சைத்தான் – ஜோதிகா நடித்த இந்திப்படம் மிரட்சி தருகிறதா?

கிட்டத்தட்ட 26 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் இந்தியில் நடித்துள்ள திரைப்படம் ‘சைத்தான்’. அந்த தகவலே, நம்மூர் ரசிகர்களுக்கு அப்படம் குறித்த விசிட்டிங் கார்டாக உள்ளது.

இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக, பதின்ம வயதுக் குழந்தைகளின் தாயாக அவர் நடித்துள்ளார்; மாதவன் வில்லனாக நடித்துள்ளார். இவ்விஷயங்கள் நாம் அறிந்ததே.

இப்படத்தின் ட்ரெய்லரில் இருந்து, ’கண்கட்டி வித்தை’ என்றழைக்கப்படும் பில்லிசூன்யம் சார்ந்த ‘சூப்பர்நேச்சுரல் சைக்காலஜிகல் த்ரில்லர்’ ஆக இக்கதை அமைந்திருப்பது தெரிய வந்தது. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

படம் எப்படியிருக்கிறது? நம்மை மிரட்சியடைய வைக்கிறதா?

அந்த ஒரு நாள்!

சார்ட்டண்ட் அக்கவுண்டண்ட் ஆக டேஹ்ராடூனில் பணியாற்றுகிறார் கபீர் (அஜய் தேவ்கன்). மனைவி ஜோதி (ஜோதிகா), மகள் ஜான்வி (ஜான்கி பொடிவாலா), மகன் துருவ் (அன்கட் ராஜ்) ஆகியோரே தனது உலகம் என்றிருக்கிறார். அவர்களது நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்.

ஒருநாள் அவர்கள் நால்வரும் காரில் தங்களது பண்ணை வீட்டுக்குச் செல்கின்றனர். வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிடுகின்றனர்.

அப்போது, வன்ராஜ் (மாதவன்) என்பவரைத் தற்செயலாகச் சந்திக்கின்றனர். அவர் செய்யும் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தங்களுடன் சேர்ந்து சாப்பிடுமாறு கூறுகின்றனர்.

அப்போது, தன்னிடம் உள்ள லட்டை ஜான்வி, துருவ் இருவரையும் நோக்கி நீட்டுகிறார் வன்ராஜ். அவசர அவசரமாக அதனைப் பிடுங்கிச் சாப்பிடுகிறார் ஜான்வி.

அந்த நொடி முதல் வன்ராஜ் சொல்லும் அனைத்தையும் அவர் தன்னையறியாமல் செய்யத் தொடங்குகிறார். முதற்காரியமாக, அதுவரை சாப்பிடாமல் வைத்திருந்த ரொட்டியை ஒரு துளி மிச்சமில்லாமல் உண்கிறார்.

சிறிது நேரம் கழித்து, வன்ராஜிடம் விடை பெற்றுக்கொண்டு நால்வரும் பண்ணை வீட்டுக்குக் கிளம்புகின்றனர். அப்போது, வன்ராஜ் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை தருகிறார்; வீடு சென்றதும் உடனே அதனைச் சாப்பிடுமாறு கூறுகிறார்.

வன்ராஜ் சொன்னது போலவே, பண்ணைவீடு சென்றடைந்ததும் காரில் இருந்தவாறே அந்த பிஸ்கட்களை சாப்பிடுகிறார் ஜான்வி. சில நிமிடங்கள் கழித்து, அவர்களது பண்ணை வீட்டின் வாசலில் வந்து நிற்கிறார் வன்ராஜ்.

ஜோதி அவரைக் கண்டு அச்சமடைந்தாலும், கபீர் அவருக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறார். தனது மொபைல் பேட்டரியில் சார்ஜ் இல்லை என்று வன்ராஜ் சொல்ல, அவருக்குத் தனது சார்ஜரை கொடுக்கிறார் கபீர்.

ஆனால், கபீர் தரும் சார்ஜரை ஒரு ஓரமாக வைக்கிறார் வன்ராஜ். ‘அந்த இடமே தனக்குச் சொந்தம்’ என்பது போல நடந்துகொள்ளத் தொடங்குகிறார்.

உடை மாற்றிக்கொண்டு வரும் ஜான்வியிடம், பல ஆண்டுகள் பழகியவர் போல வன்ராஜ் உரையாற்றுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஜோதி.

தனது பாய்பிரெண்ட் உடன் சுற்றுலா செல்லப் போவதையெல்லாம் அவர் உளறிக் கொட்ட, ‘புதுசா பார்த்தவங்ககிட்ட இதையெல்லாமா சொல்லுவே’ என்று கண்டிக்கிறார். பதிலுக்கு, ‘உங்க பொண்ணு சொல்லித்தான் நான் இங்க வந்தேன்’ என்கிறார் வன்ராஜ்.

