எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்!

தாமிரபரணி நதிக்கரையில் மோடி பெருமிதம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் ஏற்கனவே 7 முறை பிரச்சாரம் செய்துள்ளார்.

இந்நிலையில் 8-வது முறையாக அவர் நேற்று தமிழகம் வந்தார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இந்த வீரபூமியில் விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மோடி அறிமுகம் செய்தார்.

அப்போது உரை நிகழ்த்திய அவர், நாட்டு விடுதலைக்காக போராடிய தென் மாவட்ட தலைவர்களை நினைவு கூர்ந்தார்.

மெய் சிலிர்க்க வைக்கும் நெல்லை

“இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும் தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது – மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் போன்றோர் எப்பேர்ப்பட்ட துணிச்சல் மிக்கவர்கள்?

இவர்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்துப் போராடினர் – இவர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இல்லை – அவர்களுக்கு நாட்டின் நலன் தான் முக்கியம் – அதேபோல், சுதந்திர போராட்ட காலத்தில், நேதாஜியின் படையில் சேருவதற்கு, முத்துராமலிங்கத் தேவர் அழைத்ததும்,

இந்தப் பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் சென்றார்கள் – இவர்களின் கனவு எல்லாம், இந்தியா வலுவான, வளமான நாடாக மாற வேண்டும் என்பது தான் – அதுபோலவே, தற்போது இந்தியா இன்று மதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

காமராஜர்- எம்ஜிஆர்

காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களையும், தனது பேச்சில் குறிப்பிட மோடி தவறவில்லை.

“காமராஜர், தேசப் பக்தியும் நேர்மையும் கொண்ட மாபெரும் தலைவர் – அவரை பின்பற்றி தூய்மையான அரசியலை பாஜக இன்று முன்னெடுத்து செல்கிறது – ஆனால், காங்கிரஸும் திமுகவும் காமராஜரைத் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது.

எங்களின் லட்சியம் தூய்மையான அரசியல் – தூய்மையான அரசியலே எம்ஜிஆரின் லட்சியம் – எம்ஜிஆர் கனவுகளை தமிழகத்தில், பாஜக முன்னெடுத்துச் செல்கிறது – ஆனால் அவரது பாரம்பரியத்தை திமுக அவமதிக்கிறது.

ஜெயலலிதாவை திமுக நடத்திய விதம் – சட்டசபையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விதத்தை மறக்க முடியாது’’ என்று பழைய சம்பவங்களை மோடி நினைவு கூர்ந்தார்.

கச்சத்தீவை தாரை வார்த்த திமுக – காங்கிரஸ்

நெல்லைக்கு சற்று தொலைவில் உள்ள கச்சத்தீவு விவகாரத்தையும் பிரதமர் மோடி, தனது பேச்சில் குறிப்பிட்டார்.

“திமுக, காங்கிரஸ் பல்வேறு தேச விரோத செயல்களை செய்துவந்தன – கச்சத்தீவை வேறு நாட்டுக்கு தாரைவார்த்தார்கள் – இவர்கள் இருவரும், தமிழ்நாட்டின் உயிர்நாடியான கச்சத்தீவை நம்மிடம் இருந்து துண்டித்து வேறு நாட்டுக்கு கொடுத்தனர்.

திமுகவும், காங்கிரசும் ரகசியமாக, திரைமறைவாக செய்த இந்த வரலாற்று பிழை மன்னிக்கவே முடியாத பாவம் – அவர்கள் செய்த பாவத்துக்காக, தமிழக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் – அவர்கள் செய்த இந்த தேசத் துரோகத்தை சமீபத்தில் பாஜக தான், ஆவணங்களுடன் அம்பலப்படுத்தியது” என்றார் மோடி.

எச்சரிக்கை விடுத்த மோடி

தமிழகத்தில் பலமுறை பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திமுகவையும், காங்கிரசையும் வசைபாடி சென்றுள்ளாரே தவிர தமிழக அரசுக்கு எச்சரிக்கை ஏதும் விடுத்ததில்லை.

ஆனால், அகஸ்தியர்பட்டி பொதுக்கூட்டத்தில், போதைப்பொருள் விவகாரத்தைத் தொட்டு பேசிய மோடி, திமுக அரசுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுத்தார்.

“தமிழகம் இன்றைக்கு போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது – குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள் – அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியுடன் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது.

போதைப்பொருள் என்கிற விஷம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது – போதைப்பொருள் மாஃபியா யாருடைய பாதுகாப்பில் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போதைப்பொருளை இந்த தேசத்தைவிட்டு ஒழிப்பேன்” என பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்தார்.

“இந்தக் கூட்டம் தான் தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்காக நான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம் – இன்னொரு முறை உங்களை வந்து சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை’’ என்று கூறி மக்களிடம் இருந்து விடை பெற்றுச்சென்றார் பிரதமர்.

– பி.எம்.எம்.

You might also like