துரை.வைகோ: தேர்தல் களத்தில் மேலும் ஒரு வாரிசு!

தமிழகத்தில் திரை நட்சத்திரங்கள், அரசியலுக்கு வருவதை பகடி செய்வோர், வாரிசு அரசியலை ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை.

அதனால்தானோ என்னவோ இன்றைய தினம், தமிழகத்தில் உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானோர், வாரிசுதாரர்களாகவே உள்ளனர்.

வாரிசு அரசியல் என்றதும் – தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, தூத்துக்குடி, ஆரணி, கள்ளக்குறிச்சி, வேலூர், தேனி, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகள் சட்டென நமது நினைவுக்கு வரும்.

அந்தப் பட்டியலில், இன்னொரு தொகுதியாக திருச்சியை சேர்த்துக் கொள்ளலாம்.

அந்தத் தொகுதி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

’’திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை வேட்பாளராக போட்டியிடச் செய்வதென்று, மதிமுகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” என செய்தியாளர்களிடம் சொன்னார், வைகோ.

முரசொலி மாறனை, கருணாநிதியின் ‘மனசாட்சி’ என்பார்கள். மதிமுகவில், அதன் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் அனைவருமே, வைகோவின் ‘மனசாட்சி’யாக இருப்பதை, மேற்கண்ட தீர்மானம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

சொன்னது என்னாச்சு?

கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு எதிராகவே மதிமுக என்கிற தனி அரசியல் கட்சியை தொடங்கியவர் வைகோ என்பதை உலகம் அறியும். அவர் சொன்னதை உண்மை என நம்பியே, வைகோவுடன் 9 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்து வெளியேறினார்கள்.

“எனது குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள்-மதிமுகவின் தலைமையகமான தாயகத்தின் பக்கம் கூட வரமாட்டார்கள்”என்று சொன்னவர் வைகோ. ஆனால் பாசம் கண்ணை மறைத்தது.

தேசிய அளவில் அரசியல் செய்பவர் அல்லவா?

அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, உத்தவ் தாக்கரே, குமாரசாமி, சுப்ரியா சுலே, மெஹ்ஃபூபா முப்தி, சவுதாலாக்கள் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட அரசியல் வாரிசுகளை, பார்த்தவருக்கு தன் மகனை ஏன் அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என்ற எண்ணம் தோன்றி இருக்கும்.

வாரிசு அரசியல் நியாயமானதாக மனதில் பட்டிருக்கும். நினைத்தது போன்று, திட்டமிட்டு மகனை அரசியலுக்கு கொண்டு வந்து விட்டார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்ற வைகோ, “எனது மகன் அரசியலுக்கு வருவதில் துளிகூட விருப்பமில்லை. அவர், அரசியலுக்கு வருவது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” எனமகன் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து. மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட துரை வைகோ, நாளாவட்டத்தில் அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆனார்.

இப்போது திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆகிவிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில், துரை வைகோ அடுத்த உயரத்துக்கு கொண்டு செல்லப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

குடும்பம்

1972-ம் ஆண்டு பிறந்த துரை வைகோ சென்னையில் பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர்.

இவருக்கு கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஐடிசி நிறுவனத்தில் புகையிலைப் பொருட்களை ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வருகிறார்.

விரியாலிட்டி எல்எல்பி என்றொரு நிறுவனத்தை நடத்தி வரும், துரை வைகோ. கட்டுமானத்துறை தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனதுநண்பர்கள் குழுவுடன் இணைந்து சேவை செய்துள்ளார்.

மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்களில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர்.

வெற்றி வாய்ப்பு எப்படி?

கடந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.திருநாவுக்கரசர், சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் வாங்கி அமோக வெற்றியை பெற்றார்.

இந்த முறை தன் மகன் போட்டியிட வேண்டும் என்பதற்காக திமுக தலைமையிடம், வைகோ போராடி, திருச்சி தொகுதியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள், இந்த முறையும் நீடிப்பதால், துரை வைகோ வெல்வது மிகவும் எளிது.

மாவட்ட அமைச்சரான கே.என்.நேரு முழு ஆதரவு அளித்தால், துரையின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

2004-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் மதிமுகவின் எல்.கணேசன் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

– பி.எம்.எம்.

You might also like