ஒரே இறைவன், ஒரே இயக்கம் என்று வாழ்ந்து மறைந்தவர் திராவிட இயக்கத் தலைவர் நாகூர் ஹனிபா.
கம்பீர குரல் ஆனால் அனைவரையும் ஈர்க்கும் காந்த குரல். தன் குரல் வளமே இனிமையான இசை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனங்களில் தன் இசையால் விதைத்தவர். மறைந்தும் தன் குரலால் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவரின் இசைப் பயணத்திற்கு திராவிட இயக்க வரலாற்றில் தனி இடம் உண்டு. இசைத்துறையில் சிகரம் தொட்ட மனிதராக வாழ்ந்து மறைந்த நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு கொண்டாட இருக்கும் இந்தத் தருணத்தில் அவருக்கு மேலும் புகழஞ்சலி செலுத்தும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறு ஆற்றங்கரையில் இயங்கி வரும் அரசு இசைக் கல்லூரிக்கு நாகூர் ஹனிபா அவர்களின் பெயரை சூட்ட ஆவன செய்ய வேண்டும்.
மேலும் அதே வளாகத்தில் இசைப் பல்கலைக்கழகத்திற்கான புதியக் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. அந்தப் புதிய கட்டிடத்திற்கு நாகூர் ஹனிபா மாளிகை என்று பெயர் சூட்டி பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(இன்று) ஏப்ரல் 8 நாகூர் ஹனிபா அவர்களின் நினைவு தினம். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸில் உயர்ந்த அந்தஸ்து வழங்க துஆ செய்வோம்.
– முகமது காசீம் அனீஸ்