பழம் பெரும் தலைவர்கள் வாகை சூடிய மதுரை!

கூடல்நகரில் கொடி ஏற்றப்போவது யார்?

மீனாட்சி அம்மன் அருள் பொழியும், மதுரை மாநகர் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பழமையான நகரம். மதுரை மாநகருக்கு மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி என்பன உள்ளிட்ட பெயர்களும் உண்டு.

மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால், ’நான்மாடக்கூடல்’ என்று கவிஞர்கள், எழுத்தாளர்கள் இதனை அழைப்பர்.

தொன்மையான வரலாறைக் கொண்ட இந்தத் தூங்கா நகரம், பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது.

நெசவுத் தொழில், ஜவுளி, வர்த்தகம், உதிரி பாகங்கள் தயாரிப்பு, உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இங்கு உள்ளன. சிறு, குறு தொழில்களும் உண்டு. மேலூர் மற்றும் மதுரை கிழக்குப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

அரசியல் விழிப்புணர்வுள்ள மதுரை

தமிழகத்தில் சென்னைக்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமான மதுரை, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், மாநாடு, கூட்டம் என தங்கள் வலிமையைப் பறைசாற்றும் இடமாக மதுரை பல ஆண்டுகளாக விளங்கி வருகிறது.

விஜயகாந்த், தனது தேமுதிக கட்சியை மதுரையில் தான் ஆரம்பித்தார். ஒரு காலத்தில் கிராமப்புறங்களை அதிக அளவில் உள்ளடக்கிய தொகுதியாக இருந்த மதுரை மக்களவைத் தொகுதி, சீரமைப்புக்குப் பிறகு பெருமளவு நகரத்தை மட்டுமே கொண்ட தொகுதியாக மாறிவிட்டது.

மதுரை மக்களவைத் தொகுதியில், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி மற்றும் மேலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

தலைவர்கள் வாகை சூடிய தொகுதி

எளிமையின் சிகரம் என சிலாகிக்கப்படும் கக்கன், காங்கிரஸ் வேட்பாளராக 1952-ம் ஆண்டு போட்டியிட்டு, இங்கு வென்றுள்ளார்.

இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி ஆகிய ஜாம்பவான்களை எம்.பி.யாக்கி, டெல்லிக்கு அனுப்பி வைத்த தொகுதி, இது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியில் 8 முறை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறை வெற்றி பெற்றுள்ளது.

தமாகா, ஜனதா, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.

எம்.ஜி.ஆரின் தொகுதி

வழக்கமாக பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அதிமுக எனும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய சமயத்தில், தென் மாவட்டத்தில் அவர் போட்டியிட வேண்டும் என இங்குள்ள மக்கள் அழைப்பு விடுத்தனர்.

அதனை ஏற்று அவர், 1977-ம் ஆண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அருப்புக்கோட்டை, அவரை முதன் முறையாக முதலமைச்சர் ஆக்கியது.

1980-ம் ஆண்டு மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நின்றார். வென்றார். இரண்டாம் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார், எம்ஜிஆர்.

மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அந்த மாநகரில் நாடே வியக்கும் வண்ணம் உலக தமிழ் மாநாட்டை நடத்திக்காட்டினார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வேட்பாளர்கள் யார்? யார்?

பிரதான அரசியல் கட்சிகள், தேர்தல்களில் நட்சத்திரங்களை களம் இறக்குவது வழக்கம். எழுத்தாளர்களை கட்சி பிரச்சாரத்துக்கு ஊறுகாய் போல் பயன்படுத்திக்கொள்வார்கள்.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எழுத்தாளர் சு.வெங்கடேசனை மதுரை மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

கடந்த தேர்தலிலும் இவரே சிபிஎம் வேட்பாளராக தேர்தலில் நின்று எம்.பி.யானார். மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க. சார்பில் இராம ஸ்ரீநிவாசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாதேவியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்

கட்சிகள் செல்வாக்கு

சி.பி.எம், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனைப் பொறுத்தவரை அவர் பல்வேறு கட்சிகளுக்குப் பயணித்துவிட்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமாகியுள்ளார்.

அதிமுகவுடன், இந்தமுறை தேமுதிக மட்டுமே உள்ளது. விஜயகாந்தின் சொந்த ஊர் என்பதால் அந்தக் கட்சிக்கு ஓரளவு ஓட்டுகள் உண்டு.

ஆரம்பத்தில் மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், போட்டியிடுவதாக இருந்தது. என்ன காரணத்தாலோ விருதுநகருக்கு சென்றுவிட்டார்.

பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் சிறந்த பேச்சாளர், பாஜக இந்த முறை பலமான கூட்டணியை அமைத்துள்ளது.

அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனின் அமமுக கடந்த மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில் சுமார் 86 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி இருந்தது.

பாஜக அணியில் உள்ள ஓபிஎஸ்சுக்கு இங்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். ஜான் பாண்டியனின் தமமுகவுக்கும் சில தளங்கள் உண்டு.

திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட வெங்கடேசன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த முறை அதே கூட்டணி நீடிக்கிறது. கூடுதலாக கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது.

’’கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை ஓரளவு தோழர் வெங்கடேசன் நிறைவேற்றி உள்ளார்-கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் – மீண்டும் அவரே வெல்வார்” என்கிறார்கள், காம்ரேட்டுகள்.

ஜுன் மாதம் 4-ம் தேதி வரை பொறுத்திருப்போம்.

– பி.எம்.எம்.

#எம்ஜிஆர் #அதிமுக #எழுத்தாளர்_சு_வெங்கடேசன் #திமுக #மதுரை_மக்களவைத்_தேர்தல் #அதிமுக #டாக்டர்_சரவணன் #பாஜக #இராம_ஸ்ரீநிவாசன் #நாம்_தமிழர்_கட்சி #சத்யாதேவி #மதுரை_மக்களவைத்_தொகுதி #Madurai_Lok_Sabha_Constituency #mgr #admk #dmk #su_venkatesan #dr_saravanan #rama_srinivasan #sathyadevi

You might also like