’ஊரு விட்டு ஊரு வந்து’ வெளியூர்களில் போட்டியிடும் தலைவர்கள்!

சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு, தலைவர்கள் வெளியூர்களில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி தொடங்கி வாஜ்பாய் வரை பழைய சம்பவங்களை அடுக்கலாம்.

பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளிமாநிலங்களில் நின்று வாகை சூடியிருப்பது அண்மைக்கால நிகழ்வுகள். திமுகவில் இருந்தபோது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தனது சொந்த தொகுதியான பரங்கிமலையில் களம் கண்டு அமோக வெற்றி அடைந்தார்.

அதிமுகவை ஆரம்பித்த பின், 234 தொகுதிகளில் இருந்தும் அவருக்குத் தொண்டர்கள் அழைப்பு விடுத்தனர்.

அன்பு அழைப்பைத் தட்ட முடியாமல் எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி என வேறு வேறு தொகுதிகளில் போட்டியிட்டு, இமாலய வெற்றி பெற்றார்.

இப்போதைய மக்களவைத் தேர்தல் களத்துக்கு வருவோம்.

தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் பலரும், சொந்தத் தொகுதியில் நிற்காமல் வெளியூர்களில் களம் காண்கிறார்கள்.

அவர்களில், சிலர் குறித்து இங்கே காண்போம்:

ஓபிஎஸ்

மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்துக்காரர். அங்குள்ள பெரியகுளம், போடிநாயக்கனூர் ஆகிய தொகுதிகளில் நின்று 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

வரும் மக்களவைத் தேர்தலில் அவர் ராமநாதபுரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவரது மகன் எம்.பி.யாக இருக்கும் தேனியில் இந்தமுறை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களம் இறங்குவதால், அவருக்குத் தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார் ஓபிஎஸ்.

அவரது சமூகத்தினர் அடர்த்தியாக உள்ள ராமநாதபுரத்தின், கூட்டணிக் கட்சியான பாஜக சில பகுதிகளில் வலுவாக உள்ளது.

தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், தஞ்சை மாவட்டத்துக்காரர். ஜெயலலிதா இருந்தபோது, ஒரு முறை தேனியில் (பழைய பெரியகுளம் தொகுதி) போட்டியிட்டு எம்.பி.யாகி, இந்தத் தொகுதியில், தனது தளத்தைப் பலப்படுத்திக்கொண்டார்.

அண்ணாமலை, முருகன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரூரைச் சேர்ந்தவர். அங்குள்ள அரவக்குறிசியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பாஜக வலிமையாக உள்ள கோவைத் தொகுதியில் அவரை, கட்சி மேலிடம் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

நாமக்கல்லைச் சேர்ந்த அவர், நீலகிரியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திமுகவின் பலம் பொருந்திய ஆ.ராசாவை எதிர்த்து முருகன் களம் காண்கிறார்.

ஆ.ராசாவும் வெளியூர் ஆள் தான். பெரம்பலூரைச் சேர்ந்த ராசா, கடந்த தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்டு வாகை சூடியவர்.

விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும், அந்த தொகுதிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

அவரது கணவர் சரத்குமார் சார்ந்த நாடார் ஓட்டுகள், இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ளதால், ராதிகாவுக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது.

அதுபோல் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக நிற்கும் விஜய பிரபாகரனுக்கும், இந்தத் தொகுதிக்கும் சம்மந்தம் கிடையாது.

இந்தத் தொகுதியில் அடங்கும் அருப்புக்கோட்டை, பிரபாகரனின் மூதாதையர் ஊர் என்றாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் சொந்த ஊர் கோவை. ஆனால், அவர் தென் மாவட்டங்களில் தான் அரசியல் செய்து வருகிறார்.

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி, 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 6 முறை போட்டியிட்டவர்.

6 முறையும் தோல்வி அடைந்தவர், இந்த முறை 7-வது முறையாக அதிமுக கூட்டணி வேட்பாளராக களம் காண்கிறார்.

திருச்சி

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி தொகுதியில் பெரும்பாலும் வெளியூர் ஆட்களே வேட்பாளர்களாக நின்று வென்றுள்ளனர்.

மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சொந்த ஊர் திருச்செங்கோடு அருகேயுள்ள குமாரபாளையம்.

ஆனால் அவர் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு இருமுறை ஜெயித்துள்ளார். திருச்சியியில் 2001 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் தலித் எழில்மலை வென்றார். இவர் செங்கல்பட்டு, மாவட்டத்தைச் சேர்ந்தவர்,

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.திருநாவுக்கரசர், புதுக்கோட்டையை சேர்ந்தவர்.

இந்த முறை மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவரை, நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது, காங்கிரஸ்.

சென்னையில் வசிக்கும் விஜய் வசந்தை, கன்னியாகுமரி தொகுதியில் நிற்க வைத்து இன்னொரு விநோதத்தையும் காங்கிரஸ் தலைமை அரங்கேற்றியுள்ளது.

– பி.எம்.எம்

You might also like