தனுஷ்-50: இன்னொரு அக்னி நட்சத்திரமா?!

‘அவரைப் போல இவர் இருக்கிறார்’, ‘அவரின் சாயல் சில இடங்களில் இவரிடம் தென்படுகிறது’, ‘சில விஷயங்களில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு’ என்று இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நடிப்புக்கலைஞர்களை ஒப்பிடுவது தமிழ் சினிமா ரசிகர்களின் வழக்கம்.

அப்படிப்பட்ட ஒப்பீடுகளுக்குள் அடங்காமல் அன்று முதல் இன்று வரை சவாலாகத் திகழ்பவர்களில் ஒருவர் தனுஷ். காரணம், இவரது தனித்தன்மை.

அது மட்டுமல்ல, இவரது சாயலை, பாதையை, நடிப்பை இன்னொருவர் பின்பற்றுவதும் கூட கடினம் என்றே திரையுலகினரால் கருதப்படுகிறது. காரணம், தனுஷின் தனித்துவமான ஆளுமை.

தனித்துவமான பாதையில்..!

‘விருப்பமில்லாமல் முதல் படத்தில் நடித்தேன்’ என்பதுதான் தனுஷ் தனது முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ குறித்துச் சொல்லும் வார்த்தைகள். அவரது குடும்பத்தினரும் கூட அதையேதான் வழிமொழிகின்றனர்.

ஆனால், அந்த படத்தின் ஒரு பிரேமில் கூட அப்படியொரு உணர்வை அவரிடத்தில் கண்டெடுக்க முடியாது.

அவ்வளவு ஏன், இரண்டாவது படமான ‘காதல் கொண்டேன்’னுக்காகப் பல ஆங்கிலம் மற்றும் மேற்கத்திய மொழி நடிகர்களின் நடிப்பைத் தொடர்ந்து பார்த்து, ரசித்து உள்வாங்கியிருக்கிறார் தனுஷ்.

விருப்பமே இல்லாமல் நடிக்கும் ஒருவர் ஏன் அத்தனை பிரயத்தனப்பட வேண்டும்? ஆனால், அதன் இயக்குனர் செல்வராகவன் சொன்னதைச் செவ்வனே செவிமடுத்துச் செயலாற்றி இருக்கிறார்.

அதற்கேற்ப, அந்த படத்தில் தனுஷின் நடிப்பு ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தது.

எடுத்துக்கொண்ட வேலையைச் செவ்வனே செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் மட்டுமே, அப்படியொரு அர்ப்பணிப்பைக் கொட்ட முடியும்.

மூன்றாவது, நான்காவது படமாக ‘திருடா திருடி’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ வெளியாகிப் பெரியளவில் வெற்றியைப் பெற்றன.

அதன்பிறகு விஜய், அஜித்துக்குச் சவால் விடும் வகையில் ‘சுள்ளான்’ படத்தில் ஹீரோயிசத்தை கொட்டியிருந்தார் தனுஷ்.

சுமாரான வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய அப்படம், அந்த ஒரு காரணத்தாலேயே பெருங்கிண்டலுக்கு ஆளாகித் தோல்வியைச் சந்தித்தது.

மீண்டும் ‘துள்ளுவதோ இளமை’ பாணியில் அமைந்த ‘ட்ரீம்ஸ்’, நகைச்சுவை நடிப்பை தனுஷுக்கு அறிமுகப்படுத்திய ‘தேவதையைக் கண்டேன்’, இளமையின் துள்ளலை யதார்த்தத்துடன் சொன்ன ‘அது ஒரு கனாக்காலம்’, இளம் கேங்க்ஸ்டரின் வன்மத்தையும் ரௌத்திரத்தையும் சொன்ன ‘புதுப்பேட்டை’ என்று எல்லாமே வித்தியாசமான படங்கள்தான்.

ஆனால், அவை மாபெரும் வெற்றியைப் பெறவில்லை. அதனால், தோல்வி வரிசையில் சேர்ந்தது.

