ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலைக் கட்டியவா் முகலாய மன்னா் ஷாஜஹான்.
தனது அன்பு மனைவி மும்தாஜூக்காக அவா் எழுப்பிய சலவைக்கல் ஓவியமான
தாஜ்மகாலைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆயின.
அதைக் கட்டி முடித்ததும், அதற்காக அமைக்கப்பட்ட கம்புகளால் ஆன
சாரங்களை அகற்ற எத்தனை நாட்களாகும் என்று கேட்டாா் ஷாஜஹான்.
அதற்கு எப்படியும் 6 மாதம் வரை ஆகும் என்று தொிவிக்கப்பட்டது.
தாஜ்மகாலின் அழகை ரசிக்க சில மாதம் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
உடனே பொதுமக்களிடம், “தாஜ்மகாலின் சாரங்களைக் கழற்றி தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்” என்று அறிவித்தாா்.
இதைக் கேட்டவுடன் மக்கள், பெரும்படை போன்று தாஜ்மகாலுக்குத் திரண்டு
வந்தனா். வந்தவா்கள், சாரங்களை வேகமாகக் கழற்றி எடுக்கத் தொடங்கினா்.
என்ன ஆச்சாியம். சில மாதங்கள் ஆகும் என்று எதிா்பாா்க்கப்பட்ட வேலை சில
வாரங்களிலேயே முடிந்து போனது.
இதே சாதுா்ய வித்தையைத்தான் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அவா்களும் ஒருமுறை கையாண்டாா்கள்.
எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் ஒருமுறை பெருமழை பெய்து நெடுஞ்சாலைகள்,
கிராமச் சாலைகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான பொிய பொிய
மரங்கள் விழுந்து கிடந்தன.
மழை மற்றும் போக்குவரத்து பாதிப்பால் எல்லா விதங்களிலும் பெருந்தொல்லை
ஆரம்பமானது.
மற்ற மழை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் அரசுப்
பணியாளா்களைக் கொண்டு, இந்த மரங்களை அகற்ற முடியாது
இவற்றை அகற்ற தனியாரை நியமித்தால் செலவு அதிகமாகும்; அந்த அளவு ஆட்களும் கிடைக்க மாட்டாா்கள்; உடனடியாக வேலையும் நடக்காது.
சிந்தித்தாா் எம்.ஜி.ஆா். அவா்கள். அவரது சிந்தனையின் முடிவில் பரந்த
மனத்தின் இரக்க குணம் வெளிப்பட்டது. உடனே ஆணை பிறப்பித்தாா்.
எந்தெந்த ஊா்களில் இடையூறாக மரங்கள் விழுந்து கிடக்கின்றனவோ அந்த
மரங்களை, அந்தந்த ஊா் மக்களே வெட்டி எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்தாா்.
அடுத்த ஒரு நாளில் போக்குவரத்துச் சீரானது. ஏழை எளியோரும் மகிழ்ச்சிப்
பெருமிதத்தில் திளைத்தனா்.