ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு உலகத்தைக் காட்டும். அது, முழுக்க முழுக்க அப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் இன்ன பிற கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கும் உலகமது. திரையில் படம் ஓடத் தொடங்கியவுடன் அதனுள் நுழையும் நாம், சில நேரங்களில் அது முடிந்தபின்னும் வெளியேற முடியாமல் தவிப்போம்.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு அனுபவத்தைத் தருகிறது ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிரமயுகம்’.
படம் முழுக்க கருப்பு வெள்ளை வண்ணங்களே நிறைந்திருக்கும் என்பதைச் சொன்னது இப்படத்தின் ட்ரெய்லர். இதனை முழுதாகப் பார்த்தபிறகு நம் மனதில் என்ன வண்ணங்கள் மிஞ்சுகின்றன?
அடிமைத்தனமும் ஆதிக்க மனப்பான்மையும்..!
பதினேழாம் நூற்றாண்டில் தெற்கு மலபார் பகுதியில் நிகழ்வதாக விரிகிறது இக்கதை.
தேவன் (அர்ஜுன் அசோகன்), கோரா (மணிகண்டன்) இருவரும் அடிமைகளாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். பாதி வழியில் தப்பித்து, இருவரும் ஒரு மலைக்காட்டுக்குள் நுழைவதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது.
அந்த காட்டினில் ஒலிக்கும் வினோத சத்தம் கேட்டு, உடனடியாக ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்கின்றனர்.
அடுத்த நாள் காலையில் கோராவைக் காணாமல் பயந்துபோகிறார் தேவன். அவரைத் தேடி அலைகிறார்.
அப்போது, பேரழகுடைய பெண்ணாகத் தோற்றமளிக்கும் ஒரு யட்சியின் பின்னால் கோரா செல்வதைக் காண்கிறார். தேவன் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்பதாக இல்லை.
முடிவில், கோராவின் ரத்தம் குடிக்கிறது அந்த யட்சி. பயந்து நடுங்கி ஓடும் தேவன், காட்டில் இருந்து வெளியேற முடியாமல் அலைந்து திரிந்து பசியில் கிறங்குகிறார்.
ஓரிடத்தில் பாழடைந்து கிடக்கும் ஒரு மாளிகையைக் காண்கிறார். அதன் வளாகத்தில் கிடக்கும் தேங்காயை எடுத்துச் சாப்பிடுகிறார்.
அப்போது, அந்த மாளிகையின் சமையல்காரர் (சித்தார்த் பரதன்) ‘யாரது’ என்று கேட்கிறார். வழி தவறித் தான் அங்கு வந்ததாகச் சொல்கிறார் தேவன்.
அவர்கள் பேசும் சத்தம் கேட்டு, உள்ளே இருந்து மாளிகை உரிமையாளர் கொடுமன் போட்டி (மம்முட்டி) வெளிவருகிறார். அவரைப் பார்த்ததும் நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் குனிகிறார் தேவன்.
நீ யார், இங்கு வந்தது எப்படி என்று விசாரிக்கிறார் கொடுமன். அந்த உரையாடலின் முடிவில் தன் முகத்தைப் பார்க்குமாறும், படியேறி வீட்டுக்குள் வருமாறும் கூறுகிறார். அதனை ஏற்கத் தயங்குகிறார் தேவன்.
காரணம் ஆதிக்க மனப்பான்மை மிகுந்த உயர்சாதிக்காரர்கள் முன்னால் அடிமைத்தனத்தை ஏந்தி நின்ற அவரது முந்தைய அனுபவங்கள்.
கொடுமனின் உபசரிப்பும் பாராட்டும் குணமும் தேவனைச் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், பிறகுதான் அவரது சுயரூபத்தைக் காண்கிறார் தேவன்.
’இங்கேயே வாழ்நாள் முழுக்கத் தன்னை மகிழ்விக்கும்படியாகப் பாட வேண்டும்’ என்று உத்தரவிடுகிறார் கொடுமன். ’இல்லை, வீட்டில் எனது தாயார் இருக்கிறார்’ என்று மறுக்கிறார் தேவன்.
