நூல் அறிமுகம்:
தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என பன்முக அடையாளம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 – ஏப்ரல் 25, 1961). சொல்லின் செல்வர் என போற்றப்படும் இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.
உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.
தமிழே இன்பம், இன்பமே தமிழ். கம்பன், சேக்கிழார், திருப்புகழ், அருட்பா போன்ற நூல்களைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். இவை செய்யுள்கள்.
உரைநடையில் தமிழின்பம் துகர வேண்டுமானால் திரு.வி.க., சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவர்களின் செந்தமிழைச் செவிமடுக்க வேண்டும். “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்றும் சொல்லலாம்.
அவர் பேச்சு அளந்து தெளிந்து குளிர்ந்த அருவிப் பேச்சு. அவர் எப்பொருளை எடுத்து விளக்கினாலும், அது மனத்திரையில் சொல்லோவியமாக நடமாடும்.
அவர் எழுதிய “வேலும் வில்லும்”, “ஊரும் பேரும்” முதலிய நூல்கள் தமிழின்பத் தேன் துளிகளாகும்.
தமிழை அள்ளி அள்ளிப் பருக வேண்டுமா? தேனொழுகும் தமிழின் சுவையை நாவில் ருசிக்க வேண்டுமா? பால் போன்ற பழந்தமிழை பழச்சாறு போல் அருந்த வேண்டுமா? திகட்ட திகட்ட தணியாத தாகத்தை உணரவேண்டுமா?
பண்புடையோரான தமிழரைப் பற்றி அறிய வேண்டுமா? அறத்தோடு அரவணைத்த மன்னனை மணக்க வேண்டுமா? அள்ளி அள்ளி கொடுத்த அருந்தமிழரை அறிய வேண்டுமா?
இப்பதிவை வாசித்து முடித்தவுடன் விரையுங்கள் புத்தகவாசலுக்கு… ‘தமிழ் இன்பத்தை பருக வந்திருக்கிறேன் என்று கூறுங்கள். உடனே முதல் சாகித்ய அகடாமி வாங்கிய ‘தமிழின்பம்’ பாலைப் பருகுங்கள்; களிப்புருங்கள்.
கட்டுரையில் தற்போது தான் கால் வைத்தாலும் இந்நூலை எளிதாக வாசிக்க முடிந்தது. ஆனால் அதிகமாக, ஆழமாக உள்வாங்க முடியவில்லை மறைமுகமான விடயங்களை.
புறநானூற்றுக் கதைகள், சிலப்பதிகார கதைகள் இருப்பதாலும் அதை ஆசிரியர் எளிதாக விளக்கியிருப்பதாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை வாசிப்பதால், சிறிது சிறிதாக ஆழம் பார்க்க முடியுமென தோன்றுகிறது.
ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு இந்நூல் பொக்கிஷமே. செய்யுள்கள் கொட்டிக் கிடக்கிறது. என்னளவில் மேலோட்டமாக நிறைய தகவல்களையும், அக்கால வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொண்டதே மகிழ்வுக்குரியதாகும்.
இன்றைய எழுத்தாளர் கொண்டாட்டமான ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ராசவல்லிபுரம் என்ற கிராமத்தில் 1896-ல் பிறந்திருக்கிறார்.
தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியிலும், உயர்கல்வியை சேவியர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்று இளங்கலைப் படிப்பை பச்சையப்பன் கல்லுரியிலும் பயின்றார். அதே கல்லூரியில் பேராசியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
வழக்கறிஞர்; திருநெல்வேலி நகர் மன்றத் தலைவர்; மேடைப் பேச்சில் வல்லவர்; சிறந்த சொற்பொழிவாளர்.
1955-ல் வெளியான தமிழின்பம் என்ற இந்த நூலுக்காக முதல் சாகித்ய அகடாமி விருதை வாங்கியிருக்கிறார் என்பது தமிழராகிய நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று. 1961-ல் இலக்கிய உலகினின்று மறைந்தார்.
நெல்லையில் முத்துச்சாமி என்ற வள்ளல் இருந்தார். அவரிடம் சொக்கநாத புலவர் என்பவர் பாடி பரிசில் பெறுவது வழக்கம்.
ஒருமுறை முத்துசாமி வள்ளலின் மிதியடிகள் காணாமல் போய்விட்டது. உடனே சொக்கரைப் பார்த்து புன்னகை புரிந்து ‘செருப்புக்கும் திருடனுக்கும் பொருத்தமான பாட்டிசைக்கும் படி வள்ளல் வேண்ட,
“அங்கங் களவால் அதுகண் டுதைப்புறலால்
எங்கும் மிதியடியென் றேசொல்லால் – வெங்கல்
கரடுமுட்கஞ் சாத்தினால் காமர்முத்துச் சாமி
திருடனைஒப் பாகும் செருப்பு”
– என்ற பாடலைப் சொக்கன் பாடி வள்ளலிடம் பரிசில் பெற்றார். வள்ளல் முத்துச்சாமி ‘செருப்பு தொலைந்ததால் இச்செய்யுள் கிடைத்தது’ என மகிழ்ந்தாராம்.
