தலித் தலைவர்களால் தனிக்கவம் பெற்ற தென்காசி!

குளிரைத் தாண்டி, கொதிக்குது தேர்தல் களம்!

பக்கத்தில் சில கி.மீ. தூரத்தில் குற்றாலம் இருப்பதால், தென்காசியில் பகல் பொழுதிலும் இதமான குளிர் இருக்கும்.

ஜுன், ஜூலை மாதங்கள் சீசன் காலம் என்பதால், சாரலில் நனையவும், அருவிகளில் நீராடவும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கே படை எடுத்து வருவார்கள்.

இப்போதும் தென்காசியில் தென்றல் வீச்சோடு, குளிர் நிலவினாலும், அதனை தாண்டி அனல் வீசுகிறது. காரணம், மக்களவைத் தேர்தல் என சொல்லத்தேவை இல்லை.

காங்கிரஸ் கோட்டை

தனித் தொகுதியான தென்காசி மக்களவைத் தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும்.

இப்போது, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகள் திமுகவிடம் உள்ளன.

கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி தொகுதி காங்கிரஸ் வசமும், வாசுதேவநல்லூர் மதிமுக வசமும் உள்ளன.

தென் மாவட்டங்களில் உள்ள ஒரே ஒரு தனித்தொகுதி தென்காசி மட்டுமே. ஒரு காலத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி, காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.

1957-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற 16 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறை வாகை சூடியுள்ளது.

அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்தத் தேர்தலில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.

நிறைய தேவைகள் உள்ளன

நெல்லை மாவட்டத்துடன் இணைந்திருந்த தென்காசி, சில ஆண்டுகளுக்கு முன்புதான் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு மாவட்டத்துக்குரிய அடையாளங்கள் இல்லை. இந்தத் தொகுதியில் நிறைய தேவைகள் உள்ளன.

குற்றாலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

விவசாயம், விசைத்தறி, பீடித் தொழிலை முக்கிய தொழிலாக கொண்டது, தென்காசி மாவட்டம்.

செண்ட் தொழிற்சாலை, மாம்பழச்சாறு தொழிற்சாலை, ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்களிடம் முன் வைக்கப்படும்.

’ஜெயித்ததும் நிறைவேற்றுவேன்’ என வேட்பாளர்கள் உறுதி அளிப்பார்கள். ஆனால் ஜெயித்ததும், வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள்.

களம் காணும் ’தலித்’ தலைவர்கள் .

தென் தமிழகத்தில் வலிமையாக உள்ள புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் தென்காசியில் நேரடியாக களம் காண்கின்றனர்.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகி்றார். அவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது இது 7 -வது முறை.
தமமுக தலைவர் ஜான் பாண்டியன், பாஜக அணியின் சார்பில் போட்டியிடுகிறார்.

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் தலைவர்களான கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும் இதுவரை நேருக்கு நேராக எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை.

முதன் முறையாக இருவரும் போட்டியிடுவதால், தென்காசி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திமுக ‘சிட்டிங் எம்.பி.’யான தனுஷ் எம்.குமாருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, சங்கரன்கோவிலைச் சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட இசை மதிவாணன் மீண்டும் போட்டியிடுகிறார்.

யாருக்கு ஜெயம்?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் மதிமுகவுக்கு இந்த தொகுதியில் கணிசமான வாக்குகள் உள்ளன. இது, திமுக வேட்பாளருக்கு பலம்.

1998-ம் ஆண்டு பாஜக இங்கே தனித்து நின்று சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் டிடிவி தினகரனின் அமமுக 92 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது.

தினகரன், இப்போது பாஜக அணியில் உள்ளார். தவிர, ஜான் பாண்டியனுக்கு இங்கு தனிசெல்வாக்கு உண்டு.

‘இதனால் அண்ணன் ஜான் பாண்டியன் எளிதாக வெல்வார்’ என்பது அவரது ஆதரவாளர்கள் கருத்து.

இதற்கு கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் பதில் என்ன?.

’கடந்தத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, 3 லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் வாங்கினார் – இந்த முறை எங்கள் அணியில் தேமுதிகவும் உள்ளது – ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் எங்களுக்கே விழும். எனவே டாக்டர் எளிதாக வெல்வார்’ என்கிறார்கள்.

தென்காசியில் போட்டி பலமாக உள்ளது என்பதே கள நிலவரம்..

– பி.எம்.எம்.

You might also like