அவர் சொல்வது மனதைப் பிறாண்டினாலும், எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருக்கிறார் கபீர். ‘நம்ம பண்ணைவீடு இந்தாளுக்கு எப்படி தெரிஞ்சது’ என்ற ஜோதியின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ரொம்பவே தடுமாறிப் போகிறார்.

தொடர்ந்து வன்ராஜ் சொல்வதையெல்லாம் கொஞ்சமும் பிசகாமல் ஜான்வி பின்பற்றுகிறார்; ஒரு பொம்மையைப் போலத் தங்களது மகளை அந்நியர் ஒருவர் ஆட்டுவிப்பதைப் பொறுக்கமாட்டாமல், வன்ராஜை வீட்டை விட்டுச் செல்லுமாறு கூறுகிறார் கபீர்.

அந்த நொடியில் இருந்து, ஜான்வியின் நடத்தையில் வன்முறைக் குணம் தென்பட ஆரம்பிக்கிறது.

ஜோதியும் கபீரும் வலுக்கட்டாயமாக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முயல, பதிலுக்கு தன் சகோதரர் துருவ்வை கொடூரமாகத் தாக்குகிறார் ஜான்வி.

ஒருகட்டத்தில் அவரது செயல்பாட்டைத் தங்களால் கட்டுப்படுத்தவே முடியாது என்றுணரும்போது, அவர்களால் வன்ராஜிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது.

அப்போது, ‘உங்களது மகளை எனக்குத் தானமாகக் கொடுத்துவிடுங்கள்’ என்கிறார் வன்ராஜ். குழந்தைகளுக்குச் சிறிது துயர் என்றாலும் துடித்துப் போகும் அந்த பெற்றோருக்கு, அவர் சொன்னது தலையில் இடி விழுந்தது போன்றிருக்கிறது.

அதன்பிறகு என்னவானது என்பதை நம் மனம் நிறையப் பயத்தை வாரியிறைத்துவிட்டுப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதிப்பாதி.

பயம் பாதி, பதற்றம் மீதி!

‘ஒயிட் காலர்’ வேலை செய்பவராக, எதையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவராக, கொஞ்சமும் நிதானம் தவறாதவராக, இதில் அஜய் தேவ்கன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பதின்ம வயது மகள் மனதளவில் வதைபடுவதைக் கண்டு கொதிப்படைய வேண்டிய நேரத்திலும் அவர் அமைதி காப்பதாகக் காட்டியிருப்பது நம் பொறுமையைச் சோதிக்கிறது.

ஜோதிகாவுக்கு இதில் ‘மிகச்சன்னமாக’ நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஜோதி எனும் பாத்திரமாகவே திரையில் தெரிகிறார்.

இந்த படத்தின் மையமாக இருப்பது ஜான்கி பொடிவாலா ஏற்ற ஜான்வி பாத்திரம். அவரது தோற்றமும் நடிப்பும், ஒரிஜினல் வயதை விடப் பத்து வயது குறைவான பாத்திரத்தோடு எளிதாகப் பொருந்தி நிற்பது ஆச்சர்யமான விஷயம்.

ஜான்கியின் சகோதரராக வரும் அன்கட் ராஜ், சில காட்சிகளில் வந்தாலும் நம் மனதில் இடம்பிடிக்கிறார்.

‘இறுதிச்சுற்று’ படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் மாதவன் நடித்துவிட்டார் என்பதால், இதில் அவரது நடிப்பு ஆச்சர்யம் தரவில்லை.

இவர்கள் தவிர்த்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர், போலீசார் என்று அரை டஜன் பேர் இதில் முகம் காட்டியுள்ளனர். கிளைமேக்ஸ் காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வந்து போயிருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் சுதாகர் ரெட்டி யக்கண்டி, படத்தொகுப்பாளர் சந்தீப் பிரான்சிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் கரீமா மாத்தூர், ஒலி வடிவமைப்பாளர் சுபாஷ் சாஹு, சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் விக்ரம் மோர் மற்றும் ஆர்.பி.யாதவ், விஎஃப்எக்ஸ் குழுவினர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்போடு, மிகச்செறிவான த்ரில்லர் படத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் விஹாஸ் பேஹ்ல்.

தனது பின்னணி இசை மூலமாக, அந்தக் காட்சியனுபவத்தை ஒருபடி மேலும் உயர்த்தியிருக்கிறார் இசையமைப்பாளர் அமித் த்ரிவேதி. பாடல்களும் ஈர்க்கும் ரகத்தில் உள்ளன.

கிருஷ்ணதேவ் யக்னிக் இயக்கிய ’வாஷ்’ எனும் குஜராத்தி மொழிப் படத்தைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியில் இதன் கதை திரைக்கதை வசனத்தை இயக்குனருடன் சேர்ந்து ஆக்கியிருக்கிறார் ஆமில் கீயான் கான்.

