முன்முடிவுகளோடு ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும்போது பெரும்பாலும் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும். அதேநேரத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நுழைந்து மனம் நிறைய ஆச்சர்யங்களையும் ஆனந்தத்தையும் அள்ளித் தந்த திரைப்படங்கள் நிறையவே உண்டு.
அந்த வகையில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் தயாரிப்பான ‘பரியேறும் பெருமாள்’ முதல் ‘ப்ளூஸ்டார்’ வரை பெரும்பாலான படங்கள் ரசிகர்களை ஏமாற்றாமல் வித்தியாசமான அனுபவங்களைத் தந்திருக்கின்றன.
அதே பாணியில் இதுவரை பார்க்காத கதையொன்றை ரசிக்கலாம் என்ற எண்ணத்துடன் நுழைந்தால், அம்மா செண்டிமெண்டை அள்ளியிறைத்தவாறே தொடங்குகிறது ‘ஜெ பேபி’.
2கே கிட்ஸுக்கு இதெல்லாம் பிடிக்குமா, செண்டிமெண்ட் காட்சிகளுக்கெல்லாம் சிரிச்சு தொலைப்பாங்களே என்பது போன்ற கேள்விகள் மேலெழப் படம் பார்க்க அமர்ந்தால், உப்புக் கரிக்கும் கண்ணீர் வாயில் நிறைவதைக் கண்டும் காணாத அளவுக்கு ரசித்துச் சிரிக்க வைக்கிறது இந்த திரைப்படம்.
எப்படி நிகழ்ந்தது இந்த மாயாஜாலம்?
இரு துருவங்கள்!
காவல் நிலையத்தில் இருந்து போன் வருகிறது என்று தெரிந்ததும், பெயிண்டர் செந்திலும் (மாறன்) ஷேர் ஆட்டோ டிரைவர் சங்கரும் (அட்டகத்தி தினேஷ்) அடித்துப் பிடித்து ஓடுகின்றனர்.
இன்ஸ்பெக்டர் முன்னால் சென்று நிற்கின்றனர். அவரோ, ‘உங்க அம்மா பேபி இப்ப எங்க இருக்காங்க’ என்கிறார்.
இருவருமே அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். உறவினர்களுக்கு போன் செய்து வருகின்றனர். எவரிடமும் அதற்குப் பதில் இல்லை.
இறுதியாக, ‘உங்க அம்மா கொல்கத்தாவுல இருக்காங்க’ என்று இன்ஸ்பெக்டரே பதில் சொல்கிறார். ஹவுரா எக்ஸ்பிரஸில் ஏறி அங்கு சென்றவர், ஒரு ஹோட்டலில் தகராறு செய்திருக்கிறார். அதையடுத்து, அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
ராணுவத்தைச் சேர்ந்த மூர்த்தி எனும் நபர் மூலமாக, அவரிடம் தமிழில் பேசி அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இந்த முன்கதையை அறிந்துகொண்டு, செந்திலும் சங்கரும் கொல்கத்தாவுக்கு ரயிலில் ஒன்றாகப் பயணிக்கின்றனர். ஆனால், ஒரு வார்த்தை கூட இருவரும் பேசுவதில்லை. அப்படி என்ன பிரிவு?
செந்திலுக்குத் திருமணம் நடைபெற வேண்டிய நாளன்று, மணப்பெண் காதலருடன் சென்றுவிடுகிறார். உறவினர்களும் நண்பர்களும் செந்தில் மீது அவமானத்தைக் கொட்ட, அவரோ பெண்ணின் குடும்பத்தினரிடம் சண்டையிடுகிறார்.
பதிலுக்கு, மணப்பெண்ணின் தங்கை அவரை அசிங்கமாகத் திட்டி விடுகிறார். அந்த அவமானம் அவர் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது.
பின்னர், செந்திலுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகிறது. வழக்கம்போல, அவரும் குடும்பம், குழந்தைகள் என்றிருக்கிறார். அப்போது, செந்திலை அவதூறாகப் பேசிய அதே பெண்ணைக் கல்யாணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார் சங்கர்.
அதனைப் பெருத்த அவமானமாகக் கருதும் அவர், சங்கருடன் பேச்சுவார்த்தையைத் துண்டித்துக் கொள்கிறார்.
அப்படிப்பட்ட சகோதரர்களைத் தான் கொல்கத்தா போலீசாரிடம் குறிப்பிட்டிருக்கிறார் பேபி.
கொல்கத்தா சென்றதும், மூர்த்திக்கு போன் செய்து, இருவரும் தாங்கள் இருக்குமிடத்திற்கு வரவழைக்கின்றனர்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு மூவரும் செல்கின்றனர். அங்கு பேபி இல்லை. அவர் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.
போலீசாரின் கொலை வழக்கு விசாரணை, காப்பக விடுமுறை என்று அடுத்தடுத்து அவர்கள் பேபியைப் பார்க்க முடியாமல் போகிறது.
