என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை!

உணர்ச்சிகளின் சுவட்டில்: தொடர் -1 / – தனஞ்ஜெயன்

நம் எல்லோருக்குமே நம்மைப் பற்றி அறிந்து கொள்வதில் உள்ள ஆசை அளவிட முடியாது. இதை பல விதங்களில் வெளிப்படுத்துகிறோம்.

நம்மைப் பற்றிய பிறரது அபிப்பிராயங்களை தெரிந்து கொள்வதில் எந்த அளவுக்கு ஆசையாக இருக்கிறோம் என்பதை சிறிய உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதை யார் சொன்னாலும் சரி.

அது பற்றிய உணர்ச்சிகள் நினைவுகள், எண்ணங்கள் வருவதைத் தவிர்க்கவே முடியாது. அது இரண்டு வயது குழந்தையிடமிருந்து வந்தாலும் கூட, அது நமக்கு முக்கியம்தான். அது நாம் பெற்ற குழந்தையானாலும் சரி.

‘உனக்கு அம்மா புடிக்குமா, அப்பா புடிக்குமா சொல்லு’! என கேட்காத பெற்றோர்கள் யாருமே இருக்க முடியாது.

குழந்தை அப்போதைய அதன் மன நிலைக்கு எற்றாவாறு எதையாவது சொல்லும். உஷாரான குழந்தையாக இருந்தால், ‘இரண்டு பேரையும் பிடிக்கும்’ என்று சொல்லி தப்பித்துக் கொள்ளும்.

ஒரு வேளை அந்தக் குழந்தை, அம்மாவையோ, அப்பாவையோ பார்த்து, உன்னைதான் பிடிக்கும்’ என சொல்லி விட்டால், மற்றவர் மனதில் நிராசை, சற்றே எரிச்சல், சிறு கலக்கம் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் வந்தாலும் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவார்.

 ஆனால், அது பற்றிய நினைப்பு அவ்வப்போது வராமல் இருக்காது. இதிலிருந்து ஆரம்பித்து, பெற்றோர், உடன் பிறந்தோர், காதலன், காதலி, கணவன் – மனைவி ஆகியன உள்ளிட்ட அனைத்து உறவுகளிலும், ‘நான் மற்றவர் மனதில் எப்படி இருக்கிறேன்?’ என்பதை அறிந்துகொள்ள எப்போதும் விரும்புவார்கள்.

இந்த அடிப்படை ஆவலைத் தெரிந்துதான், சோதிடம், எண்கணிதம் என ஆரம்பித்து, மாந்த்ரீகம், ஆன்மீகம் என எதையும் நாம் விடுவதில்லை. அந்த துறைகள் இதை பணமழையாக எளிதாக மாற்றுகின்றன.

இதே போலத்தான் நமக்கு மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில், தணியாத, தீராத ஆவலும், விருப்பமும் இருக்கும்.

இந்த ஆவல்தான், பத்திரிகைகளில் கிசுகிசுக்களில் இருந்து, தினப்படி விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் சீரியல்களின் மெகா வெற்றிக்குக் காரணம்.

கடந்த சில வருடங்களாக, நமது இந்த வகையான ஆவலுக்கு, நேரடியாகத் தீனி போடும், பிக்பாஸ் வகையறா, வளரும் டிஆர்பியுடன் சக்கைப் போடு போடுகிறது.
இது அனைத்திற்கும் அடிப்படையான தேவை என்று பார்த்தால் நம்மை நாம் புரிந்து கொள்வதுதான்.

எல்லோருக்கும் இதற்கான ஆசை இருக்கிறது. ஆனால் அது பல சமயங்களில் முடியாமல் போகிறது. அப்படியே தெரிந்து கொண்டாலும் அது நமக்குப் பிடித்து இருந்தால், ஏற்றுக் கொள்கிறோம். இல்லா விட்டால், அதன் இருப்பையே மறக்க, மறுக்க சடுதியில் தயாராகிறோம்.

பெரும்பாலான நேரங்களில், நாம் கண்ணாடியில் நம்மைப் பார்க்கும்போது கூட, ‘எதெல்லாம் இருக்கிறது?’ என்பதைப் பார்ப்பதில்லை.

எதெல்லாம் இல்லை, அதாவது என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பதைத்தான் பார்க்கிறோம் என்பது நமக்கே தெரியும்.

இதை விட மோசமான எண்ணமாக, நம்மை நாம் பார்க்கும்போது, நமக்கு மற்றவரின், அண்டை அயலாரின், போட்டியாளரின், முகத்தைப் பார்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதை கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில்,
”என் வீட்டுக் கண்ணாடி
என் முகத்தைக் காட்டவில்லை”
எனக் குறிப்பிட்டு இருப்பார்.

இதெல்லாம் ஏன் நிகழ்கிறது என்றால், நம்மை, நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யாதுதான். நாம் என்றால் எவையெல்லாம் சேர்ந்து? உடல், உள்ளம் என்று எளிதாகச் சொல்லி விடலாம்.

உடலை நம்மால் பார்க்க முடியும். உள்ளத்தை பார்ப்பதும் முடியும். அதில் தோன்றும் எண்ணங்கள் அவை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டால் முடியும்.

உணர்ச்சிகள் என்றால் என்ன? நமக்கு ஏற்படும் மனோரீதியான பதில் வினைகள் / எதிர்வினைகள் அதுவும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தோடு வெளிப்படுபவை.

