சட்டசபையில் ஆளுநருக்கு முன்னால் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு பலவிதமான ஆளுநர்கள் ஜனநாயக முறைப்படி தங்களுக்குரிய பொறுப்பை வகித்து இருக்கிறார்கள்.

கவர்னரை ஆட்டுத் தாடியுடன் ஓப்பிட்டு விமர்சனங்கள் இதே மண்ணில் இருந்தாலும் சில ஆளுநர்கள் தமிழக ஆட்சியாளர்களுடன், மிக இணக்கமான முறையில் செயல்பட்டிருக்கிறார்கள். 

ஆளுநர்கள் பதவிக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்களும் இந்தப் பட்டியலில் இருந்திருக்கிறார்கள். 

முந்திய ஆளுங்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பிரச்னை தீவிரமடைந்தபோது ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் ஒன்று இணைத்த நேசப் பணியை செய்தவரும் ஒரு ஆளுநர்தான்.

இந்த விதமான ஆளுநர்களின் வரிசையில் விசித்திரமானவர் தற்போது தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி.

முன்னாள் அரசு உயர் அதிகாரியான ரவி கலந்துகொண்ட பல நிகழ்வுகள் ஊடகங்கள் பார்வையில் பரபரப்பான ஒன்றாக மாறிவிடுகின்றன அல்லது மாற்றப்பட்டு விடுகின்றன.

இதுவரை தமிழகத்தில் இருந்த முந்தைய ஆளுநர்களுடன் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களைத் தொடர்ந்து முன்வைப்பவராக இருந்து கொண்டே இருக்கிறார் ஆளுநர் ரவி.

தற்போதைய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக தனக்கு அளிக்கப்பட்ட உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும்.

அதன்படி, இன்று மாறாமல் திருக்குறளை வாசித்தவர் பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறு அறிமுகத்தோடு மிக சுருக்கமான தன்னுடைய உரையை வாசித்து முடித்துவிட்டார். 

இதற்கு முன்பும் இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தவர்தான் ஆளுநர் ரவி.

தற்போதும் சில சர்ச்சைக்குரிய பேச்சுக்களை வழக்கம்போல பேசி இருக்கிறார் ஆளுநர்.

சட்டசபை  துவங்கப்படும்போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படவில்லை என்று சொன்னவர் தான் வாசிப்பதற்காக அளிக்கப்பட்ட உரையின் சில பகுதிகள் தான் முரண்படுவதாகவும் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.

தமிழக சட்டசபையில் அரசின் உரையை ஆளுநர்கள் வாசிப்பது என்பது நீண்ட காலமாக நிகழும் ஜனநாயக மரபு. இம்மரபை அடிக்கடி மீறி இருக்கிறார் ஆளுநர்.

தனக்கு அளிக்கப்பட்ட உரையை ஆளுநர் ரவி வாசிக்காததால், அந்த உரையை வாசிக்க வேண்டிய கட்டாயம் சபாநாயகர் அப்பாவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

ஆளுநர் தொடங்கி முடிக்காத பேச்சை, தான் பேசி நிறைவு செய்திருக்கிறார் சபாநாயகர்.

அதோடு மத்திய அரசு வெள்ள நிவாரணமாகக் கொடுக்க வேண்டிய நிதியை இதுவரை மத்திய அரசும் ஒதுக்காதது குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது எல்லாம் தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும், இம்மாதிரியான சம்பவங்களும் சர்ச்சையிலும் தொடர்ந்து எழுவதற்கு முழுமுதற்காரணமாக  ஆளுநர் ரவி இருந்து கொண்டே இருக்கிறார்.

நம்நாட்டின் ஜனநாயக விதிமுறைப்படி ஆளுநர் பதவிக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்கின்றன. பேச்சில் வெளிபடுத்த வேண்டிய எல்லைகளும் இருக்கின்றன.

ஆனால் ஆளுநர் பொறுப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொண்டு அதே விதிமுறைகளை ஒரு ஆளுநர் தொடர்ந்து மீறிக்கொண்டு இருக்கிறார் என்றால், அந்த மீறல் எதை உணர்த்துகிறது என்பதுதான் தற்போதைய சூழல் எழுப்பும் கேள்வி.

****

#ஆளுநர் #சட்டசபை #ஜனநாயகம் #அதிமுக #ஈபிஎஸ் #ஓபிஎஸ் #ஆர_.என்_ரவி #ஆளுநர்_ரவி #தமிழக_பட்ஜெட்_கூட்டத்தொடர #தமிழ்நாடு #சட்டமன்றம் #மத்திய_அரசு #governor_rn_ravi #admk #ops #eps #tn_budjet #tn #appavu #speaker_appavu #தமிழக_சட்டசபை #tn_assembly

You might also like