திங்கட்கிழமை நேரில் சென்றால், ‘பேபியைக் காணவில்லை’ என்கின்றனர் காப்பகப் பணியாளர்கள். அதனைக் கேட்டதும், செந்திலுக்கும் சங்கருக்கும் தூக்கிவாரிப் போடுகிறது.
’தாய் கிடைத்தபிறகு நானே தகவல் அனுப்புகிறேன்’ என்கிறார் மூர்த்தி.
சென்னை திரும்பும் வழியில், சங்கருக்குப் பெண் குழந்தை பிறந்த தகவல் கிடைக்கிறது. அடுத்த நிமிடமே, பேபி கிடைத்துவிட்டதாக போன் செய்கிறார் மூர்த்தி.
அதனைக் கேட்டதும், மீண்டும் கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டுமென்று அடம்பிடிக்கிறார் செந்தில். வேறு வழியில்லாமல் அவருடன் பயணிக்கிறார் சங்கர்.
காவல் நிலையத்திற்குச் சென்றால், ‘உங்க அம்மா சென்னையில என்ன பண்ணிட்டு இருந்தாங்க’ என்று போலீசார் ’பாட்ஷா பாணி’யில் இருவரையும் விசாரிக்கின்றனர். அப்போதுதான், பேபியின் இன்னொரு முகம் தெரிய வருகிறது.
அது எப்படிப்பட்டது? பேபி சென்னையில் காணாமல் போனது எப்படி என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
தாய் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் பிள்ளைகள் இருவரும் நினைத்துப் பார்ப்பதாக நகர்கிறது முதல் பாதி. அதில் சகோதரர்கள் இருவரும் இரு துருவங்களாக இருப்பது நம்மில் சிரிப்பையும் அழுகையையும் மாறி மாறிப் பெருக்கெடுக்க வைக்கிறது. இன்னொரு பாதியோ, இரண்டையும் ஒரேநேரத்தில் பீறிட வைக்கிறது.
அழுத்தம் நிறைந்த காட்சிகள்!
இந்த படத்தில் பேபியாக வரும் ஊர்வசி அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது ‘க்ளிஷே’வாகத்தான் தெரியும். அந்த அளவுக்குக் கனகச்சிதமாக அப்பாத்திரத்துடன் பொருந்தி நிற்கிறது அவரது நடிப்பு.
முக்கியமாக, சென்னை வட்டார மொழியில் பேசும்போது ஊர்வசியின் தனித்துவமான குரல் தொனியே மாறியிருப்பது ஆச்சர்யம்.
அட்டகத்தி தினேஷ் தான் ஏற்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் வேடத்திற்கேற்ப, கொஞ்சம் குண்டான உடல்வாகுடன் படம் முழுக்கத் தோன்றியிருக்கிறார்.
கிண்டல் கலந்த சிரிப்பு, வெளிப்படுத்த இயலாத பாசத்துடன் மாறனிடம் பேசும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
‘லொள்ளுசபா’ மாறனுக்கு இது ‘கத்தி மீது நடப்பது’ போன்ற அனுபவம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த பாத்திரமாக மட்டுமே தென்படுவது சிறப்பு.
இவர்கள் தவிர்த்து சுமார் ஒன்றரை டஜன் கலைஞர்களாவது இதில் தோன்றியிருப்பார்கள். அவர்களில் ஊர்வசியின் மகள்களாக, மகன்களாக, உறவினர்களாக நடித்தவர்கள் நம்மை ஆச்சர்யக் கடலில் மூழ்கடிக்கின்றனர்.
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரை, ஒரு பயணத்திற்கு ஈடான காட்சியனுபவத்தைத் திரையில் தருகிறது ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு.
அதற்கேற்றவாறு யதார்த்தமான களங்களிலும் வண்ணங்களை நிறைத்துள்ளது ராமு தங்கராஜின் கலை வடிவமைப்பு.
சின்னச்சின்னதாக வரும் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு நடுவே, கதையின் ‘டெம்போ’ குறையாமலும் குழப்பம் ஏதுமில்லாமலும் காட்சிகளை அடுக்கிய வகையில் கவனிப்பைப் பெறுகிறார் படத்தொகுப்பாளர் சண்முகம் வேலுசாமி.
டோனி பிரிட்டோவின் பின்னணி இசை ஆங்காங்கே சன்னமாக ஒலித்துப் பின் பிரவாகமெடுக்கிறது.
இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில், ஒரேநேரத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பதில் அவரது இசையின் பங்கு அதிகம். போலவே, பாடல்களும் மிகமெலிதாக ஒலித்து நம் மனதை ஊடுருவுகின்றன.
முக்கியப் பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பிலும் ஒப்பனையிலும் யதார்த்தம் தெரிய மெனக்கெட்டிருக்கிறது படக்குழு. அதுவே இதர நுட்பங்களையும் செறிவுமிக்கதாக மாறத் துணை நின்றிருக்கிறது.
