யஷஷ்வி ஜெய்ஸ்வால் – வறுமை பெற்றுத்தந்த ஹீரோ!

விராட் கோலி இல்லாத சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா என்ன பாடுபடப் போகிறதோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இந்த நேரத்தில் ‘நான் இருக்கும்போது கவலை எதற்கு?’ என்று களத்தில் குதித்து சாதித்திருக்கிறார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்.

இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜெய்ஸ்வால் குவித்திருக்கும் ரன்கள் 545. இந்த தொடரில் மட்டும் அவரது சராசரி ரன்கள் 109.

ஒரே தொடரில் அடுத்தடுத்து 2 இரட்டை சதங்கள் அடித்தது, அதிகபட்சமாக 22 சிக்சர்கள் அடித்தது என்று மேலும் சில சாதனைகளைப் படைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

இத்தனை சாதனைகளைப் படைத்த அவரது வயது வெறும் 22-தான்.

இந்த சிறிய வயதில் இத்தனை சாதனைகளை படைத்ததன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தான்தான் என்று சொல்லியிருக்கிறார்.

இந்தியக் கிரிக்கெட்டில் இப்போதைக்கு சுட்டிக் குழந்தையாக கருதப்படும் ஜெய்ஸ்வாலுக்கு சிறுவயது அத்தனை இனிமையாக இல்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பதோனி என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்ஸ்வால்.

தன் 13 வயதில் கிரிக்கெட் கனவுகளுடன் உத்தர பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வாலை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று வரவேற்றது வறுமைதான்.

கிரிக்கெட் கனவுகளை மட்டும் மூலதனமாகக் கொண்டிருந்த அவருக்கு யாரும் இருக்க இடமோ, சாப்பிட உணவோ கொடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் அவரேதான் போராட வேண்டியிருந்தது.

ஆனால், அவர் அதையெல்லாம் பார்த்து பயப்படவில்லை. எல்லாவற்றுக்கும் எதிராக போராட துணிந்தார். பானி பூரி வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.

மைதானத்தில் கிரவுண்ட்ஸ்மேனின் டெண்ட்டில் தங்கினார். தான் பானி பூரி விற்கும்போது, உடன் பயிற்சி செய்யும் மாணவர்கள் வந்தால் ஒளிந்துகொள்வாராம்.

ஒரு கட்டத்தில் ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளருக்கு இது தெரியவர, தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியிலேயே தங்கவைத்து அவருக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்துள்ளார். அதிலிருந்து ஜெய்ஸ்வாலுக்கு எல்லாமே ஏறுமுகமாக இருந்துள்ளது.

சர்வதேச அளவில் இவர் கவனம் பெற்றது 2020-ம் ஆண்டில். அந்த வருடம் நடந்த 19 வயதுக்கு உடபட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆடும் இந்திய அணியில் இடம் கிடைக்க அதில் நட்சத்திர வீரராக அடையாளம் பெற்றுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய அவரை 2020-ல் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது.

2020-ல் ஐபிஎல்லில் அறிமுகமானாலும், அவர் உச்சம் தொட்டது 2023 ஐபிஎல் தொடரில்தான். இத்தொடரில் 14 போட்டிகளில் ஆடிய ஜெய்ஸ்வால் மொத்தம் 625 ரன்களைக் குவிக்க, தேர்வாளர்களின் கவனம் இவர் மீது விழுந்தது.

இதன்பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ஜெய்ஸ்வால், அன்றிலிருந்து இன்றுவரை முன்னேறிக்கொண்டே இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் இரட்டை சதம் அடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஸ்வால், “முதல் இன்னிங்ஸில் அவசரப்பட்டு ஆட்டம் இழந்தேன்.

ஆனால் நான் ஆட்டம் இழந்த பிறகு ஆடிய ரோஹித் சர்மாவும், ஜடேஜாவும் ஒவ்வொரு செஷனிலும் ஒவ்வொரு விதமாக ஆடி அணியை மீட்டார்கள். இது எனக்கு உத்வேகம் தந்தது.

அதேபோல் நானும் ஆட நினைத்தேன். இரண்டாவது இன்னிங்ஸில் முதலில் நிதானமாக ஆடி என்னை ஸ்திரப்படுத்திய பிறகு, என் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதுதான் என் இரட்டை சதத்துக்கு காரணம்’ என்று கூறியுள்ளார்.

மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் இந்த ஆர்வம்தான் இன்று ஜெய்ஸ்வாலை உயர்த்தியுள்ளது. அந்த கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்றைக்கும் அவரிடம் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.

– ரெஜினா சாமுவேல்

You might also like