கி.ராவுக்கு மட்டுமே கைவரப்பெற்ற எழுத்து நடை!

மலர்களிலிருந்து தேனை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கிக் கிடப்பதற்கு சமமானது கரிசல் இலக்கியத்தின் பிதாமகனான கி.ரா.வின் எழுத்துகளை வாசிப்பது.

வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒருவித மாய போதைக்குள்ளே சிக்கி மீண்டு வர இயலாது, அதைப் பற்றிய சிந்தனையோடே அடுத்து வரும் பொழுதுகளைக் கழிக்க வைக்க கி.ரா. அவர்களால் மட்டுமே முடியுமென்ற வார்த்தைகளில் எள்முனையளவும் மிகையில்லை.

1970-80 களில் பல்வேறு இதழ்களில் கி.ரா. எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

இதில் முதல் சிறுகதை ‘வால் நட்சத்திரம்’. பெண் பிள்ளைகளின் உடலியல் ரீதியான வளர்ச்சியை – நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி என்ற பருவத்திலிருந்து பெரிய மனுசியாய் அவர்கள் கண்ணிமைக்கும் நேரமாய் தோன்றக் கூடும் பொழுதினில் மாறக் கூடிய மாயத்தை இச்சிறுகதையில் கூறியிருப்பார்.

அவர்களின் வளர்ச்சியை அவர் இயற்கையோடு ஒப்பிடும் ஒவ்வொரு இடமும் நம்மை சிலிர்க்க வைக்கும். அந்த எழுத்து நடை நிச்சயம் கி.ரா.வுக்கு மட்டுமே கைவரப்பெற்றது எனலாம்.

இரண்டாவது சிறுகதையான ‘கீரியும், பாம்பும்’ திருமணமான ஒவ்வொரு ஆணும் படும் அவஸ்தையினை அப்பட்டமாய் காட்டுகிறது.

”உனக்கு நான் முக்கியமா? அல்லது உங்கள் அம்மா முக்கியமா?” ஏறக்குறைய திருமணமான ஒவ்வொரு ஆணும் ஏதோவொரு சங்கடமான தருணத்தில் இவ்வினாவினை தன் மனைவியிடமிருந்து எதிர்கொண்டிருப்பான்.

அதுபோன்றதொரு தர்ம சங்கடமான சூழலைச் சந்திக்கும் நவனீது என்னும் மனிதனைப் பற்றிய கதையிது.

இதில் ஏகப்பட்ட சொலவடைகளை கி.ரா. பயன்படுத்தி இருப்பார்.

அதிலொன்று இது : “வெடித்துக் கீறிய வெள்ளரிப் பழத்துக்குப் பூண் பிடித்து வைத்தால் நிற்குமா?”

நூல் முழுதும் அனைத்துக் கதைகளிலும் இதுபோன்ற ஏராளமான எளிய கிராமத்து மக்களின் அனுபவப் பூர்வமான சொலவடைகள் பலவுண்டு.

‘புவனம்’ என்ற சிறுகதையில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியில்லாத பெண்ணினை விவரிக்கையில், ”இந்த நாட்டின் வளர்ச்சியைப் போல் இவளும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்” என்பார்.

இதை விட ஒரு நாட்டின் பொருளாதார நிலையினை எளிதாய் சுட்டிக்காட்ட எவரால் இயலும்?

வயதான பின்னும் வளரும் ஆசைகளை அடக்க இயலாது தவிக்கும் ஒரு கிழத்தின் மனவோட்டத்தினை ‘காலம் கடந்து…’ எனும் சிறுகதை அழகாய் படம்பிடிக்கிறது.

வயதான காலத்தில் பிள்ளைகளின் கையை எதிர்பார்த்து கையில் கால் காசு இல்லாது நினைத்ததைக் கூட வாங்கி சாப்பிட முடியாது அவதிப்படும் நிலையை திருமான் பாத்திரம் மூலமாக நமக்கு உரைக்கும் வகையில் சொல்லிச் செல்கிறார் ‘பலம்’ சிறுகதையில்.

புத்தகங்களோடே வாழ்ந்த மனிதனை மனைவியும், மகனும் வெறுத்து அவர் இறந்த பின் அவரோடு சேர்த்து அவர் சேகரித்து வைத்திருந்த அத்தனை புத்தகங்களையும் எறித்த வேங்கடத்தின் கதை தெரியுமா உங்களுக்கு? ‘புத்தக உலகம்’ என்ற அச்சிறுகதையினை வாசிக்கையில் கண்களில் கண்ணீரே மிஞ்சுகிறது.

இன்னும் இன்னும் ஒவ்வொரு சிறுகதையினைப் பற்றியும், அதன் கதை மாந்தர்களையும் அவர் தம் குண இயல்புகளையும் கி.ரா. படைத்துள்ள பாங்கினைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொண்டே போகலாம்.

கி.ரா. என்னும் அமிர்தக் கடலின் போதைக்கரங்களில் சிக்கி வெளிவர வழியின்றி திணறி இன்பமாய் அக்கடலிலேயே நீந்த இப்புத்தகம் ஒரு சிறுதுளியே.

வாருங்கள். வாசிப்போம். வாசிப்பே வாழ்வை வளப்படுத்தும் பேராயுதம் என்பதை உலகிற்கு உணர்த்த வாசிப்போம். வளர்வோம்.

-திவாகர். ஜெ

– நன்றி: ‘புக் டே’ இதழ்

*******

நூல் : அப்பா பிள்ளை அம்மா பிள்ளை
ஆசிரியர் : கி. ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம் பதிப்பகம்
பக்கங்கள் : 141
விலை : ரூ. 65/-

You might also like