ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை!

3 கோடி பேருக்கு இலவச வீடு கட்டித்தரப்படும் என்று உறுதி

அரசியல் கட்சிகளுக்கென தனித்தனி கொள்கைகள் இருந்தாலும், தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் ஓட்டுகளை அறுவடை வெய்யும் நோக்கத்தில், வாக்குறுதிகளை வெளியிடுவது வழக்கம்.

ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளைப் பிடிக்க போராடும் கட்சிகள், ஒரு இடம் கிடைக்குமா? என தெரியாமல் களத்தில் சுழன்று வரும் கட்சிகள் எல்லாம், தேர்தல் அறிக்கை எனும் பெயரில் வாக்குறுதிகளை பல நாட்களுக்கு முன்பே வெளிட்டுவிட்டன.

முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாட்டை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆண்டுவரும் பாஜக சாவகாசமாக, தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 15 லட்சம் யோசனைகளில் அடிப்படையில், தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அந்தக் கட்சி, மேடைகளில் முழங்கி வந்த கோஷங்களையே தேர்தல் அறிக்கை எனும் பெயரில் எழுத்து வடிவமாக்கி உள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக, அனைத்து தேர்தலுக்கான பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும்

* உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்

* 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இலவச அறிவிப்புகள் இல்லை.

ஓட்டுக்களை வாங்குவதற்கு இலவசங்கள் வாரி இறைக்கப்படுவதைப் பாஜக ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. இதனால், இந்தத் தேர்தல் அறிக்கையில் எந்த இலவச அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.

எனினும் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் சில இலவசங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’’ஏழைகளுக்கு ஏற்கனவே 4 கோடி இலவச வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன – அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்” என மோடி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.சி. குறித்து தகவல் இல்லை

சட்டவிரோதமாக, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களை அடையாளம் காணும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்.ஆர்.சி) திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பால், அந்தத் திட்டம் நிறுத்தி வைகப்பட்டுள்ளது.

பாஜக நேற்று வெளியிட்ட, தேர்தல் அறிக்கையில் என்.ஆர்.சி. தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

‘பொய் பத்திரம்’

பாஜகவின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சிகள் குறை சொல்லியுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உண்மைகள் இல்லை – ஒட்டுமொத்த பொய்களை இணைத்து, தேர்தல் அறிக்கை எனும் பெயரில் தயாரித்துள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி, ‘’பாஜகவின் தேர்தல் அறிக்கை உறுதிமொழி பத்திரமல்ல – பொய் பத்திரம் – 10 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை பற்றி, இந்த தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட இல்லை” என தெரிவித்தார்.

மோடி இன்று நெல்லை வருகிறார்

டெல்லியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட பிரதமர் மோடி, இன்று நெல்லை வருகிறார்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் இன்று மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.

– பி.எம்.எம்.

You might also like