இதே நாளில் முந்தைய காலங்களில் வெளியான படங்கள்!

பிப்ரவரி – 4: இந்த தேதியில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன படங்கள் வெளியாகின என்று பார்க்கலாமா?

பிச்சைக்காரன்

2016-ம் ஆண்டு வெளியான இப்படம் அதிரிபுதிரி வெற்றியை ஈட்டியது.

சசி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்ததோடு இசையும் அமைத்தார்.

அவரது ஜோடியாக சாத்னா டைட்டஸ் நடித்திருந்தார்.

இதில் விஜய் ஆண்டனியின் தாயாக நடித்த தீபா ராமானுஜம் மற்றும் நண்பனாக பகவதி பெருமாள் நடித்திருந்தனர். வில்லனாக வழக்கு எண் முத்துராமன் தோன்றியிருந்தார்.

அம்மா சென்டிமெண்டை அடிநாதமாகக் கொண்ட இந்தப் படம் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

போக்கிரி ராஜா

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கிய படமிது. ஜீவா, ஹன்சிகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

சிபிராஜ் இதில் வில்லனாகத் தோன்றினார். பேண்டஸி கதையம்சத்தோடு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 2016இல் இப்படம் வெளியானது.

சௌகார்பேட்டை

ஸ்ரீகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி ராய் தோன்றியிருந்தார்.

சுமன், சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, ரேகா, வடிவுக்கரசி உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்திருந்தார்.

வரிசையாக ’ஹாரர்’ படங்கள் வெளியாகி ஹிட் அடிக்க, அந்த ஜுரத்தின் தொடர்ச்சியாக வெளியானது இப்படம். 2016இல் வெளியான இப்படத்தை இயக்கியவர் வி.சி.வடிவுடையான்.

பக்கி பயலுக

பி.பாரதிராஜா இயக்கிய இப்படமானது 2016இல் வெளியானது. இதில் அவரோடு வள்ளி, லட்சுமணன், முருகேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ப்ரூஸ் பால் இதற்கு இசையமைத்திருந்தார்.

‘பருத்திவீரன்’ பாணியில் குடி, கும்மாளம் என்றிருக்கும் நாயகனையும் அவரது நண்பர்களையும் மையப்படுத்தி அமைந்திருந்தது இதன் திரைக்கதை.

சிங்கம் புலி

2011-ம் ஆண்டு இப்படம் வெளியானது. ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தில் ஹனிரோஸ், திவ்யா ஸ்பந்தனா, பொன்வண்ணன், சந்தானம், குயிலி, மீரா கிருஷ்ணன், மாணிக்க விநாயகம் உட்படப் பலர் நடித்தனர்.

மணி சர்மா இதற்கு இசையமைத்திருந்தார். விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லராக அமைந்தபோதும், இப்படத்தில் சில கிளாமர் காட்சிகள் எல்லையைத் தாண்டி அமைந்திருந்தன. அதனால், இப்படம் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானது.

காதல் எப்எம்

’பாய்ஸ்’ மணிகண்டன், ஷிவானி சிங், அரவிந்த் ஆகாஷ், கருணாஸ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை ஜெயபிரகாஷ் இயக்கியிருந்தார். அரவிந்த் – சங்கர் இதற்கு இசையமைத்திருந்தனர். இப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது.

மண்ணின் மைந்தன்

2005ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கியவர் ராம.நாராயணன். சத்யராஜ், சிபிராஜ் உடன் சுகா, இந்து, மனோஜ் கே.ஜெயன், பொன்னம்பலம், வடிவேலு உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

பரத்வாஜ் இதற்கு இசையமைத்தார். இப்படத்திற்குத் திரைக்கதை அமைத்து தந்தவர் கலைஞர் மு.கருணாநிதி.

ராம்

2005-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் இயக்குனர் அமீர், நடிகர் ஜீவா மற்றும் சரண்யா பொன்வண்ணனுக்கு பெரியளவில் புகழைத் தந்தது.

இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

கஜாலா, ரஹ்மான், குணால் ஷா, மலையாள நடிகர் முரளி, கஞ்சா கருப்பு, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இப்படத்தை இயக்குனர் அமீர் தயாரித்திருந்தார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு இப்படத்தின் முக்கியமானதொரு அம்சமாக அமைந்தது. 2006 சைப்ரஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஜீவாவும், சிறந்த இசையமைப்புக்கான விருதை யுவன் சங்கர் ராஜாவும் ‘ராம்’ படத்திற்காகப் பெற்றனர்.

