’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று ஒருமுறை பேரறிஞர் அண்ணா சொன்னதுண்டு.
அதனால் தான் என்னவோ, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்காட்சிகளை சேர்ந்த விஐபிக்களை, திமுக வளைத்து போட்டு உயர்ந்த இடங்களில் வைத்துள்ளது போலும்.
தமிழக சட்டபேரவைத் தலைவராக இருக்கும் அப்பாவு, ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.
இன்று சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் பார்த்திபன் தேமுதிகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.
மற்ற கட்சிகளை விட அதிமுகவினர்தான் திமுகவில் இணைந்து, இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் வளம் கொழிக்கும் துறைகளின் அமைச்சர்களாக உள்ளனர்.
அவர்களில் ஆர்.கே.சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், ஈரோடு முத்துசாமி, தண்டராம்பட்டு எ.வ.வேலு, புதுக்கோட்டை ரகுபதி, அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களிலும், திமுக பட்டியலில், அதிமுக ஆதிக்கம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நான்கு பேர்
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்த, திமுக, புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
திமுக பட்டியலில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த நான்கு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் யார்? யார்?
1. ஜெகத்ரட்சகன் – அரக்கோணம்
2. தங்க தமிழ்ச்செல்வன் – தேனி
3. செல்வகணபதி – சேலம்
4. கணபதி ராஜ்குமார் – கோவை
இந்த நான்கு பேரின் பின் புலங்களைப் பார்க்கலாம்:
ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்)
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அதிமுகவை தொடங்கிய சமயத்தில் அந்த கட்சியில் சேர்ந்தவர் ஜெகத்ரட்சகன்;
1980-ம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆக இருந்தவர், 1984-ம் ஆண்டு அதிமுக சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
1989-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக, ஜானகி அம்மாள் அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தபோது ஜானகி அம்மாள் அணியில் இருந்தார்.
அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2004-ம் ஆண்டு ’வீர வன்னியர் பேரவை’ என்ற இயக்கத்தை ஆரம்பித்த ஜெகத்ரட்சகன், 2004-ம் ஆண்டு. இதனை ‘ஜனநாயக முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
பின்னர் இந்தக் கட்சி 2009-ம் ஆண்டு திமுகவுடன் இணைந்தது. ஆர்.எம்.வீரப்பன் ஆரம்பித்த எம்.ஜி.ஆர். கழகம் எனும் கட்சியிலும், கொஞ்ச காலம் பயணித்துள்ளார்.
இப்போது, ஜெகத்ரட்சகன், திமுகவில் முக்கியமான தலைவர்களில் ஒருவர்.
கடந்த முறை ஜெகத்ரட்சகன், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியை அவருக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வன் (தேனி)
கடந்த 2001-ம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது.
அந்தத் தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அதன்பின், அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றால், ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆக வேண்டும் எனும் சூழல் உருவானது.
அப்போது, தனது ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, ஜெயலலிதா போட்டியிட வழி வகை செய்தவர், தங்க தமிழ்ச்செல்வன்.
தனது தீவிர விசுவாசியாக செயல்பட்ட காரணத்தால், தங்க தமிழ்ச்செல்வனுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார், ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.
2019-ம் ஆண்டு அந்தக் கட்சி சார்பாக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டில், அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
நடைபெறப்போகும் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு, திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செல்வகணபதி (சேலம்)
இளம் வயதில் இருந்தே செல்வ கணபதி, அதிமுகவில் இருந்தாலும், ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளராக ஆன பின்னரே, வெளி உலகுக்கு அறியப்பட்டார்.
கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 96-ம் ஆண்டு வரை உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார், செல்வ கணபதி.
1999-ம் ஆண்டு அதிமுக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், 2008-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
2010-ம் ஆண்டு திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, செல்வ கணபதிக்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.
கணபதி ராஜ்குமார் (கோவை)
கோவை தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார், அதிமுகவில் தனது அரசின் பயணத்தைத் தொடங்கியவர்.
கடந்த 2014-ம் ஆண்டு, அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேலுமணியுடன் உரசல் ஏற்பட்டதால், அதிமுகவிலிருந்து விலகி 2021-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்.
அந்த நெருக்கம் காரணமாக கணபதி ராஜ்குமாருக்கு திமுக தலைமை கோவைத் தொகுதியில் எம்.பி.சீட் வழங்கியுள்ளது.
இந்தத் தொகுதியில் கடந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளர் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.
– பி.எம்.எம்.