‘இனி வெற்றி பெறவே வாய்ப்பில்லை’, ‘தனுஷ் ஒரு ஒண்டைம் ஒண்டர்’ என்ற பேச்சு எழுந்த காலகட்டம் அது. பல்வேறு தடைகளைத் தாண்டி தன்னிலையில் உறுதி காட்டினாலும், எந்தப் பாதையில் செல்வதென்ற தீர்மானத்திற்கு வர இயலாமல் தவித்த காலம் அது.

’பையன்’ என்ற பிம்பத்தை உடைத்துக்கொண்டு ‘ஆடவன்’ எனும் நிலை நோக்கி அவர் நகர்ந்த வேளை அது.

அதுவரை சீரியஸான பாத்திரங்களில் தனுஷ் எப்படி நடிப்பார் என்பதற்குப் பல உதாரணங்கள் இருந்தன. ஆனால், முழுமையான கமர்ஷியல் படத்தில் எப்படி அவர் வெளிப்படுவார் என்பது தெரியாமலிருந்தது.

அதற்கு உதாரணம் தரும் வகையில், ‘திருவிளையாடல் ஆரம்பம்’ இருந்தது. அது, தடைகளைத் தாண்டி புதிய உயரத்தில் அவரை ஏற்றி வைத்தது. அன்று முதல் தனக்கென்று தனித்துவமான பாதையில் பயணிக்கத் தொடங்கினார் தனுஷ்.

வெற்றிகளின் கதகதப்பு!

2007இல் வெளியான ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, தனுஷ் நடித்த ‘ரீமேக்’ படங்களில் ஒன்று. ஒரிஜினல் படத்திலுள்ள பாத்திரத்தைத் தனது பாணிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற பாடத்தை அவருக்குக் கற்றுத் தந்த படம் அது.

அதன்பிறகு ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’, ‘சீடன்’ என்று தொடர்ச்சியாகச் சில ரீமேக்குகளில் நடித்தார்.

அவற்றில் அவரது தனித்துவமான நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

2007இல் வெளியான ‘பொல்லாதவன்’, ‘2009இல் வந்த ‘படிக்காதவன்’ இரண்டும் ஆக்‌ஷன் பாத்திரங்களிலும் தனுஷ் அசத்துவார் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறின.

அப்பாத்திரங்களில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியதோடு, சிறப்பான நடிப்பாற்றலும் தெரியும் வகையில் தோன்றியிருந்தார்.

2011ஆம் ஆண்டு ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு வகைமை படங்களில் நடித்தார். அதற்கடுத்த ஆண்டு ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ‘3’ படத்தில் நாயகன் ஆனார்.

2013இல் சிவகார்த்திகேயனை நாயகனாக்கி ‘எதிர்நீச்சல்’ தந்தார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ வழியே இந்தியில் அறிமுகம் ஆனார். ’ஷமிதாப்’பில் அமிதாப் பச்சன் உடன் ஒரே பிரேமை பகிர்ந்துகொண்டார்.

2014இல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’, ஒரு கமர்ஷியல் படத்திற்கான ‘பெர்பெக்ட்’ உதாரணமாக அமைந்தது.

சராசரி மனிதர்களைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள், எளிமையான களம், சாதாரணமானதொரு கதையைக் கொண்டு மிகச்சிறப்பான படத்தைத் தர முடியும் என்று நிரூபித்தது. பல நடுத்தரக் குடும்பங்களில் தனுஷும் ஒருவராக மாறக் காரணம் அந்தப் படம் தான்.

முழுக்க மசாலாத்தனமான சினிமாவான ‘மாரி’, சினிமாத்தனத்தின் ஜிகினாவை சிறியளவில் பூசிக்கொண்ட கேங்க்ஸ்டர் படமான ‘வடசென்னை’, சமூகத்தில் ஒடுக்குதலுக்கு ஆளாகும் மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் நமக்குக் கடத்திய ‘அசுரன்’ என்று வெவ்வேறுவிதமான திரைப்பதிவுகளில் தன்னைப் பொருத்திக் கொள்ள அவரால் முடியும்.

பாத்திரத்தின் தன்மையையும் அளவையும் மிகச்சரியாகப் புரிந்துகொண்ட கலைஞர்களுக்கே வாய்க்கும் திறமை அது.