ரைட்டா தப்பா

2005ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஆர்.புவனா இயக்கிய இப்படத்தில் ரமணா, உமா, சீதா, போஸ் வெங்கட், சண்முகசுந்தரம், சூர்யகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.

எதிரும் புதிரும்

இயக்குனர் தரணி தமிழ் திரையுலகில் அறிமுகமான படமிது. இந்தப் படத்தில் அவரது பெயர் வி.சி.ரமணி என்றே இடம்பெற்றது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பல இடைவெளிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 1999-ம் ஆண்டு இப்படம் வெளியானது.

நெப்போலியன், மம்முட்டி, சங்கீதா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நாசர், சரண்ராஜ், ராதிகா உட்படப் பலர் நடித்திருந்தனர்.

வித்யாசாகர் இதற்கு இசையமைத்திருந்தார். ஏ.கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்த இப்படத்தில் சிம்ரன், ராஜு சுந்தரம் ஆடும் ‘தொட்டுத்தொட்டுப் பேசும் சுல்தானா’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் ஆராதிக்கப்படுகிறது.

பொண்டாட்டியே தெய்வம்

பி.கலைமணி கதை வசனம் எழுதிய இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியவர் ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன். பாலபாரதி இதற்கு இசையமைத்தார். 1994ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

எஸ்.வி.சேகர், சித்தாரா, ஜனகராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, லிவிங்ஸ்டன், வினு சக்ரவர்த்தி, ரூபாஸ்ரீ, ஷர்மிலி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

ஊழியன்

1994ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. அருண் பாண்டியன் நாயகனாக நடித்த இப்படத்தை அவரது சகோதரர் சி.துரைப்பாண்டியன் இயக்கினார்.

வினிதா, சரத்பாபு, மன்சூர் அலிகான், ஜனகராஜ், கீதா, விஜயசந்திரிகா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். மனோஜ் – கியான் இரட்டையர்களில் ஒருவரான மனோஜ் இதற்கு இசையமைத்திருந்தார்.

ராஜாதி ராஜா

1989-ம் ஆண்டு இப்படம் வெளியானது. பல வெள்ளிவிழாப் படங்கள் தந்த ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம் இதுவே.

இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

பஞ்சு அருணாசலம் இதற்கு திரைக்கதை அமைத்திருந்தார்.

பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.டி.பாஸ்கர் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

‘மீனம்மா மீனம்மா’, ‘மலையாளக் கரையோரம்’, ‘உன் நெஞ்ச தொட்டு சொல்லு’, ‘வா வா மஞ்சள் மலரே, ‘அடி ஆத்துக்குள்ள அத்திமரம்’, ‘மாமா உன் பொண்ணை கொடு’, ‘என்கிட்ட மோதாதே’ என்று இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் ரகத்தில் சேர்ந்தன.

ராதா, நதியா உடன் ராதாரவி, ஒய்.விஜயா, வினு சக்ரவர்த்தி, ஜனகராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், பிரதீப் சக்தி, பாலு ஆனந்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

கண் சிவந்தால் மண் சிவக்கும்

இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கி வெளிவந்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் 1983ஆம் ஆண்டு வெளியானது.

எழுபதுகளில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலையை முன்வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலைத் தழுவி அமைந்திருந்தது இப்படத்தின் கதை.

அனந்து மற்றும் ந.முத்துசாமி இருவரும் இதற்கு வசனம் வழங்கினர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார்.

சத்யஜித்ரே உடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய சௌமேந்து ராய் இதற்கு ஒளிப்பதிவு செய்தார்.

’வருஷம் 16’ படத்தில் வில்லனாகத் தோன்றிய விஜய் மேனன் இதில் நாயகனாக நடித்தார்.

பூர்ணிமா பாக்யராஜ், ஜெய்சங்கர், ராஜேஷ், கல்கத்தா விஸ்வநாதன், ஜெயமாலா, சுபத்ரா, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கியவர் ஸ்ரீதர் ராஜன். ஜெமினி கணேசன் மகள் ஜெயா இவரது மனைவி.

துடிக்கும் கரங்கள்

‘இளமை ஊஞ்சலாடுகிறது’ வெற்றிக்குப் பிறகு, ரஜினியின் மார்க்கெட்டுக்கு ஏற்ப இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய படம் இது. 1983ம் ஆண்டு இது வெளியானது.

ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், வனிதா, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்தார். தமிழில் அவர் இசையமைத்த முதல் படம் இதுவே.

உயிருள்ளவரை உஷா

இப்படம் 1983ஆம் ஆண்டு வெளியானது. இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியதோடு, இப்படத்தைத் தயாரித்து முக்கியமான வேடத்திலும் நடித்தார் டி.ராஜேந்தர். ரஜினிகாந்துக்காக எழுதப்பட்ட வேடம் அது.

