கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்!

அப்துல் கலாமின் அனுபவம்:

திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை – தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது.

பேப்பர் பண்டல்களை தூக்கி பிளாட்பாரத்தில் வீசுவார்கள். அதை அள்ளி எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் நகரின் வீடுகளுக்கு பேப்பர்களைப் போடுவேன்.

மற்றவர்களுக்கு முன் பேப்பர் போட்டுவிட வேண்டும் என்று தினமும் முனைப்போடு இருப்பேன். இதனால் வேக வேகமாக ஓடுவேன்.

பேப்பர் போட்டுவிட்டு 8 மணிக்கு வீட்டுக்கு ஓடி வருவேன். மிக எளிமையான காலை உணவு தான் எங்கள் வீட்டில் எப்போதும். அதிலும் கூட எனக்கு கொஞ்சம் அதிகம் தருவார் என் தாயார்.

நான் படித்துக் கொண்டே (பேப்பர் போடும்) வேலையும் பார்க்கிறேன் இல்லையா.. எனக்கு ஓட சக்தி வேண்டுமே, அதற்காக…

ஒரு நாள் இரவு என் வீட்டில் நடந்த சம்பவத்தை நான் இங்கே பகிர்வது அவசியம் என்று நினைக்கிறேன். இரவு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

நான் என் தாயார் சப்பாத்தி தரத் தர சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன். சாப்பிட்டு முடித்தபின் என் அண்ணன் என்னை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

கலாம், நீ என்ன காரியம் செய்கிறாய்.. நீ சாப்பிட சாப்பிட அம்மா சப்பாத்தி தந்து கொண்டே இருக்கிறார். அவர் தனக்காக போட்ட சப்பாத்தியையும் உனக்கே தந்துவிட்டார். நீயும் எல்லாவற்றையும் தின்றுவிட்டாய்.

இனி வீட்டில் மாவும் இல்லை, சப்பாத்தியும் இல்லை. கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள். இது கஷ்டமான காலம். தாயாரை பசியில் வாட விடாதே என்றார்.

இந்த விவரத்தை கொஞ்சமும் உணராமல் சாப்பிட்ட எனக்கு கை கால்கள் நடுங்கிவிட்டன. என்ன காரியம் செய்துவிட்டோம் என கலங்கிப் போனேன்.

ஓடிப் போய் என் தாயாரை கட்டிக் கொண்டேன். அவரிடம் தான் தியாகம் கற்றேன்.

காலை 4 மணிக்கு எழுந்து படிக்க, பேப்பர் பண்டல் தூக்க, அதை வினியோகிக்க, பள்ளிவாசல் செல்ல, பள்ளிக்கூடம் செல்ல, மாலையில் பேப்பருக்கான பணம் வசூலிக்க என ஓடிக் கொண்டே இருப்பேன்.

ஆனாலும், இரவு 11 மணி வரை படிப்பேன். நான் சாதிப்பேன் என என் தாயார் நம்பியிருக்க வேண்டும். இதனால் அந்தக் கஷ்டத்திலும் எனக்கு தனியாக ஒரு மண்ணெண்ணெய் விளக்கைத் தந்து 11 மணி வரை படிக்க என் தாயார் உதவினார்.

அது மட்டுமல்ல, அவரும் என்னோடு விழித்திருப்பார். பின்னர் என்னை தூங்க வைத்துவிட்டே அவர் உறங்குவார். என் தாயார் அன்பும் கருணையும் நிறைந்தவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புனிதத் தன்மை கொண்டவர். 5 வேலை தொழுகை புரிவார். அவர் தொழுகை செய்யும்போது ஒரு புனித தேவதை மாதிரி எனக்குத் தெரிவார்.

இவ்வாறு சொல்லும் கலாம் தனது தாயாருடன் ஒரு முழு இரவு நாளில் நடந்த சம்பவத்தை ஒரு கவிதையாய் வடித்துள்ளார்.

அந்தக் கவிதையில் தனக்காக தனது தாயார் பட்ட கவலை, குடும்பத்திற்காக தினமும் காலை 4 மணி முதல் ஓட்டமே வாழ்க்கையாக்கிக் கொண்ட தனது இளைய மகனுக்காக அந்தத் தாயார் விட்ட கண்ணீரை கவிதையாய் சொல்கிறார் கலாம். இதைப் படிப்போர் யாரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது….

‘தாய்’ என்ற தலைப்பிலான அந்தக் கவிதை:

“அம்மா… எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள்.

எனக்கு வயது 10 அது ஒரு பெளர்ணமி தினம்

என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும்,

அம்மா நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்..

திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள்
என்னை திடுக்கிட்டு எழ வைத்தன

குழந்தையின் வலிகளை தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!”
****

ஓடி ஓடி உழைத்துப் படிக்கும் மகனை வருடியபடி கலாமின் தாயார் கண்ணீர் விட அந்தக் கண்ணீரின் வெப்பத்தில் எழுந்து தனது தாயாரை பார்த்த நினைவில் கலாம் எழுதிய கவிதை இது…

அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் கலாம்…

”உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன, இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே,

இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா”!

– அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் ‘Embodiment of Love’ என்ற தலைப்பில் தனது தாயார் குறித்து ஏ.பி.ஜே.அப்துல் கலாம் எழுதியது.

#apj_abdul_kalam #அக்னிச்_சிறகுகள் #Agni_Siragugal #ஏ_பி_ஜே_அப்துல்_கலாம் #Embodiment of Love

You might also like