‘இந்த படம் ரொம்பவே டிபரெண்டா இருக்கும்’. இந்த வார்த்தைகளை எந்த வித்தியாசமும் இன்றிச் சொல்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர் திரையுலகினர்.
அதனாலேயே, ‘இது ஒரு சாதாரணமான படம்’ என்று சொல்பவர்களை நோக்கி அனிச்சையாகத் திரும்புகிறது ரசிகர்களின் கவனம். அப்படியொரு சூழலில், ‘இது நிச்சயமாக வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தரும்’ என்றுணர்த்தியது ‘காமி’ தெலுங்கு படத்தின் ட்ரெய்லர்.
அப்படியொரு வித்தியாசத்தை உணர வைக்கிறதா ‘காமி’?
விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வித்யாதர் காகிடா இயக்கியுள்ளார்.
நாயகனின் தேடல்!
‘காமி’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் ‘தன்னைத்தானே தேடி அறிந்து கொள்பவன்’ என்று பொருளாம். அதனைக் குறிப்பிட்டு, திரைக்கதையைத் தொடங்குகிறார் இயக்குனர் வித்யாதர் காகிடா.
வாரணாசியில் வாழும் சங்கர் (விஸ்வக் சென்) எனும் அகோரியை, அவருடன் இருக்கும் பிற அகோரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். காரணம், எந்தவொரு மனிதர் தொட்டாலும் ’ஷாக்’ அடித்தாற்போலக் கூனிக் குறுகும் அவரது இயல்பு.
‘அது கடவுள் தந்த சாபம்’ என்று சக அகோரிகள் சொல்ல, ‘உனது கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவம்தான் இதற்குக் காரணம்’ என்கிறார் அங்கிருக்கும் தலைமை அகோரி.
ஆனால், பதினைந்து ஆண்டுகளாக வாரணாசியில் இருப்பதைத் தவிர, சங்கருக்குத் தன்னைப் பற்றிய வேறு எந்த நினைவும் இல்லை.
சக அகோரிகளின் கொதிப்பை அடக்க முடியாமல், ‘உன்னை இங்கு கொண்டுவந்து சேர்த்த கேதார் பாபவைச் சந்தித்து உனது கடந்தகாலத்தை அறிந்துகொள்’ என்று சங்கரிடம் சொல்கிறார் தலைமை அகோரி.
பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் அவரைச் சிலர் கடைசியாகப் பார்த்ததாகச் சொல்லி, அங்கு சங்கரை அனுப்பி வைக்கிறார்.
கேதார் பாபா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவரது இருப்பிடத்தில் குரு தந்ததாகச் சொல்லி ஒரு வரைபடத்தைக் கொடுக்கிறார் சீடர் ஒருவர்.
‘36 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் மாலிபத்ரா எனும் ஒளிரும் காளானால் மட்டுமே உனது கஷ்டத்தைப் போக்க முடியும். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் இமயமலையிலுள்ள துரோணகிரிக்குச் சென்றால் அதனை அடைய முடியும்’ என்றும் சொல்கிறார்.
அந்த மாலிபத்ராவைச் சேகரிக்க விரும்பும் ஜானவி (சாந்தினி சவுத்ரி) எனும் மருத்துவரையும் அழைத்துச் செல்லுமாறு சங்கரிடம் கூறுகிறார்.
மனித தொடுகையே சாபம் என்றிருக்கும் சங்கருக்கு, அப்பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்வதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஆனால், அதனைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் ஏற்படும்போது அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
பல்வேறு இடர்களுக்கு நடுவே இருவரும் துரோணகிரியைக் காண்கின்றனர். ஆனால், அந்த மாலிபத்ராவைக் கையால் தொடுவது கொஞ்சம் கூடச் சாத்தியமற்றது என்றுணர்த்துகிறது யதார்த்தம்.
அதன்பிறகும், அதனைக் கைக்கொள்ள இருவரும் துடிக்கின்றனர். அந்த பயணத்தின்போது ஜானவி காணாமல் போகிறார். உயிர் போகும் ஆபத்தை எதிர்கொள்கிறார் சங்கர்.
அனைத்தையும் கடந்து, சங்கர் அந்த மாலிபத்ராவைத் தேடிக் கண்டெடுத்தாரா என்று சொல்கிறது ‘காமி’யின் மீதி.
