திறமையாளர்களை ஊக்குவிக்கும் திருக்குறள் குறும்படப் போட்டி!

‘முதல் மொழி’ அமைப்பு சென்னை கவிக்கோ மன்றத்தில்நடத்திய ஐந்தாம் ஆண்டு விழாவில் திருக்குறள் குறும்படப் போட்டியின் இறுதி சுற்றுத் தேர்வு நடைபெற்றது.

இயக்குனர்கள் அஜயன் பாலா, பாஸ்கர் சக்தி ஆகியோருடன் நானும் நடுவராக இருந்து பரிசுக்குரிய மூன்று திரைப்படங்களை மூவருமாகச் சேர்த்து தேர்ந்தெடுத்தோம்.

பத்திரிகையாளர் சமஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘முதல் மொழி’ ஆண்டு மலர் மற்றும் இரண்டு நூல்களை வெளியிட்டு ‘மொழியும் அரசியலும்’ குறித்து அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார்.

விழா மிகவும் சிறப்பாகவும் அரங்கம் நிறைந்தும் நடைபெற்றது. 167 பேர் குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு திருக்குறள் கருத்துகளை குறும்படங்களாக உருவாக்கி இருந்தார்கள்.

கால் இறுதி, அரையிறுதி என வரிசையாகத் தேர்வு செய்யப்பட்டு கடைசியில் பத்து படங்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருந்தன. அனைத்துமே சிறப்பானவைதான். என்றாலும் பரிசுக்குரிய புரிய மூன்று படங்களைத் தேர்வு செய்வது கடினமாக இருந்தது.

ஒரு விவாதத்துக்குப் பிறகு மூவரும் ஒத்த கருத்துக்கு வந்து மூன்று படங்களை வரிசைப்படுத்தினோம். அவை ஞாழல், தூண்டில், புறப்பாடு என்ற மூன்று.

பரிசளிப்பு விழாவுக்கு அவ்வளவு இளைஞர்கள் திரண்டு வந்திருந்தார்கள். இளைஞர்கள் இவ்வளவு பேர் திருக்குறளைப் படித்து அதைத் திரைக்கதையாக மாற்றி குறும்படங்களாக உருவாக்கி இருப்பது பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொறியியல் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ‘முதல் மொழி’ அமைப்பு தமிழ் மொழி, பண்பாடு, அறிவியல் தமிழ் என்று பல தளங்களில் சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்துவரும் அதே வேளையில் இவ்வாண்டு முதல் குறும்படப் போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.

இது நிறைய இளைஞர்களை திரைப்படத்துறைக்கு அழைத்து வருவதோடு தமிழ் இலக்கியங்கள் மீதான அக்கறையையும் இளைஞர்களிடம் உருவாக்கும்.

அதற்காக ‘முதல் மொழி’ அமைப்பை மனதாரப் பாராட்ட வேண்டும். வெற்றிபெற்ற குறும்படங்களை எடுத்தவர்களோடு பங்கெடுத்த எல்லா இளம் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி: பிருந்தா சாரதி முகநூல் பதிவு

You might also like