அதனாலேயே, தனுஷால் ‘எனக்கு ராஜாவா நான் வாழறேன்’ என்று கொட்டமடிக்கவும் முடியும்; ’திருச்சிற்றம்பலம்’ போன்றதொரு படத்தில் மிஸ்டர் பலம் எனும் சாதாரண ஒரு மனிதனாகத் திரையில் மிளிரவும் முடியும்; ’தி க்ரே மேன்’ எனும் சர்வதேசப் படமொன்றில் ‘லோன் வுல்ஃப்’ ஆக ஆக்‌ஷன் காட்டவும் முடியும்.

அந்த வரிசையில், ‘கேப்டன் மில்லர்’ குறித்த விமர்சனங்களைக் காதில் வாங்காமல் தனது அடுத்த படமான ‘ராயன்’னில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார் தனுஷ்.

அதன் இறுதிக்கட்டத் தயாரிப்புப் பணிகளை முடித்த கையோடு, அடுத்த தலைமுறையின் இளம் நட்சத்திரங்களை உருவாக்கும் முனைப்பில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் படத்தை இயக்கியும் வருகிறார்.

அடுத்து, ஐம்பத்தோராவது படத்திற்கான வேலைகளிலும் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறார். இந்த தொடர் உழைப்புதான் தனுஷின் புகழை அலையலையாக ரசிக மனங்களில் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது; வெற்றிகளின் கதகதப்பை தொடர்ந்து உணரச் செய்கிறது.

50வது படம்!

இருபத்திரண்டு ஆண்டுகளில் 50 படங்கள் நடிப்பதென்பது இன்றைய காலகட்டத்தில் சாதனைதான். ஏனென்றால், ஆண்டுக்கு ஓரிரு படங்கள் நடித்தாலே அதிகம் என்ற மனநிலைக்குப் பல நட்சத்திர நடிகர்கள் வந்துவிட்டார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்துகொண்டே சமகால வெற்றியாளர்களோடு போட்டியிடுவதென்பது சாதாரண விஷயமில்லை.

அந்த வகையில், தனது 50வது படம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தோடு ‘ராயன்’ படத்தைத் தனுஷ் தருவார் என்று நம்பலாம். காரணம், அதன் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரே அதனைச் சொல்லிவிடுகிறது.

அதில் தனுஷோடு ஜெயராம் காளிதாஸும் சந்தீப் கிஷனும் இருக்கின்றனர். இருவருமே முறையே மலையாளம், தெலுங்கோடு தமிழிலும் குறிப்பிடத்தக்க படங்களில் பங்களிப்பைத் தந்து வருபவர்கள். வேறுபட்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள்.

முக்கியமாக, இளைய தலைமுறையின் கவனத்தை ‘ஸ்வாகா’ செய்வதற்கான வேட்கையோடு காத்திருப்பவர்கள். இன்னும் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்படப் பல திறன்மிக்க கலைஞர்கள் ராயனில் உண்டு.

அவர்களது குவியலே ‘ராயன்’ நிச்சயமாக மணிரத்னம் தந்த ‘அக்னி நட்சத்திரம்’ போன்று ’க்ளாஸ் அண்ட் மாஸ்’ படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

கமர்ஷியல் படங்களுக்கான அம்சங்களோடு கலைப்படைப்புக்கான கூறுகளையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து திரையில் பரிமாறுவதில் தனுஷ் ஜித்தனா, இல்லையா என்பதையும் கூட தீர்மானிப்பதாக அமையும்.

அந்த வகையில், தனுஷ் ஒரு சிறந்த கமர்ஷியல் இயக்குனரா இல்லையா என்பதற்கான ‘அமிலச் சோதனை’யாகவும் ’ராயன்’ அமையும்.

தன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்தையும் திட்டமிட்டுச் செதுக்கிவரும் தனுஷ், நிச்சயமாகத் தனது 50வது படத்திற்காகத் தன்னைக் கரைக்கும் அளவுக்கான உழைப்பைக் கொட்டியிருப்பார். அது நம் ரசனைக்குரிய விருந்தாக அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சி!

– உதய் பாடகலிங்கம்

You might also like