– எழுத்தாளர் இந்திரன்
தெருக்கூத்தில் ஆண்கள் மட்டுமே பங்கெடுப்பார்கள் என்பதால் ஒருவருக்கொருவர் எளிமையாக ஒப்பனை செய்து கொள்வார்கள். சாம்பல், அடுப்புக்கரி, சுண்ணாம்பு, செம்மண் என்று கையில் கிடைத்தது எல்லாம் பயன்படுத்துவார்கள்.
கண்ணிலே மை, முகத்திலே பல வண்ணங்கள், கவச குண்டலங்கள், காகிதத்தில் செய்த கிரீடம், புஜகட்டைகள், சவுரி முடி வைத்து புடவைகளை ஒன்றின் மீது ஒன்றாக தன் உடம்பில் மீது சுற்றிக்கொண்டு பருமனாகக் காட்டி தமிழ் அழகியல் பூர்வமான ஒரு ஒப்பனையை இவர்கள் உருவாக்குகிறார்கள்.
“தாடியாம் தாடியாம்
ராமனுக்கு தாடியாம்
ஜோப்பில் இரண்டு பீடியாம்
அதைப் பிடிச்சாலும் பீடையாம்”
என்று புகைப்பிடித்தலை ராமாயணத்துக்குள் நுழைத்து பேசும் தற்கால தன்மை கொண்டது தெருக்கூத்து.
சிலப்பதிகாரம் தெருக்கூத்தின் ஒரு முன்னோட்டம் என்கிற கருத்து கூட ஆய்வாளர்கள் இடையே உண்டு.
அதே நேரத்தில் தொல்காப்பியத்தில் கூத்தர் பற்றிய குறிப்புகளும், பத்துப்பாட்டில் மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படுதலும் தெருக்கூத்தின் தொன்மையைக் குறிப்பவை.
இத்தகைய தொன்மையான தமிழர்களின் நிகழ் கலை வடிவத்தை காப்பாற்றி மென்மேலும் முன்னேற்றி நாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.
ந. முத்துச்சாமி இதற்காகவே கூத்துப் பட்டறை என்று ஒன்றை உருவாக்கினார். கேரளாவில் கதகளி வடிவத்தையும், கர்நாடகாவில் யட்சகானா வடிவத்தையும் காப்பாற்றி வளர்த்தெடுத்தது போல நாமும் தெருக்கூத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
பொதுவாக தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வாதாரம் இல்லாமையால் இரவில் கூத்து கட்டி விட்டு வயல் வேலை கட்டட வேலை போன்றவற்றுக்கு சென்று விடுகிறார்கள்.
கோயில் திருவிழாக்களிலும் இப்போது சினிமா இசை பாடல்களை மேடை ஏற்றுவதும், ஆபாச நடனங்களுக்கு இடம் கொடுப்பதுமாக போய்விடுவதால் தெருக்கூத்து கவிஞர்களுக்கு வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது.
தெருக்கூத்து கலையை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டெடுக்க வேண்டும்.
– நன்றி: முகநூல் பதிவு