திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்!

அமீர்கான் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவர். புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டுபவர்.

சமகாலச் சமூக, அரசியல் மீதான அவரது கடந்த கால விமர்சனங்களின் எதிர்வினையை ‘லால்சிங் சத்தா’ பட வெளியீட்டின்போது கடுமையாக எதிர்கொண்டார்.

அந்த ஒரு காரணத்திற்காகவே, அடுத்த படம் குறித்த முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.

அவரது தயாரிப்பில், அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான ‘லாப்தா லேடீஸ்’ பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மீண்டும் அவரைக் குறித்த செய்திகள் ஊடகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், அவர் இன்று தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அமீர்கானின் முக்கியத்துவம்!

சல்மான் கான், அமீர்கான், ஷாருக் கான் என்ற வரிசை தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மாறியவாறே உள்ளது.

இம்மூவருமே இந்தி திரையுலகின் ‘சாக்லேட் பாய்’களாகவே தங்களது தொடக்கத்தை அமைத்துக் கொண்டனர்.

அந்த காலகட்டத்தில் மிதுன் சக்கரவர்த்தி, கோவிந்தா, சஞ்சய் தத் போன்ற இளம் நாயகர்கள் ஹிட்களை தந்து கொண்டிருந்தனர். ரிஷி கபூர், அனில் கபூர் போன்றவர்கள் காதல், குடும்பச் சித்திரங்களின் வழியே தாய்க்குலத்தின் ஆதரவைப் பெற்றிருந்தனர்.

அனைவரையும் மீறி அமிதாப் பச்சன் அப்போதைய ஆக்‌ஷன் ஹீரோக்களில் முதலிடத்தை வகித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நிகழ்ந்த அமீர்கானின் திரையுலக நுழைவு, சுமார் பத்தாண்டுகள் வரை மாபெரும் வெற்றியைக் காணாத வகையில் தொடர்ந்தது.

’கயாமத் சே கயாமத் தக்’ படத்தில் ஹீரோ ஆக நடிக்கும் முன்பே, அவருக்குத் திரையுலகப் பரிச்சயம் உண்டு.

தந்தை தாஹிர் ஹுசைன், சித்தப்பா நாசிர் ஹுசைன் மற்றும் சகோதரர் மன்சூர் கான் என்று குடும்பமே திரையுலகைச் சார்ந்து இயங்கியது.

அந்த வகையில், சிறு வயதிலேயே ஸ்டூடியோக்களே பாடசாலை என்று வாழ்ந்தவர் அமீர்கான். உதவி இயக்குனராகவும், தயாரிப்பு நிர்வாகியும் பணியாற்றியவாறே சினிமாவின் நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர்.

பாரா கான் இயக்கத்தில், ஷாரூக் கான் நடித்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் அதனைக் கிண்டலடித்து ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கும்.

அப்படிப்பட்ட அமீர்கான் தொண்ணூறுகளில் இளம்பெண்களின் ‘கனவு நாயகனாக’த் திகழ்ந்தார். ஆனால், இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை அவரது படங்கள் பெறவில்லை.

அந்த காலகட்டத்தில் ‘மைனே பியார் கியா’, ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ உட்படப் பல ப்ளாக்பஸ்டர்களை தந்தார் சல்மான்.

‘டர்’, ‘பாஸிகர்’ வழியே ஆன்ட்டி – ஹீரோவாக தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கி ‘சாக்லேட் பாய்’ அந்தஸ்ஹை ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’, ‘குச் குச் ஹோதா ஹை’ படங்களில் அடைந்தார் ஷாரூக்.

ஆனால், ‘தில்’, ‘பாஸி’, ‘ரங்கீலா’ போன்ற படங்கள் வரவேற்பைப் பெற்ற போதும் கூட அமீரின் பெரிய வெற்றியாக 1996இல் வெளியான ‘ராஜா ஹிந்துஸ்தானி’யே அமைந்தது.

அதுவும் கூட, கணவன் மனைவி ஊடலையும் கூடலையும் சொல்லும் குடும்பச் சித்திரமாகவே இருந்தது. அந்த வகையில் ‘சர்ப்ரோஸ்’ ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் படமாகக் கொண்டாடப்பட்டது.

அமீர்கான் நாயகனாக அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து வெளியான ‘லகான்’, ‘தில் சாஹ்தா ஹை’ இரண்டும் ப்ளாக்பஸ்டர்களாக அமைந்தது மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகில் ‘ட்ரெண்ட்செட்டர்’களாகவும் மாறின. அந்தக் கணத்தில் அமீர்கான் படங்களுக்கென்று வர்த்தகரீதியான மதிப்பும் விமர்சனரீதியிலான மரியாதையும் பன்மடங்காகப் பெருகியது.

தொடர்ந்து ரங் தே பசந்தி, ஃபனா, தாரே ஜமீன் பர், கஜினி, 3 இடியட்ஸ், தலாஷ், தூம் 3, பிகே, டங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்று அமீர் தந்த வெற்றி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் மிக்கவை.

வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கான பொழுதுபோக்கு தன்மை தாண்டி, சமூகத்திற்குப் பயன் தருகிற விஷயங்களும் அவற்றில் இருந்தன. அதனாலேயே, அவரது கருத்துக்கான எதிர்கருத்துகளும் வேகமாகப் பரவின.

திரை வாழ்க்கைக்கும் தனிப்பட்ட விஷயங்களுக்குமான இடைவெளியை அவர் வகுத்துக்கொண்ட விதம், அவரை ஒரு முன்மாதிரியாகத் திரையுலகினர் கொண்டாடச் செய்தது.

ரசிகர்களின் நாடித்துடிப்பு!

எளிமையான மக்களைச் சென்றடைவதற்கான கதைகளுக்கே அதிகமும் முக்கியத்துவம் தந்து வருபவர் அமீர்கான். எதனை, எந்த விகிதத்தில், எந்த வகையில் தர வேண்டும் என்பதில் துல்லியமான கணக்கைக் கொண்டவர்.

ஆரம்ப காலம் முதலே அவர் தேர்ந்தெடுத்த திரைக்கதைகள் அதனைச் சொல்லும். அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான முயற்சிகளிலும் அவர் ஆர்வம் காட்டுவார்.

அதனாலேயே, 1900க்கு முன்பாக வெள்ளையர்களுடன் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றனர் என்ற ‘லகான்’ கதையைத் தயாரிக்கச் செய்தது.

இந்தியப் படங்களின் திரைக்கதை வார்க்கும் பாணியையே அடியோடு மாற்றிய ‘தில் சாஹ்தா ஹை’ படத்தில் சையீப் அலிகான், அக்‌ஷன் கன்னா உடன் திரையைப் பகிர்ந்து கொள்ளச் செய்தது.

பத்து வயதுச் சிறுவனை முன்னிலைப்படுத்திய ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் இடைவேளைக்கு முன்பாகத் தோன்றும் தைரியத்தைத் தந்தது.

‘ரங் தே பசந்தி’ கிளைமேக்ஸ் காட்சியை சித்தார்த்திடம் தந்துவிட்டு அமீரை வேடிக்கை பார்க்கச் செய்தது. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

அவர் நடிக்காமல் தயாரிப்பை மட்டுமே மேற்கொண்ட பீப்லி லைவ், தோபி காட், ஜானே தூ யா ஜானே நா முதல் இப்போது வெளியாகியிருக்கும் ’லாப்தா லேடீஸ்’ படங்களிலும் கூட இதனைக் காண முடியும்.

கலைப்படைப்புக்கும் கமர்ஷியல் படத்திற்கும் இடையிலான ‘சைக்கிள் கேப்’பில் ஆட்டோ ஓட்டிய அமீர்கான், ஒருகட்டத்தில் தனது ‘பொன்னான தொடுகை’யை இழந்தார் என்று கூடச் சொல்லலாம்.

அதற்கும், அவரது படைப்பாக்கத் திறமை குறித்த அதீத புகழ்ச்சியே காரணமாக அமைந்தது. ஆனால், ‘லாப்தா லேடீஸ்’ அவரது கதைத் தேர்வில் பிசகு நேராது என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது.

கவலை வேண்டாம்!

2000-க்கு பிறகு சல்மான்கானின் பல படங்கள் மண்ணைக் கவ்வின. 2010-க்கு பிறகு ஷாரூக் அந்த நிலையை எதிர்கொண்டார்.

அவர்களுக்கு முன்பே, வெற்றிக்காகக் காத்திருக்கும் போராட்டத்தைச் சந்தித்தவர் அமீர்கான். இப்போதிருக்கும் மூத்த நாயகர்கள் அனைவருக்கும் அது பொருந்தும்.

ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார் என்று பலரும் அப்படியொரு ‘கண்டத்தை’ கடந்து சாதிப்பவர்கள் தான். அதனால், கலெக்‌ஷன் குறித்த கவலை ஏதுமின்றி மீண்டும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் அது.

அதேநேரத்தில், எந்த திசையில் நகர்ந்தாலும் குழப்பம் வந்து கட்டிக்கொள்ளும் சூழல் நிலவுவதையும் மறக்க வேண்டாம்.

அதையும் மீறி ‘லகான்’ தந்த மனநிலையை மீண்டும் அடைய வேண்டும்.

எதிர்மறை விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகளையும் புறந்தள்ளித் தனது பயணத்தைத் தொடர வேண்டும். அமீரின் ரசிகர்கள் அவரிடத்தில் சொல்ல விரும்புவது இதைத்தான்.

அதேநேரத்தில், தீவிர ரசிகர்கள் என்ற பெயரில் உலவி வரும் போலிகளின் வார்த்தைகளை நம்பி இன்னொரு முறை ‘லால் சிங் சத்தா’ போன்ற படங்களைத் தந்துவிட வேண்டாம்.

தொடர்ந்து தனித்துவத்தோடு இயங்கிவரும் அமீர்கானுக்கு இன்னொரு முறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

– உதய் பாடகலிங்கம்

You might also like