‘கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகலாம்’ என்று ‘வஞ்சகமாக’ அவரை அங்கு தங்க வைக்கிறார் கொடுமன். அதனைத் தேவனால் மறுக்க முடிவதில்லை.
அதேநேரத்தில், அங்கிருக்கும் சமையல்காரர் தேவனை மிரட்டுவதும் விரட்டுவதுமாக இருக்கிறார். இங்கிருந்து வெளியேறுவது இயலாத காரியம் என்று எச்சரிக்கிறார்.
அடுத்தடுத்து அங்கு நடக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகளைக் கண்டபிறகு அந்த இடத்தை விட்டு வெளியேறுவது சாத்தியமற்றது என்பது அவருக்குப் புரிகிறது. அதிகாரத்தின் ருசியை ரசிக்கும் சாத்தானே கொடுமன் என்பதை அவர் உணர்கிறார்.
சமையல்காரருடன் சேர்ந்து அவரை ஏமாற்றிவிட்டு, அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார் தேவன். அதன்பிறகு என்னவானது? தேவனும் சமையல்காரரும் அந்த இடத்தை விட்டுத் தப்பித்தனரா என்று சொல்கிறது ‘பிரமயுகம்’ படத்தின் மீதிப்பாதி.
யார் இந்த மம்முட்டி?
‘பிரமயுகம்’ படத்தை ஒருவர் பார்க்க முதல் காரணமாக இருப்பது மம்முட்டியின் இருப்பு.
இதில் அறுபது வயது மதிக்கத்தக்க, தன்னைச் சார்ந்தவர்களின் உழைப்பை உறிஞ்சுகிற, தந்திரங்களும் சாமர்த்தியங்களும் குயுக்திகளும் நிறைந்திருக்கிற, தன் அதிகாரத்தை விடாப்பிடியாகத் தக்க வைத்துக்கொள்கிற ஒரு மனிதராகத் தோன்றியிருக்கிறார்.
அந்த உணர்வுகளைத் தனது சிரிப்பில், முறைப்பில் மட்டுமல்லாமல் நகங்களை நாற்காலியில் தேய்த்துக்கொண்டு, தோளைச் சிறிது சாய்த்து அதிகாரத் தோரணையுடன் அமர்ந்திருக்கிற தொனியிலேயே காட்டுவது அவரது தேர்ந்த நடிப்புத்திறனைக் காட்டுகிறது.
முதன்முறையாக மம்முட்டியை இந்த படத்தில் காண்பவர் கூட, ‘யார் இவர்’ என்று வியக்கும் வகையிலேயே அவரது பங்களிப்பு உள்ளது.
அர்ஜுன் அசோகனின் பார்வையிலேயே முழுக்கதையும் விரிகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, பயத்தையும் பவ்யத்தையும் நிரப்பி நிற்கிற மனிதராகத் தோன்றியிருக்கிறார்.
‘எல்லாம் தெய்வத்தின் அருள்’ என்று அவர் மெய்சிலிர்க்க, பதிலுக்கு மம்முட்டி கோபக்கனலை வீசியெறிய, அவர் ஒடுங்கிப் போகும் இடம் அபாரமாகத் திரையில் வெளிப்பட்டுள்ளது.
சித்தார்த் பரதனின் அலட்சியமான உடல்மொழியும் வசனம் பேசும் பாங்கும், ஏதோ ஒரு ரகசியத்தை அப்பாத்திரம் மறைத்து வைத்திருப்பதை முன்னரே உணர்த்துகிறது.
பச்சிலையொன்றை மென்றுகொண்டு வீட்டுக்குள்ளேயே எச்சில் துப்புவதும், வியர்வை மிகுந்திருக்கும் உடலை விரலால் லேசாகச் சொறிந்தவாறே மம்முட்டி மற்றும் அர்ஜுனை அவர் பார்ப்பதும் அதற்கான உதாரணங்களில் சில.