ஆந்திரக் கிராமமொன்றில் வாழ்ந்துவரும் உமா என்ற சிறுமியும், இந்திய – சீன எல்லைப் பகுதியிலுள்ள மருத்துவ ஆய்வகமொன்றில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் சிடி – 333 எனும் இளைஞனும், சங்கரின் நினைவலைகளில் இடம்பெறுவதாகக் காட்டுகிறது ‘காமி’ திரைக்கதை.
பத்து வயதுச் சிறுமியான உமா (ஹாரிகா), தேவதாசியாக இருக்கும் தனது தாய் துர்காவை (அபிநயா) விட்டுப் பிரிந்து சித்தியிடம் வளர்கிறார்.
பிறந்த உடனேயே தன்னை அப்படியே விட்டுவிட்டு தேவதாசியாகச் சென்றுவிட்டார் என்றெண்ணமே தாய் மீதான அவரது வெறுப்புக்குக் காரணமாக இருக்கிறது.
ஒருநாள் உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த கிராமத்தில் இருக்கும் கோயில் நிர்வாகக் குழுவினர் துர்காவைத் தேவதாசி எனும் நிலையில் இருந்து விடுவிக்கின்றனர். அந்த இடத்திற்கு உமாவைக் கொண்டுவர முடிவெடுக்கின்றனர்.
இன்னொருபுறம், மூளையை ஆட்டுவிக்கும் லோபோடோமி எனும் சிகிச்சைக்கு டி – 333யை உட்படுத்தத் துடிக்கிறார் மருத்துவர் பக்ஷி. ஆனால், மருத்துவர் தாரா அதற்கு ஒப்புக்கொள்வதாக இல்லை.
பாலியல் உறுப்பு சார்ந்த அவரது சோதனையில் ஒருநாள் தவறு நேர்கிறது. அதன்பிறகு, டி-333யை ‘லோபோடோமி’க்கு உட்படுத்த தாரா சம்மதிக்கிறார். அதற்குள், அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார் அந்த இளைஞர்.
உமாவும் டி-333யும் என்னவானார்கள் என்பது சங்கரின் இமயமலைப் பயணத்திற்கு ஊடாகச் சிறுகச் சிறுகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் இருவரும் ஏன் சங்கரின் நினைவுகளில் பதிந்திருக்கின்றனர் என்பதற்கான காரணத்தை, பார்வையாளர்களின் யூகங்களுக்கு எதிர்த்திசையில் நின்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் வித்யாதர் காகிடா. அதுவே, இப்படத்தின் யுஎஸ்பி.
‘காமி’ – முழுக்கவே தன்னையறியத் துடிக்கும் நாயகனின் தேடலாகவே அமைந்துள்ளது.
இறுதியில், அவர் அதனை அறிவதோடு படம் முடிவடைகிறது. அதைத் தவிர அவர் வேறெதையும் சாதிப்பதில்லை என்பதுவே இப்படத்தின் மைனஸ்.
வித்தியாசமானதொரு அனுபவம்!
இந்தப் படத்தில் சங்கராக விஸ்வக் சென் நடித்துள்ளார். கமர்ஷியல் படங்களில் கொஞ்சமாய் வித்தியாசமான முயற்சிகளைச் செய்துவந்தவர், இதில் முற்றிலும் மாறுபட்டதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறார்.
அதேநேரத்தில், அவருக்கு வெவ்வேறுவிதமான பாவனைகளை வெளிக்காட்ட இக்கதை உதவவில்லை.
சாந்தினி சவுத்ரி தெலுங்கு திரையுலகின் மிக அழகான நாயகிகளில் ஒருவர். இதில் அவருக்குக் காட்சிகள் அதிகமில்லை என்றபோதும், கருவேப்பிலையாகப் பயன்படுத்தப்படாதது ஆறுதல் தரும் விஷயம்.
ஹரிகாவின் தாயாக வரும் அபிநயா மிகக்குறைவான காட்சிகளில் வந்தாலும், ஆர்ப்பாட்டமில்லா நடிப்பினால் நம்மை ஈர்க்கிறார்.
இக்கதையில் சிடி-333ஆகத் தோன்றியுள்ள முகம்மது சமத், மிரட்சியை வெளிப்படுத்தும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்.
இவர்கள் தவிர்த்து மாயங்க் பரேக், சாந்தி ராவ் உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் நடித்துள்ளனர்.
வாரணாசி, ஆந்திரக் கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர்த்து, கொஞ்சமாய் இமயமலையைக் காட்டியிருக்கிறது ஒளிப்பதிவு.
