தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மட்டுமில்லாமல், தலைவர்களும் மக்களை கவரும் விதத்தில் வேடிக்கையான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
சாலை ஓர தேநீர் கடையில் டீ குடிப்பது, வடை சுடுவது, பஜ்ஜி சாப்பிடுவது போன்றவை இந்த நிகழ்வுகளில் அடக்கம். வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்கு சிலர் கண்ணீர் விட்டு புலம்பவும் செய்கிறார்கள்.
திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ, தேர்தல் சின்னம் தொடர்பான விவகாரம் குறித்து பேசியபோது கண்ணீர் விட்டுத் தொண்டர்களை கலங்கடித்தார்.
அதே பாணியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கையாண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அவர் வாணாபுரம் என்ற ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ரிஷிவந்தியம் தொகுதியில் தனது கணவரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் செய்த சாதனைகளை பிரேமலதா பட்டியலிட்டார்.
திடீரென அவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
அந்த பிரச்சார கூட்டத்துக்கு வந்திருந்த தேமுதிக தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினார்.
‘’மாப்பிள்ளை நான் தான்.. சட்டை என்னோடது இல்ல’’:
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் விஷ்ணு பிரசாத். இவர் தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியாவின் சகோதரர்.
ஆரணி தொகுதியின் தற்போதைய எம்.பி.யான விஷ்ணு பிரசாத், தனது வெற்றிக்கு கடலூர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையே முழுக்க முழுக்க நம்பி இருக்கிறார்.
அதனால் ஒவ்வொரு மேடையிலும் அமைச்சரை புகழ, அவர் தவறுவதில்லை. கடலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய விஷ்ணு பிரசாத், ’’கடலூருக்கு நான் மகிழ்ச்சியுடன் வந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் சரண் அடைகிறேன்.
அவரை விட்டால் எனக்கு வேறு என்ன கதி உள்ளது? ஒரு படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது – “நான் தான் மாப்பிள்ளை – ஆனால் நான் போட்டிருக்கும் சட்டை அவருடையது (அமைச்சர்)” என்று சொன்னபோது, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
கோவையில் திமுக வேட்பாளராக ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரம் செய்தபோது, ஒரு மைதானத்தில் இளைஞர்கள் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தனர்.
திடீரென அவர்களுடன் சேர்ந்து ராஜ்குமாரும் வாலிபால் விளையாட ஆரம்பித்தார்.
நடிகை ரோகிணி பிரச்சாரம்
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, நடிகை ரோகிணி, கடந்த முறை பிரச்சாரம் செய்தார். இப்போதும் அவர் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து ரோகிணி பேசுகிறார். மக்கள் அதனை ஆர்வத்துடன் கேட்கின்றனர்.
கடையில், டீ குடித்த அமைச்சர்
நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். மேட்டுப்பாளையத்தில் அவர் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது சாலை ஓரத்தில் உள்ள டீ கடைக்குள் திடீரென நுழைந்த முருகன், டீ ஆர்டர் செய்தார்.
டீ வந்ததும், அவரும் உடன் வந்த தொண்டர்களும் டீ குடித்தனர். டீக்கான பணத்தை, அமைச்சர் முருகன், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தினார்.
கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று அவர் மருதமலை கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு, பிரச்சாரத்தை தொடங்கினார்.
வீரகேளரம் பகுதியில் வசிக்கும் கன்னட மக்களிடம் அவர் ஓட்டு சேகரித்தார். கன்னட மொழியில் பேசி, தனக்கு வாக்களிக்குமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
– பி.எம்.எம்.