இந்தக் கதை இயக்குனர் சுரேஷ் மாரி தனது நிஜ வாழ்வில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
அதற்கான கிரெடிட்டையும் படத்தின் முடிவில் தருகிறார். அது, தியேட்டரை விட்டு வெளியேறும்போது உறவுகளில் சிலரைப் பார்த்த அனுபவத்தை உருவாக்குகிறது.
மாறன் பாத்திரத்தின் திருமணம் நின்றுபோவது, அவரை அவமானப்படுத்திய பெண்ணின் தங்கையை தினேஷ் மணம் முடித்து வருவது, வீட்டின் மீது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதனை இழப்பது, பெற்ற பிள்ளைகள் கஷ்டத்தில் வாடுவதைச் சகிக்க முடியாமல் தாய் தவிப்பது என்று நகரும் முன்பாதிக் காட்சிகள் அழுத்தம் நிறைந்தவையாக உள்ளன.
பின்பாதியில், ‘அதுவே பரவாயில்லை’ எனும் அளவுக்குக் கண்ணீரில் நனைக்கின்றன சில காட்சிகள்.
இப்படி அழுதுகொண்டே படம் பார்த்துதான் எத்தனை நாட்களாகின்றன’ என்று நினைக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது அவற்றின் தாக்கம்.
வயது மூப்பினால் சொன்னதையே திரும்பச் சொல்லும் முதியவரைப் பார்த்து அவரது மகன் கோபப்படுவதாக ஒரு குறும்படம் கண்டிருக்கிறேன்.
‘நீ சிறு பிள்ளையாக இருக்கும்போது இதே போலத்தான் நடந்துகொண்டாய்; நான் கோபப்படவே இல்லையே’ என்று அந்த நபர் சொல்வதாக அப்படைப்பு முடிவடையும்.
இதிலும் அப்படியொரு காட்சி கிளைமேக்ஸில் வருகிறது. பானி பூரி, வெள்ளரிக்காய் வேண்டும் என்று ஒவ்வொன்றாக ஊர்வசி கேட்க, தினேஷ் அவரிடம் கோபப்படுவார்.
அப்போது, ‘நீங்க சின்ன வயசுல கேட்கறப்போ நான் வாங்கித் தரலையா; போடா, போய் வாங்கிவா’ என்பார் ஊர்வசி.
அடுத்த ஷாட்டில் அவர் வெள்ளரிக்காய் கடித்தவாறு வசனம் பேசுவார். இந்த எளிமையும் யதார்த்தமும் தான் ‘ஜெ பேபி’யின் பெரும்பலம்.
படத்தின் யுஎஸ்பி!
பெற்றோரைக் கொடுமைப்படுத்தும் அளவுக்கு, இந்த உலகில் அனைத்து பிள்ளைகளுமே கொடுமைக்காரர்கள் இல்லை. ஆனால், வறுமையும் இயலாமையும் நிறைந்த வாழ்க்கை அவர்களைச் செய்வதறியாது திகைக்க வைத்துவிடுகிறது.
இந்த படத்தில் பேபி பெற்ற மகன்களும் மகள்களும் அப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களை விட்டுப் பிரிந்து அந்த மூதாட்டி ஏன் தொலைதூரம் செல்ல வேண்டும் என்பதே இந்த படத்தின் யுஎஸ்பி.
அதனைக் கண்டபிறகு, நிச்சயமாகக் குழந்தையாக மாறிப்போன முதியோரிடம் குறைந்தபட்சம் அன்பாகக் கொஞ்சம் புன்னகையாவது அள்ளிவீசத் தோன்றும். அந்த மாற்றத்தை நிகழ்த்துவதே ‘ஜெ பேபி’யின் சிறப்பு.
வெறுமனே அம்மா சென்டிமெண்ட் மட்டுமே இதிலிருப்பதாகச் சொல்லிவிட முடியாது.
உறவுகளுக்குள் நிகழும் விரிசல்களைச் சரி செய்வதை விட, இந்த உலகில் முக்கியமானது எதுவுமில்லை என்று சொல்கிறது இப்படம்.
தடித்த வார்த்தைகளால் உடையும் மனங்கள், இளகிய வார்த்தைகளால் ஏன் சரியாவதில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.
கரிசனத்தையும் கறார்தனத்தையும் ஒரேநேரத்தில் வெளிக்காட்டுபவர்களை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுத் தருகிறது. முக்கியமாக, ‘குறையுள்ள மனிதர்களை அவர்களது இயல்புடனே ஏற்றுக்கொள்’ என்கிறது.
முடிவில், ‘இப்படியொரு ‘பீல்குட்’ படத்தைப் பார்த்துதான் எத்தனை நாட்களாயிற்று’ என்று எண்ணத் தூண்டுகிறது? அதற்காகவே, இயக்குனர் சுரேஷ் மாரி மற்றும் ‘ஜெ பேபி’ குழுவினரை மனம் நிறையப் பாராட்டலாம்!
– உதய் பாடகலிங்கம்