இவர்கள் மூவரையும் தாண்டி கோராவாக வரும் மணிகண்டனும், யட்சியாக வரும் அமல்டாவும் இரண்டு காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர். இறுதிக்காட்சியில் போர்த்துக்கீசியர்களாக மூன்று வெளிநாட்டவர் தோன்றியிருக்கின்றனர்.
அந்த வகையில், இதில் மிகக்குறைந்தளவிலான பாத்திரங்களே உள்ளன.
கருப்பு வெள்ளை நிறத்தில் மொத்தக் காட்சிகளையும் அமைப்பது நிச்சயம் சவாலான விஷயம். கதாபாத்திரங்கள் உண்ணும் உணவு, உடைகள் மற்றும் ஒப்பனை, சுற்றியுள்ள இயற்கைச்சூழல் மற்றும் அமானுஷ்யம் உருவாக்கும் பயம் அனைத்தையும் அவற்றுக்கான ‘ஒரிஜினல்’ வண்ணங்களில் காட்டுவதே சரி; ஆனாலும், கதையின் அடிப்படைத்தன்மைக்கேற்ப கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களையே கொண்டிருக்கிறது ஷெஹ்னாஸ் ஜலாலின் ஒளிப்பதிவு.
டிஐயில் இந்த மூன்று வண்ணங்களையும் செறிவுபடுத்தும் வேலை மேற்கொள்ளப்படவில்லை. ‘கிளாசிக்’ படமொன்றை பார்க்கிறோம் எனும் உணர்வை வேண்டுமென்றே தவிர்த்திருப்பதற்கான காரணமும் புரிவதில்லை.
ஷபீக் முகம்மது அலியின் படத்தொகுப்பில் ஒரு பிரேம் கூட அதிகப்படியானது எனும்படியாக இல்லை.
காட்சிகளின் வழியே பார்வையாளர்கள் உணரும் பயத்தையும் மிரட்சியையும் பிரமிப்பையும் அதிகப்படுத்துகிற வேலையை மட்டும் செய்திருக்கிறது கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை.
அந்த இசையுடன் சிறப்பாக ஒன்றிணைந்திருக்கிறது ஜெயதேவன் சக்கடத்தின் ஒலி வடிவமைப்பு.
பாழடைந்த வீட்டின் உள்ளே செடி, கொடிகள் முளைத்திருப்பதையும், நூற்றாண்டுகால மாசுகள் அறையின் அனைத்து பொருட்களிலும் படிந்திருப்பதையும் காட்டுகிறது ஜோதிஷ் சங்கரின் கலை வடிவமைப்பு. திரையில் தெரிவதில் விஎஃப்எக்ஸின் பங்கு எவ்வளவு என்று உறுதி கூற முடியாத அளவுக்கு ஜோதிஷ் குழுவினரின் பங்கு அமைந்துள்ளது.
யட்சி மற்றும் சாத்தானின் தோற்றத்தை வடிவமைத்ததில் ஆடை வடிவமைப்பாளர்கள் மெல்வி, அபிஜித்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
’காலத்தைக் காட்டிலும் இந்த உலகத்தில் மதிப்புமிக்கது வேறு எதுவும் இல்லை’, ‘சாத்தான் உருவாக்கிய அதிகார வட்டத்தில் இருந்து நம்மால் வெளியே போக முடியாது’ என்பது போன்ற வார்த்தைகளின் வழியே டி.டி.ராமகிருஷ்ணனின் வசனங்கள் மனித வாழ்வின் அடிப்படைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துகின்றன.
சாத்தான் ஓதும் வேதம்!
இயக்குனர் ராகுல் சதாசிவன் இதற்கு முன்னர் இயக்கிய ‘பூதகாலம்’ படத்தில் அமானுஷ்யத்தை ரொம்பவும் எளிமையாகக் காட்டியிருப்பார். விஎஃப்எக்ஸ் மற்றும் எஸ்எஃப்எக்ஸை மிக அவசியமான இடங்களில் மட்டும் பயன்படுத்தி நம்மைப் பயத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார். அதில் பாத்திரங்களும் மிகக்குறைவு. கிட்டத்தட்ட அதே பாணியில்தான் ‘பிரமயுகம்’ படத்தையும் தந்திருக்கிறார்.