இது வெளிப்படும்போதே உடலிலும், உளவியல் ரீதியிலும் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டாக்கத் தவறுவதே இல்லை.

இப்படிப்பட்ட மிக முக்கியமான, நம்மை ஆளுமை செய்கிற, நமது எண்ணங்கள் வெளிப்படும் வழிகளாக இருப்பவற்றைப் பற்றி நாம் புரிந்து கொள்வது மிக முக்கியம்.

இதைப் புரிந்து கொண்டாக வேண்டியதன் முக்கியக் காரணம், அவை அபாயமான தொற்று நோயைப் போல உடனடியாக தனது அலைகளை அல்லது கதிர்வீச்சுகளை சுற்றிலும் பரப்புபவை.

இதை நிரூபிக்க அமெரிக்காவில் மிகச் சிறிய ஆய்வு மூன்று பேர்களை வைத்து நடத்தப்பட்டது. மூவரும் வெவ்வேறு உணர்ச்சி நிலைகளில் உள்ளவர்கள். ஒரு வட்ட மேசையில் அமர வைக்கப்பட்டார்கள். யாரும் எதுவும் யாரிடமும் பேசக் கூடாது. அதுவும் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே.

அந்த மூவரில் மிகு உணர்ச்சியுள்ள ஒருவர் எதுவும் – பேசாமலே தனது உணர்ச்சி, மற்றவர்கள் மேல் தாக்கம் ஏற்படச் செய்தார். அவர் எந்த உணர்ச்சியின் வசப்பட்டு இருந்தாரோ, அதை மற்றவர்களால் எளிதில் உணர முடிந்தது.

மிகப் பிரபலாமான உளவியல் மருத்துவரும், அந்தத் துறையின் மிக மூத்தவருமான சிஜெ ஜங்க், ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

உணர்ச்சிகள் வெகு விரைவில் கிளைபரப்பக் கூடியன.

உளவியலில் பயிற்சி பெற்ற மனநல நிபுணராக இருந்தாலும், அவரிடம் சிகிச்சைக்கு வரும் நபரின் உணர்ச்சியை விட்டுத் தள்ளி இருப்பது முடியாதது.

அது அவருள் நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்கிறார்.

இதுவும் கூட நமது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதற்கு மிக முக்கியமான காரணியாக இருக்கிறது.

உணர்ச்சிகள் கணக்கற்றவை என சுலபமாக சொல்லி விடலாம். ஆனால் அதையும் கூட மிகப் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு ஒரு எண்ணிக்கையில் கொண்டு வந்திருக்கிறார் ராபர்ட் புளுசிக் என்பவர்.

இவர் பிரித்திருக்கும் உணர்ச்சிகளின் எண்ணிக்கை 34,000. அதற்கெனெ ஒரு சக்கரத்தையும் உருவாக்கியிருக்கிறார். எல்லாமே தனித்துவமான உணர்ச்சிகள் எனவும் கூறியிருக்கிறார்.

அதே சமயத்தில் எதுவுமே தன்னந்தனியாக இருப்பதில்லை எனவும் குறிப்பிடுகிறார். அதனால்தான் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை என்கிறார்.

பெரும்பாலோருக்கு மிக எளிதாக சில உணர்ச்சிகளைப் பற்றித் தெரியும். பொதுவாக ராஜ உணர்ச்சிகள் ஏழு. அதாவது ராஜாவைப் போல முன்னுக்குத் தெரிவதும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, அதன் அடையாளம் பற்றி எளிதில் தெரிய வைப்பதனால் இந்தப் பெயர்.

அவை கோபம், பயம், மகிழ்ச்சி, துக்கம், அருவெறுப்பு, ஆச்சர்யம், வெறுப்பு இவைதாம் நமது வாழ்வில் இன்பத்தை, துன்பத்தை, நல்லதை, கெட்டதை, திருப்தியை, அதிருப்தியை, நிம்மதியை, கலக்கத்தை, தெளிவை, குழப்பத்தை உருவாக்குகின்றன.

அதனால் இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வது முக்கியமானது.

அதிலும் கூட நம்மை தொந்திரவு செய்யும் உணர்வுகளைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம். அதில், கோபம், பயம், துக்கம், வெறுப்பு, அருவெறுப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

முதலில் நாம் எவ்வளவுதான் அறிவுள்ளவராக, எதையும் ஆராய்ந்து சரியாக முடிவெடுப்பவராக இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதற்கு அதனோடு சேர்ந்த உணர்ச்சி கலக்கவில்லை என்றால், நம்மால் எந்த விதமான முடிவையும் எடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சாதாரணமாக, ‘எந்த முடிவெடுத்தாலும், உணர்ச்சி வசப்படாமல், நிதானமாக யோசித்து முடிவெடுத்தால், நாம் பாதிக்கப்பட மாட்டோம் என்பது நமக்கு காலங்காலமாக சொல்லி வரப்பட்ட ஒரு விஷயம்.

ஆனால், நாம் எடுக்கும் மிக நுணுக்கமான முடிவிலிருந்து பல விஷயங்களை உள்ளடக்கிய முடிவுகள் வரை உணர்ச்சிகள் கலவாத முடிவு இருக்கவே முடியாது.

இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் அதைத் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு நேரடியாக உணர்ச்சிகள் சார்ந்த புரிதல்களுக்குள் செல்வோம்.

தொடர்ந்து வாசிப்போம்…

You might also like