்கி இன மக்கள் பெருமளவில் வசிக்கும் வனப்பகுதியில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக மெயிட்டி இன மக்கள் அதிகம் வசிக்கும் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எங்களுக்கென்று தனி நிர்வாகத்தையும், தனிப் பகுதியையும் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் எங்களின் பிரச்சினைகள் தீரும். ஆனால் அப்படி செய்யாமல் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் வாக்களிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தத் தேர்தலை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குக்கி இன மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள்.
குக்கி இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர்கூட இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. பழங்குடி இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதியில் குக்கி இனத்தவர் நிற்காததால் நாகா இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
இந்தத் தொகுதியில் 3.21 லட்சம் குக்கி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குக்கி இன மக்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான லைனிலாம் இதுபற்றிக் கூறும்போது, “கடந்த ஓராண்டாக குக்கி மற்றும் மெயிட்டி இன மக்களிடையே எந்தவித தொடர்பும் இல்லை. இரு சமூக மக்களும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதில்லை. எந்த செயலையும் இணைந்து செய்வதில்லை.
குக்கி இன ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்தால் படிக்க மாட்டோம் என்று மெயிட்டி இன மாணவர்களும், மெயிட்டி இன ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தால் படிக்க மாட்டோம் என்று குக்கி இன மாணவர்களும் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு இரு பிரிவு மக்களிடையேயும் பிரிவினை அதிகரித்துள்ளது.
கலவரத்தின்போது தங்கள் பகுதியை வீடு துரத்தப்பட்டு தற்போது அகதிகள் முகாமில் வாழும் மக்கள், தங்கள் சொந்த பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் தீர்வு காணாமல் அவர்கள் மக்களவைத் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேட்பது மட்டும் என்ன நியாயம்” என்கிறார்.
குக்கி இன மக்களின் அதே மனநிலையில்தான் மெயிட்டி இனமக்களும் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராக குக்கி இன மக்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏராளமான மெயிட்டி இன மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக அவர்கள் கோபத்துடன் கூறுகிறார்கள்.
“எங்களின் வாழ்க்கைத் தரம் 20 ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது. எங்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் வழியை யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை.
ஆனால் வாக்குகளை மட்டும் கேட்டு வருகிறார்கள். இந்த முறை நாங்கள் யாரும் ஓட்டு போட மாட்டோம்” என்பது பெருவாரியான மெயிட்டி இன மக்களின் குரலாக இருக்கிறது.
மெயிட்டி இன மக்களின் டெல்லி பிரிவான The Delhi Meitei Coordinating Committee (DMCC), தலைமை தேர்தல் ஆணையருக்கும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் ஒரு கடிதத்தை சமீபத்தில் அனுப்பியிருக்கிறது.
மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் இப்போதைக்கு மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதையெல்லாம் மீறி மணிப்பூரில் தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தங்கள் வீடுகளைவிட்டு அகதிகள் முகாமில் வாழும் சுமார் 24 ஆயிரம் மக்களுக்காக, அந்த முகாம்களில் சுமார் 94 வாக்குச் சாவடிகளை அமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தேர்தல் நடப்பதற்கான எந்தவித சுவடும் மாநிலத்தில் தெரியவில்லை. வேட்பாளர்களின் பிரச்சாரத்தையும், அரசியல் தலைவர்களின் பொதுக்கூட்டங்களையும் அதிகமாக காண முடியவில்லை.
கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக அதிகமாக 82 சதவீத மக்கள் மணிப்பூரில் வாக்களித்தனர். ஆனால் இப்போதைய சூழலில் அதில் பாதி பேர்கூட வாக்களிக்க வருவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.
மக்களின் எதிர்ப்பை மீறி மணிப்பூரில் தேர்தல் அமைதியாக நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– ரெஜினா சாமுவேல்