எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!

கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை.

கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு.

தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி பத்திரிகைகள் நடத்துகிறார்கள். அவர்களுக்கென்று, இலக்கியப் பத்திரிகைகள் ஏதும் கிடையாது.

ஆனால் கம்யூனிஸ்டுகள் தாமரை (சிபிஐ), செம்மலர் (சிபிஎம்) என இலக்கிய இதழ்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக  நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் கட்சியில், கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கென தனித்தனி அமைப்புகளும் உள்ளன.

இவற்றின் சார்பில் பொங்கல், தமிழ் புத்தாண்டு போன்ற தினங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் இலக்கியச் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகங்கள் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த சங்கங்களில் அங்கம் வகிப்போரை வெறும் ஊறுகாயாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், நேரடியாக அரசியல் களத்திலும் இறக்கி விட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர், எழுத்தாளர் சு.வெங்கடேசன்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன்

கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக களம் இறங்கி அமோக வெற்றி பெற்றார்.

இந்த முறையும் அவரை மதுரை தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

இதேபோல் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட, ஆர். சச்சிதானந்தத்தை தேர்வு செய்திருக்கிறது கட்சி மேலிடம்.

கல்லூரிப் பருவத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில்  தீவிரமாக செயலாற்றி வருகிறார் சு.வெங்கடேசன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய அவர், இப்போது அந்த சங்கத்தின் கவுரவத் தலைவராக உள்ளார்.

2011-ம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவலான ‘காவல் கோட்டம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை உட்பட 20  நூல்கள் எழுதியுள்ளார்.

அண்மையில்  தமிழ் வார இதழில் வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ என்ற நாவல் மிகப்பெரிய வாசகர் வட்டத்தை இவருக்கு உருவாக்கியது.

கடந்த தேர்தலில் சு.வெங்கடேசன், சுமார், 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மதுரை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர்.

மனைவி பெயர்  கமலா.

இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

– பி.எம்.எம்.

You might also like