தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!

  • தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை.

தொ.ப-வின் நூலுக்கு…

அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே ஆரம்பிக்கிறேன் இதனை.

உண்மையில் சொல்வதானால்…

இது அணிந்துரை அன்று. நன்றியுரை.

தமிழகத்தின் தரங்கம்பாடிக் கரையில் அச்சு இயந்திரம் தடம் பதிப்பதற்கு முன்னரும் பின்னரும் இத்தமிழுலகம் எத்தகைய ஆராய்ச்சிப் போக்குகளைக் கடந்து வந்திருக்கிறது? இதன் வளர்ச்சியில் பங்கு கொண்ட சான்றோர்கள் ஆற்றிய பணிகள் என்னென்ன? அவற்றில் மறுக்கத்தக்கன இருந்தாலும் எவையெவற்றை கொள்ளலாம் தள்ளலாம் என நெளிந்தோடும் ஆறென அமைந்த இவ்வுரையை என்னவென்று உரைப்பது?

இவ்வுரையை ஒன்றுக்குப் பலமுறை வாசித்தபோது நான் தலை சுற்றிக் கீழே விழாதது ஒன்றுதான் குறை.

தொ.ப. அவர்களே கூறுவது போல “பண்பாட்டு வெளிப்பாட்டின் ஒரு கூறான மொழி இலக்கியத் தளத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலான கால எல்லையில், தமிழ்நாடு கண்ட மாற்றங்களையும் வளர்ச்சி நிலைகளையும் ஒரு சேரக் காணமுயல்வது சற்று மலைப்புக்குரிய முயற்சிதான்.”

ஆனாலும் மனிதர் அத்தோடு நிறுத்துகிறாரா என்று பார்த்தால் அவர் சொன்ன 150 ஆண்டுகளையும் தாண்டி ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறது அவரது உரை.

தான் பாதுகாத்து வைத்திருந்த 1900-ம் ஆண்டு சனவரி 1-ல் வெளிவந்த சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடுவின் “விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சங்கிரகம்” என்கிற அரிய நூலினை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துவிட்டதாக என்னிடம் ஒருமுறை கூறியதை நினைவில் வைத்து தோழர்கள் துணையோடு தேடத் துவங்கினோம்.

மொத்த பல்கலைக்கழகத்தையும் சல்லடை போட்டுத் தேடியும் எமக்கு ஏமாற்றமே எஞ்சியது. அரிதிலும் அரிதான ஆவணங்களையும் நூல்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் அகராதியிலேயே இல்லை என்பது அறிந்த விடயம்தானே?

தனக்குக் கிடைத்த கால அவகாசத்தில் இத்தகையதொரு அற்புதமான உரையை நமது தொ.ப. ஆற்றியிருக்கிறார் என்பதைக் காணும்போது ஒருபுறம் மலைப்பும் மறுபுறம் பெருந்துயருமே நம்மைச் சூழ்கிறது.

இத்தகைய மகத்தானதொரு மனிதரை இத்தமிழ்ச் சமூகம் மேலும் மேலும் பயன்படுத்திக் கொள்ளவில்லையே (நான் உட்பட…) அவரிடம் இருந்த ஆற்றல்கள் அத்தனையையும் வெளிக்கொணர்ந்து நம்மை மேம்படுத்திக் கொள்ளவில்லையே என எழும் ஆற்றாமைக்கு அளவேயில்லை.