பாடலில் உள்ள இனிப்பான இலக்கிய சுவையை சுவையுங்கள் கண்களில்.. நாவினில்.. இதயத்தினில்.
“கள்வனுக்கு அங்கம் களவு; செருப்புக்கு அங்கங்கு அளவு; கள்வனது களவு கண்டு உதைப்பார்கள்; செருப்பின் அளவு கண்டு தைப்பார்கள்; கள்வனை ‘மிதி’, ‘அடி’ என்பார்கள். செருப்பையும் மிதியடி என்பார்கள்.
கல்லும், முள்ளும், கரடும் கண்டு கள்வன் அஞ்சமாட்டான். அதுபோல கள்ளும், முள்ளும், கரடும் கண்டு செருப்பும் அஞ்சாது என சொல்லும் பாடலில் பாருங்கள் எவ்வளவு ஒரு இனிமை நிறைந்திருக்கிறது.
கள்வனையும், செருப்பையும் எவ்வளவு அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார் புலவர் சொக்கன் என்பதை, தன்னுடைய அழகிய எழுத்து நடையால் நமக்கு கூறியிருக்கும் ரா.பி. சேதுப்பிள்ளை உண்மையிலேயே ‘செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை’ தான்.
மேலோட்டமாக நான் தெரிந்து கொண்டவை ஏராளம். முற்கால போர்முறை (அறத்துடன் போர் புரிந்தது), பழந்தமிழ் என்ற தலைப்பில் உபயோகித்த பந்தல் என்ற சொல் எங்கெல்லாம் ஒரே மாதிரியாகவும், சில இடங்களில் எதிர்மறையாகவும் பயன்பட்டதையும், ‘பையப் போ’, கோட்டிக்காரன் (பைத்தியக்காரன்) என்ற சொல் இன்றும் நெல்லையில் வழக்கில் உள்ளதாகவும், பாரியின் வள்ளல் தன்மை, குமணன் தலை கொடுக்க முன் வந்தது, தமிழ் இசை விழா தலைப்பில் பொங்கலைப் பற்றியும், மாட்டுப் பொங்கல் பற்றி கூறியிருப்பதாகவும் இந்நூலில் குறிப்பிட்டிருப்பார்.
காவிய இன்பத்தில் சீதை கண்ணகி இருவரின் காதல் பற்றியும், கற்பனை இன்பத்தில் முருகனை பற்றியும், அறிவும் திருவும் தலைப்பில் அதிகமான் – ஔவையார் பற்றியும், பாரி கபிலர் பற்றியும், மொழி-நெறி தலைப்பில் ‘அன்பே சிவம்’ என்ற பாடலோடு சைவம் மதத்தை உயர்த்திக் கூறியிருப்பார். புத்த மதம் பற்றியும் கூறியிருப்பார்.
இருமையில் ஒருமை தலைப்பில் கர்ணனும் கும்பகர்ணனும் பற்றியும் கூறி அதற்கான நிகழ்வையும் முன்னிருத்திருப்பார்.
செய்யுளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த நூலாக அமையும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. என் போன்றவர்கள் படிக்க படிக்கத் தான் ஆர்வமும், கற்றுக்கொள்ளக்கூடிய திறனும் அதிகரிக்கும் இதுபோன்ற நூல்களைப் படிப்பதால்.
பிறமொழி தவிர்க்க விரும்புவோர், தமிழார்வம் கொண்டோர் துணிந்து களத்தில் இறங்கலாம்; மகிழலாம்; மண்ணை அதிகமாக நேசிக்கலாம். மொழி வளத்தை பெருக்கலாம்.
தமிழ் இலக்கியத்தின் மறு மலர்ச்சிக்கு பாட்டால் வழி கண்டவர் பாரதியார்; பதிப்பால் வழி கண்டவர் உ.வே.சா; பத்திரிகையால் வழி கண்டவர் திரு.வி.க. எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் வழி கண்டவர் ரா.பி.சேதுப்பிள்ளை.
அவரின் எழுத்துக்கள் எக்காலத்தவரும் படிக்கும் படியாக ஈர்க்கும் எளிய நடையிலும், எதுகை மோனை வடிவிலும் இருக்கிறது.
வாசித்து இன்பம் பெறலாம்; துன்பம் நீங்கலாம்; மகிழலாம்; தமிழ் சிறக்க வழி வகுக்கலாம்.
தேன் சிந்தும் இந்த முதல் சாகித்ய அகடாமி வாங்கிய ‘தமிழின்பம்’ என்ற இன்பத்தை வாசிக்காமல் இதுவரை வாழ்ந்தது தமிழுக்கு நாம் செய்யும் இழுக்கு. வாசித்து இன்பத்தோடு மடிவது நம் தாய் மொழிக்கு செய்யும் புகழ்; மரியாதை; பெருமை.
-தமிழின்பத்தில் மூழ்கியவனாய் ரசல்.
****
புத்தகம்: தமிழின்பம்
ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை
தலைப்பு: துறைசார் நூல்கள்
காப்பியா வாசிப்பகம்
பக்கங்கள்: 270
விலை: 150