படம் தொடங்கிய இருபது நிமிடங்களிலேயே, கதையின் முதல் திருப்பத்தைக் கண்ணில் காட்டிவிடுகிறார் இயக்குனர் விகாஸ் பேஹ்ல்.

அதனை மையப்பாத்திரங்கள் உணரச் சில நிமிடங்கள் எடுத்துக்கொள்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ‘பயம் பாதி; பதற்றம் மீதி’ என்ற நிலையை முன்னரே தொட்டுவிடுகிறது பார்வையாளரின் மனம்.

அதன்பிறகும் ‘ஏ.. பி.. சி.. டி..’ என்று இயக்குனர் பாடம் எடுத்துக் கொண்டிருப்பது ரொம்பவே போரடிக்கிறது.

சிலவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம்!

வில்லன் ஏன் இப்படியொரு பாதகத்தைச் செய்கிறார் என்பதையோ, அவரது பின்னணி எப்படிப்பட்டது என்பதையோ இதில் விலாவாரியாகக் குறிப்பிடவில்லை இயக்குனர்.

அதுவும் கிளைமேக்ஸில் வில்லன் இருக்குமிடத்தைக் காட்டிய விதம் அறுபதுகளில் வந்த ‘பாதாள பைரவி’ படங்களைப் பார்ப்பது போன்றிருக்கிறது.

திரைக்கதையின் ஓரிடத்தில், ’உன்னோட அறிவியலால் இதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாது’ என்று மாதவன் சொல்ல, கிளைமேக்ஸில் அவரது இருப்பிடத்தை அஜய் தேவ்கன் தேடிச் செல்வதாகக் காட்டப்பட்டிருப்பது நல்ல பதிலடி.

அது போன்ற காட்சிகள் இதில் ரொம்பவே குறைவு என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

அஜய் தேவ்கன் ஏற்ற கபீர் பாத்திரம், வாழ்வில் எதையும் நிதானமாகக் கையாளக்கூடியது என்று வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

அதற்கேற்ப, மாதவன் பாத்திரம் ‘அட்ராசிட்டிகள்’ செய்யும்போதும் அமைதி காப்பதாக அமைந்திருக்கின்றன அதன் செய்கைகள்.

ஆனால், வில்லனை இந்நேரம் அடித்துப் புரட்டி எடுக்க வேண்டாமா நாயகன் என்ற எண்ணமே பார்வையாளரின் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த இடத்தைக் கொஞ்சம் பண் படுத்தியிருக்கலாம்.

ஜானவி பாத்திரம் எந்த நேரத்தில் தன்னுணர்வுடன் இருக்கிறது, எப்போது வில்லன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதுவும் திரையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை.

‘ரயிலில் முன்பின் தெரியாதவர்கள் தரும் பிஸ்கட் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டாம்’ என்று எச்சரிப்பது போன்று, இந்த படம் அந்நிய நபர்களின் அறிமுகம் குறித்துப் பீதியூட்டுகிறது.

இயல்பிலேயே இரக்கமும் நட்பும் பாராட்டும் எளியவர்களைத் தவறாக எண்ணிப் பொழந்தெடுக்கவே இது வழி வகை செய்யும்.

அதனைச் சரிசெய்யும்விதமாக, நற்குணம் கொண்டோருக்கும், இந்த படத்தில் வரும் வில்லன் போன்று துர்க்குணம் கொண்டவர்களுக்குமான வித்தியாசத்தை விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்!

இந்தப் படத்தில், தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார் வில்லன். அவரை எதிர்க்கும் நாயகனே இதில் ‘சைத்தான்’.

இப்படத்தில் தன்னைக் கடவுளர்களாகச் சித்தரித்துக் கொள்பவர்கள் பற்றி இயக்குனர் எந்தவித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

இதனைச் சொல்லக் காரணம், கார்பரேட் நிறுவன பாணியில் தங்களது பீடங்களைக் கட்டமைத்து இளையோரை வசீகரிக்கத் துடிக்கிற நவீன குருமார்களுக்கும் இதில் வரும் மாதவன் பாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதே. ஆனால், இயக்குனர் அது பற்றிக் கருத்து எதுவும் சொல்லாமல் நழுவியிருக்கிறார்.

மேற்சொன்ன குறைகளைக் கடந்து நின்றால், இப்படம் கொஞ்சம் வேறுபட்ட ‘த்ரில்’ பட அனுபவத்தைத் தருகிறது.

‘த்ருஷ்யம்’ பாணியில் பெற்ற குழந்தைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிற பெற்றோர்களே ‘வாழும் கடவுள்கள்’ என்று சொல்கிறது.

இப்படத்தின் செகண்ட் கிளைமேக்ஸ், சுசீந்திரனின் ‘பாண்டிய நாடு’ படத்தை நினைவூட்டுகிறது..!

– உதய் பாடகலிங்கம்

You might also like