தமிழகத்தில் களம் காணும் பெண் வேட்பாளர்கள்!

’நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்’ என அநேகமாக அனைத்துக் கட்சிகளும் உரத்த குரலில் சொல்லி வருகின்றன.

இது தொடர்பான மசோதா ஆண்டுக்கணக்கில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தூங்கிக் கொண்டிருந்தது.

சமாஜ்வாதி கட்சியும், ஆர்.ஜே.டி.கட்சியும் இந்த மசோதா நிறைவேற முட்டுக்கட்டையாக இருந்தன.

‘இந்த இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘ என்பது அவர்கள் கோரிக்கை.

ஒரு வழியாக கடந்த ஆண்டு, இந்த மசோதாவை தூசித் தட்டி எடுத்து, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது பாஜக அரசாங்கம்.

அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன், இரு அவைகளிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ’மகளிர் இட ஒதுக்கீடு‘ மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் உடனடியாக மசோதா அமலுக்கு வரவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரே, மசோதா நடைமுறைக்கு வரும்.

அது, எப்போது என்பது இந்த நொடி வரை உறுதியாகத் தெரியவில்லை. அதுவரை காத்திருக்காமல், மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம். 

ஆனால் செய்தார்களா?

தமிழக நிலவரத்தை மட்டும் பார்க்கலாம்.

சீமானுக்கு பூங்கொத்து:

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி முதலிடத்தில் உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி, முன்னுதாரணமாக திகழ்கிறார்.

33% அல்ல. அவர் வழங்கி இருப்பது 50% ஒதுக்கீடு. இதற்காக மகளிர் சார்பில், சீமானுக்கு பூங்கொத்து அளிக்கலாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கினார்.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நாம் தமிழர் கட்சி 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது.

திமுக – அதிமுக

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் பெண்களுக்கு 3 இடங்களில் மட்டுமே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளித்துள்ளது.

ஒருவர், தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள்.

இன்னொருவர் தென் சென்னையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழச்சி தங்க பாண்டியன். முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள்.

தந்தையின் அடையாளத்தை வைத்தே, இவர்களுக்கு கட்சித் தலைமை, டிக்கெட் அளித்திருப்பது, அனைவரும் அறிந்த உண்மை.

திமுக சார்பில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார். இவர் தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

35 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, ஜான்சி ராணி என்ற ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் சீட் கொடுத்துள்ளது. அவர் நெல்லையில் போட்டியிடுகிறார்.

காங். – பாஜக – பாமக

10 தொகுதிளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

கரூரில் எஸ்.ஜோதிமணியும், மயிலாடுதுறையில் ஆர்.சுதாவும் போட்டியிடுகிறார்கள்.

பாஜக மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது.

தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், விருதுநகரில் ராதிகா, சிதம்பரத்தில் கார்த்தியாயினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 3 இடங்களை மகளிருக்கு ஒதுக்கியுள்ளது.

சவுமியா அன்புமணி (தர்மபுரி), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) திலகபாமா (திண்டுக்கல்) ஆகியோர் பாமகவின் வேட்பாளர்கள்.

பெண் வேட்பாளர்கள் பட்டியல்

கட்சி                   பெண்கள்         போட்டியிடும் தொகுதிகள்

நாம் தமிழர்               20                                               40
திமுக                              3                                               22
பாஜக                              3                                               25
பாமக                              3                                               10
காங்கிரஸ்                    2                                               10
அதிமுக                          1                                               35

பெண் தலைவரான பிரேமலதா தலைமையில் செயல்படும் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் ஒரு பெண் வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

– பி.எம்.எம்.

You might also like