ஆனால், அவர் நடிக்க மறுக்கவே அதனைத் தனதாக்கிக் கொண்டார் ராஜேந்தர். அதன்பிறகு, பல படங்களில் அவர் ஆக்‌ஷன் நாயகனாகத் திகழ்ந்தார்.

சரிதா, கங்கா, நளினி, ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி, உசிலை மணி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் கன்னடம், இந்தியில் ‘ரீமேக்’ செய்யப்பட்டது.

ஆயிரம் முத்தங்கள்

1982-ம் ஆண்டு இப்படம் வெளியானது. எஸ்.தேவராஜன் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், ராதா, சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரன், கல்லாப்பெட்டி சிங்காரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர் – கணேஷ் இப்படத்திற்கு இசையமைத்தனர்.

தியாகம்

‘அமானுஷ்’ என்ற இந்திப்படத்தைத் தழுவி உருவான இப்படம் 1978ஆம் ஆண்டு வெளியானது. கே.விஜயன் இதனை இயக்கினார். நடிகர் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

’வசந்தகால கோலங்கள்’, ‘தேன் மல்லிப் பூவே’, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ ஆகிய பாடல்கள் இதில் வரவேற்பை ஈட்டின. இப்பாடல்களைப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.

சிவாஜி கணேசனின் மாபெரும் வெற்றிப்படங்களில் இப்படமும் ஒன்றாக அமைந்தது. இதில் லட்சுமி, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெயலட்சுமி உட்படப் பலர் நடித்திருந்தனர்.

அண்ணாவின் ஆசை

1966ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. கே.பாலாஜி தயாரிப்பில் வெளியான முதல் படம் இது. ஜெமினி கணேசன், சாவித்திரி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோகர், சாரங்கபாணி, மனோரமா உடன் பாலாஜியும் இதில் நடித்திருந்தார்.

இந்தியில் வெளியான ’சாந்த் அவுர் சூரஜ்’ படத்தின் ரீமேக் இது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த இந்தி நடிகர் அசோக் குமார், இப்படத்தில் நீதிபதியாக ஒரு காட்சியில் தோன்றினார்.

கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்படத்திற்கு கமல் கோஷ் ஒளிப்பதிவு செய்தார். இதனை இயக்கியவர் தாதா மிராசி.

கொடிமலர்

ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தில் முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ், விஜயகுமாரி, எம்.வி.ராஜம்மா, காஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்தனர். இதற்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

‘ஷ்யாமளி’ என்ற வங்காளப் படத்தைத் தழுவி இதனைத் தமிழில் உருவாக்கினார் இயக்குனர் ஸ்ரீதர். 1966ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

பச்சை விளக்கு

1964ஆம் ஆண்டு வெளியான இப்படத்தினை இயக்கியவர் ஏ.பீம்சிங். சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, ஏவிஎம் ராஜன், புஷ்பலதா, எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ், நாகையா உள்ளிட்ட பலர் இதில் நடித்தனர்.

’ஒளிமயமான எதிர்காலம்’, ‘அவள் மெல்லச் சிரித்தாள்’, ‘கேள்வி பிறந்தது’, ‘தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்தனர்.

குறவஞ்சி

1960ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. சிவாஜி கணேசன், சாவித்திரி, மைனாவதி, பண்டரிபாய், ஓஏகே தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.ஆர்.சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தினை ஏ.காசிலிங்கம் இயக்கினார்.

கலைஞர் மு.கருணாநிதி இதற்கு கதை வசனம் எழுதினார். டி.ஆர்.பாப்பா இசையமைத்திருந்தார். அரச கதையைக் கொண்டிருந்த இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

மாமியார்

கே.வேம்பு இயக்கிய இப்படத்தில் ஆர்.எஸ்.மனோகர், பி.ஆர்.பந்துலு, எஸ்.வரலட்சுமி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சி.என்.பாண்டுரங்கன் இதற்கு இசையமைத்தார்.

மேற்சொன்ன படங்களில் பிச்சைக்காரன், ராம், எதிரும் புதிரும், ராஜாதி ராஜா, கண் சிவந்தால் மண் சிவக்கும், உயிருள்ளவரை உஷா, தியாகம், பச்சை விளக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன.

இதே தேதியில் வெளியாகி, மேற்கண்ட பட்டியலில் விடுபட்ட படங்களின் விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சலில் (editorialthaaii@gmail.com) பகிரலாம்.

You might also like