நம் அசலான எடை என்ன?

கவிதை:

ரத்த உறவாய்ப் பிறப்பால் இணைக்கப் பட்டவர்கள்.

காலத்தால் சொந்தமானவர்கள்.

நட்பின் பெயரால்
பழகிக் கொண்டிருப்பவர்கள்.

அலுவல், தொழில் நிமித்தம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள்.

தந்திரஜால வித்தைகளுடன் விரலில் மை பதித்து
வாக்குகளுக்கு வாடிக்கையாளராக மாற்றுகிறவர்கள்.

சூட்சும அதிகாரத்துடன் நம்மைச் சந்தைப் பொருட்களாக
ஆட்டுவிப்பவர்கள்.

சர்வதேச மயமாக வலை விரிப்பவர்கள்.

ஒவ்வொருவருக்குமே
நம்மிடம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள்.

ஒட்டுமொத்த மந்தையின் எடையைக் கூட்டப் போகிறோமா?
அல்லது மந்தையில் இருந்து தனித்திருக்கப் போகிறோமா?

நமக்கு முன்னால் காலம் எழுப்பும் கேள்வி இது தான்.

நம் புறமுதுகுகளில்
தாங்க முடியாத சுமையுடன்
நம்மை எடை போட
எத்தனை இரும்புக் கொக்கிகள்?

ஆனாலும் நமது அசலான
அடர்ந்த கனம் தெரிவதில்லை

நம்மை எடை போடும்
இயந்திரங்களுக்கு.

-மணா

#அலுவல் #தொழில் #மந்தை #முதுகு #சுமை #இரும்பு #கொக்கி #கனம் #எடை #இயந்திரம் #office #business #thozhil #weight #machine #iron

You might also like