பெரும்பாலான காட்சிகள் ‘க்ரீன்மேட்’டில் படம்பிடிக்கப்பட்டவையாக உள்ளன; ஆனாலும், விஎஃப்எக்ஸுடன் ஒன்றிணைந்து அற்புதமான தரத்தில் அமைந்திருக்கின்றன.
விஸ்வநாத், செலுமல்லா, ரம்பி நந்திகம் என்று மூன்று ஒளிப்பதிவாளர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.
‘காமி’யை நாம் ரசிக்க எந்தளவுக்கு விஎஃப்எக்ஸ் குழுவினரின் பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரவல்யா துடுபுடி குழுவினரின் பங்களிப்பும் அமைந்துள்ளது.
பனி படர்ந்த பிரதேசத்தில் சங்கரும் ஜானவியும் உரையாடுவதாக எடுக்கப்பட்ட காட்சிகளும் சரி; வாரணாசி மற்றும் தேவதாசி மரபையொட்டி அமைந்த காட்சிகளிலும் சரி; அவரது குழுவினரின் பங்களிப்பு ‘உண்மையாகவே அந்த இடங்கள் இப்படித்தான் இருக்குமோ’ என்றெண்ணத் தூண்டுகிறது.
மூன்று வெவ்வேறு களங்கள், கதாபாத்திரங்களை அடுத்தடுத்துக் காட்டினாலும், திரைக்கதை விவரிப்பில் தொய்வைச் சந்திக்காத அளவுக்கு அமைந்துள்ளது ராகவேந்திரா திருண் படத்தொகுப்பு.
நரேஷ் குமரனின் பின்னணி இசை விறுவிறுப்பான கதையோட்டத்தை நாம் உணரக் காரணமாக விளங்குகிறது. ஸ்வீகர் அவஸ்தி உடன் இணைந்து அவர் தந்துள்ள பாடல்களும் ஈர்க்கும்படியாக உள்ளன.
இயக்குனர் வித்யாதர் காகிடா உடன் இணைந்து பிரத்யுஷ் வத்யம் இதன் திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார்.
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் நகரும் மூன்று கதைகள் ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்றுசேரும் என்பது நாம் அறிந்த ஒன்று.
ஆனால், ‘அது இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ’ என்று பல யூகங்களுக்கு வழிவகுத்து, முடிவில் வேறொன்றைச் சொல்லியிருக்கும் உத்தி அருமை.
பொறுமை வேண்டும்!
அகோரி சங்கர் தனது கடந்த காலம் குறித்து அறியும் நோக்கில் மேற்கொள்ளும் பயணத்தைச் சார்ந்தே ‘காமி’ படம் அமைந்துள்ளது. அதேநேரத்தில் கிராமத்தில் இருக்கும் சிறுமி ஒருவரையும், ஆய்வகமொன்றில் கொடூரச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் ஒரு இளைஞனையும் காட்டுகிறது திரைக்கதை.
மூன்று புள்ளிகளாக உள்ள அக்களங்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வதைக் காண, நிறைய பொறுமை தேவைப்படுகிறது. காரணம், மூன்று கதைகளும் நிறையவே வெறுமையை உள்ளடக்கியிருப்பதுதான்.
போதாக்குறைக்கு மூன்றிலும் மையப்பாத்திரங்கள் அடுத்தடுத்து தோல்வியையே சந்திக்கின்றன. அது, ஒருகட்டத்தில் நம்மை அயர்ச்சியின் பள்ளத்தில் தள்ளுகிறது.
உண்மையைச் சொன்னால், அந்த மூன்று பாத்திரங்களுக்கு இடையே என்ன சம்பந்தம் என்பதை டைட்டில் காட்சிகளை முழுமையாகப் பார்த்தாலே ஒருவரால் உணர முடியும்.
அதேநேரத்தில், அதனை முன்னரே உணரத்தக்க வகையிலான சில காட்சிகளைக் கடைசி நேரத்தில் படக்குழு வெட்டிக் கடாசியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது.
அனைத்தையும் தாண்டி, ‘வித்தியாசமான படம் பார்க்க வேண்டும்’ என்ற விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்றதாக உள்ளது ‘காமி’.
அதற்கு மாறாக, நல்லதொரு தெலுங்கு மசாலா படம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இத்திரைப்படம் ஓடும் திரையரங்க வாசலைக் கூட எட்டிப் பார்க்கக் கூடாது!
– உதய் பாடகலிங்கம்