தமிழ்நாட்டில் ரூ.110 கோடி பணம் பறிமுதல்!

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நடத்தை விதிமீறல் உட்பட தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சி-விஜில் செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த செயலி மூலம் இதுவரை 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

அதோடு, பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

You might also like