பெரியாரைப் போன்ற நெருப்புப் பந்துதான் தொ.ப. அதனைப் பொட்டலம் கட்டிவிட முடியாது. ஒவ்வொருவரும் தத்தமது தேவைக்கேற்ப அவரைப் பார்த்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சாதி மறுப்பில் கறாராய் நின்ற அவரிடம் இருந்து தமிழுணர்வினை மட்டும் ராவிச் சென்றனர் தமிழ்த் தேசியவாதிகள். அவரது சமூக அரசியல் பார்வைகளைப் புறந்தள்ளி நாட்டார் வழக்காற்றியலின் சிலகூறுகளை மட்டுமே நாடிச் சென்றனர் இடதுசாரிகள். ஈழவிடுதலையை இறுதிவரை நேசித்தவரிடமே அதனை ஒப்படைத்துவிட்டு மற்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர் திராவிட கட்சியினர் சிலர். எல்லாத் தருணத்திலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ள இயலாதவராய் அவர் இருந்தார் என்பதைக் காட்டிலும் அவரது சமரசமற்ற அரசியல் இருந்தது எனக் கொள்ளலாம்.

மொத்தத்தில் தொ.ப.வினது தமிழ் ஆராய்ச்சி உரையினைச் சுமந்து வரும் இந்நூல் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும்… ஒவ்வொரு கல்லூரியிலும்… ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் கூட… வலம் வரவேண்டிய நூல். தமிழை… திராவிடத்தை… மானுடத்தை… நேசிக்கும் ஒவ்வொரு மனிதரது கையிலும் வீற்றிருக்க வேண்டிய கருவூலம்.

நடமாடும் பல்கலையாய் நம்மிடையே வலம் வந்த தொ.ப.வினது கடந்த நூற்றாண்டுகள் குறித்த இந்த ஆராய்ச்சிப் பேருரை வருகின்ற நூற்றாண்டு மனிதர்களுக்கு அரிச்சுவடியாய் அமையும் என்பது மட்டும் உறுதி.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொ.ப. ஆற்றிய இத்தகைய அற்புதமான உரையைத் தேடிப்பிடித்து அனுப்பி வைத்த சமூக ஆய்வாளரும் தோழருமான சித்தானையை நன்றியுணர்வுடன் கரம் பற்றுகிறோம்.

நகலாகக் கிடைத்த இந்த உரையின் சிலபக்கங்கள் சிதைந்தும் மங்கியும் இருந்ததனால் எழுந்த சந்தேகங்களை அலைபேசியில் அழைத்தபோதெல்லாம் சலிப்பின்றி தொடர்புக்கு வந்து சரியான பொருளைச் சுட்டிக் காட்டி பிழையின்றி வெளிவரத் துணை நின்ற ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலியின் உதவிப் பேராசிரியரும். தொ.ப.வின் மீது மாறாத நேசம் கொண்டவருமான இலக்குவன் அவர்களது பணியினை என்றும் மறக்க இயலாது.

பின்னட்டை முகப்புக்கென தன் பணியினைப் பகிர்ந்து கொண்ட ஓவியர் ஜீவா சுப்பிரமணியன் அவர்களுக்கும் அவருடைய அறிமுகத்திற்குக் காரணமாய் அமைந்த மேட்டுப்பாளையம் குழந்தைகள் நல மருத்துவர் மகேஷ்வரன் அவர்களுக்கும் எமது நன்றிகள். கூடவே முன்னட்டையை மெருகூட்டும் தொ.ப.வின் ஒளிப்படத்தினை எடுத்த அன்புத் தோழர் காஞ்சனை சீனிவாசன் அவர்களுக்கும் அதனை அளித்துதவிய நண்பர் தயாளனுக்கும் எம் அன்பு.

இயக்குநர் மணிவண்ணனது கனவை நனவாற்றும் வகையில் நாடற்றோர் பதிப்பகத்தை உருவாக்கி தங்களது சமூகக் கடமைகளைப் பகிர்ந்தபடி நடைபோடும் நண்பர்களுக்கு எமது பாராட்டுகள்.

#எழுத்தாளர்_தொ_பரமசிவன் #Tho_paramavasivan #தமிழாராய்ச்சியின்_வளர்ச்சி_நூல் #Thamizhaaraichiyin_Valarchi_book #எழுத்தாளர்_பாமரன் #writer_pamaran

You might also like