’சாதி வேற்றுமை நான் பார்ப்பதில்லை’ என்று மம்முட்டி அர்ஜுன் அசோகனிடத்தில் சொல்லும்போது, சித்தார்த் பரதனின் முகத்தில் ‘உண்மைய பேசுங்கப்பா’ எனும் பாவனை வெளிப்படும். இன்னொரு இடத்தில், தான் வீழ்த்திய மனிதனின் குணங்களையே சாத்தான் வெளிப்படுத்தும் என்று சித்தார்த்தின் பாத்திரம் சொல்லும்; அதனை மனதிலேற்றிக் கொண்டால், படம் முழுக்க மம்முட்டி பாத்திரம் வெளிப்படுத்தும் உடல்மொழியும் முடிவில் அர்ஜுன் அசோகனின் பார்வையும் வெளிப்படுத்தும் உணர்வுகளில் நாம் பல்வேறு அர்த்தங்களைக் காணலாம்.
கேரளம் கடவுளின் பூமி என்று சொல்லப்படுகிற நிலையில், அதனைச் சாத்தானின் பூமியாக ராகுல் சதாசிவன் உருவகப்படுத்தியிருப்பது நிச்சயம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தக்கூடியது.
இந்த படத்தில் காட்சிகள், வசனங்கள் என்று உள்ளடக்கத்தில் படிமங்கள், பின்நவீனத்துவக் குறியீடுகளைக் கண்டறிந்து, சமகாலச் சமூகம் மற்றும் அரசியல் சூழலை இயக்குனர் எப்படியெல்லாம் விமர்சிக்கிறார் என்று சிலர் பாராட்டலாம். போர்த்துக்கீசியரின் கேரள விஜயம் காட்டப்படுவதன் மூலமாக, அதிகாரம் எந்தெந்த கைகளுக்குள் சிக்கிக்கொண்டது என்றும் கட்டுரை எழுதலாம்.
அதையெல்லாம் தாண்டி, இந்த மண்ணில் வாழ்ந்த சில ஆயிரம் மனிதர்களின் துளிகளாய் மிகச்சில பாத்திரங்களைக் கொண்டு நூற்றாண்டு கால வாழ்க்கையைக் காண்பித்த வகையில் கவர்கிறது இந்த ‘பிரமயுகம்’. சாதாரண ரசிகர்கள் தமக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் எனும் இயக்குனரின் போக்கு நிச்சயம் பாராட்டுக்குரியது. அதுவே இப்படத்தை மீண்டும் மீண்டும் காணச் செய்யும்.
இரண்டாவது, மூன்றாவது முறை பார்க்கும்போது பயத்தைக் கைவிட்டு, பாத்திரங்களின் பின்னிருக்கும் வாழ்வு குறித்து நம்மை யோசிக்க வைக்கும்; அதுவே ‘பிரமயுகம்’ படத்தின் வெற்றி!
– உதய் பாடகலிங்கம்
#பிரமயுகம்_விமர்சனம் #ராகுல்_சதாசிவன் #மம்முட்டி #அர்ஜுன்_அசோகன் #சித்தார்த்_பரதன் #மணிகண்டன்_அமல்டா #ஷெஹ்னாஸ்_ஜலால் #ஷபீக்_முகம்மது_அலி #கிறிஸ்டோ_சேவியர் #ஜெயதேவன்_சக்கடம் #ஜோதிஷ்_சங்கரி #மெல்வி #அபிஜித் #டி_டி_ராமகிருஷ்ணன்
#Bramayugam_Movie_Review #Mammootty #rahul_sathasivan #arjun_ashokan #siddharth_bharathan #manikandan #amalda #sehnas_amalda #shakfeek_mohamed_ali #crisno_seviere #jayadevan_sakkadam #jothish_sankari #melvi #abijith #t_t_ramakrishnan