1800-களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது அவர்களையே மிரள வைத்த ஒரு கொள்ளைக் கூட்டம் உண்டு என்றால் அது ‘THUG’ என அழைக்கப்படும் தக்கர் கொள்ளையர்கள்.
வரலாற்று ஆர்வலரான இந்நூல் ஆசிரியர் இரா.வரதராசன் வரலாறு தொடர்பான மிகப் பழமையான ஆவணங்களை தேடித் தேடி நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.
அவரிடம் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வரலாற்று நூல்களில் இருந்து தகவல்களை இந்த நூலில் நமக்குத் தருகிறார்.
18 – 19 நூற்றாண்டுகளில் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு வியாபாரத்துக்கு புறப்பட்டுச் சென்ற வணிகர்கள் புனித யாத்திரை சென்றவர்கள் ஆயிரக்கணக்கில் காணாமல் போகிறார்கள்.
எங்கு சென்றார்கள்? அரசாங்கத்தின் பணப்பெட்டிகளை சுமந்து சென்ற கூலியாட்களுடன் ராணுவ வீரர்களும் அநேகம் பேர் மாயமாய் மறைந்தனர். போலீஸாரால் கூட தேடி எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தக்கர்கள் என்பவர்கள் யார் என்ற கேள்விக்கு மிகச் சரியான பதில் அவர்கள் மிகக் கொடூரமான வஞ்சக நெஞ்சம் கொண்ட கொலைகாரர்கள் என்பதுதான்.
கொலை செய்வதற்காகவே கூட்டம் கூட்டமாக இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக அலைந்து வந்த ரகசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
கொஞ்சம் கூட ஈவு இரக்கம் தர்ம நியாயம் என்று சக மனிதர்களை தங்களின் சுயலாபத்துக்காக கொன்று குவிக்கும் இந்த கொடியவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என முடிவெடுத்து அதை செயல்படுத்தியவர். அந்த ஆங்கிலேயரின் பெயர் வில்லியம் ஹென்றி ஸ்லீமன்.
“தக்” என்ற ஹிந்தி வார்த்தைக்கு ஏமாற்றுக்காரன், மோசடி செய்பவன் என்ற பொருள் வரும்.
இவர்கள் வியாபாரிகளுடன் பயணம் செய்கையில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அவர்கள் ஓய்வெடுக்கும் சமயத்தில் சுருக்கு கயிற்றை வீசியெறிந்து அவர்களை கழுத்தறுத்து, சடலத்தை உடனேயே புதைத்தும் விடுவார்களாம்.
அவர்களின் கொலை பாதகச் செயல்களை வாசிக்கையில் நமது முதுகுத்தண்டு சில்லிட்டு விடுகிறது.
சங்கேத குறியீடுகள் மற்றும் சங்கேத மொழியில் பேசி மிக கட்டுக்கோப்பான அமைப்பாகத் தலைவனின் கீழ் வழிநடத்தப்பட்ட தக்கர்கள் அன்றைய இந்தியாவில் ஆள்வோருக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கின்றனர்.
தக்கர் கொள்ளையர்களை பிடிப்பதற்கென்று பிரிட்டிஷார் தனியாக காவல் துறை பிரிவு ஒன்றை உருவாக்கினார்கள்.
அதன் தலைமை பொறுப்பில் மேஜர் ஜெனரல் ஸ்லீமன் அவர்கள் 46 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்த மண்ணில் இருந்து அவர்களை முற்றிலும் அகற்றினார்.
கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவரும் தக்கி ஒழிப்பில் முழுமூச்சாக தங்கள் திறமையை, கடுமையாக உழைத்ததன் மூலமாக எவ்வாறு தக்கர் கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டனர் என்பதை இந்த வரலாற்று புத்தகம் மிகத் தெளிவாக நமக்கு தருகிறது.
தக்கர்களின் வேட்டை, அந்தத் தக்கர் கொள்ளையர்களை அழிப்பதற்கான வேட்டை இரண்டையும் இந்தப் புத்தகம் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் பதிவு செய்திருக்கிறது.
திகில், வன்முறை, துப்பறிதல், சாதுரியம், அன்றைய சரித்திர பின்னணி என்று இந்த புத்தகம் மூலம் வரலாற்றின் கருப்பு பக்கங்களின் நிகழ்வுகளை அறிகிறோம்.
இந்தியாவின் கடந்த காலத்தை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் இந்த புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அது மிகையில்லை.
நூல்: தக்கர் கொள்ளையர்கள்
ஆசிரியர்: இரா. வரதராசன்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
பக்கங்கள்: 224
விலை: ரூ 285
முதல் பதிப்பு :அக்டோபர் 2016
#தக்கர்_கொள்ளையர்கள் #thugger_kollaiyaral_book #இரா_வரதராசன் #ra_varatharasan