ஒரு வழியாக அரசியல் நீரோட்டத்தில் ஐக்கியமாகி விட்டார் ‘இளையத் தளபதி’ விஜய்.
30 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இன்னொரு ஆபத்தான ஆட்டத்துக்கு தயாராகி இருக்கிறார்.
தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விஜய்.
கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் மூலம் அவரை கதாநாயகனாக உயர்த்தினார் சந்திரசேகர்.
அந்தப் படமும், அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த ஆரம்பகால படங்களும் பெரிய வெற்றியை அடையவில்லை.
அந்தப் படங்களை எல்லாம் பெரும்பாலும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் டைரக்டு செய்திருந்தார்.
விஜயை வைத்து வேறு இயக்குநர்கள் இயக்கிய பூவே உனக்காக, லவ் டுடே, பகவதி, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி, திருப்பாச்சி, தெறி, மெர்சல், கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றன.
அண்மைக்கால வெளியீடுகளான மாஸ்டர், வாரிசு, லியோ படங்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் மெகா ஸ்டாராக விஜயை தரம் உயர்த்தின.
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குள் அரசியல் ஆசை துளிர் விட்டுக்கொண்டே இருந்தது.
இதன் காரணமாக தனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். பின்னர், நற்பணி மன்றத்தை இயக்கமாக மாற்றினார்.
அதனை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு, சரியான தருணத்தை விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சியைப் பதிவு செய்தார்.
‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் இந்தக் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
தனது தந்தை மேற்கொண்ட இந்த நடவடிக்கை விஜய்க்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்தச் செய்தி வெளியானதும் தனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விஜய் அறிக்கை வெளியிட்டார்.
அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த சூழலில்தான் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் விஜய், புதியக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
’2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை – இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்றும் அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி இருப்பதால், சினிமாவில் இருந்து விலகுவது என்ற அதிரடி முடிவையும் விஜய் எடுத்துள்ளார்.
விஜய் புதிய கட்சி தொடங்கியதை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அதிமுகவை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அவருக்கு ஊடக பலம் கிடையாது.
ஆனால், விஜயின் கட்சி அறிவிப்பை எட்டுகால செய்தியாக இன்றைய நாளிதழ்கள் வெளியிட்டுள்ளதைப் பார்க்கும்போது, அவருக்கு ஊடகங்களின் பெருத்த ஆதரவு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு, அமைச்சர் உதயநிதி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தொல்.திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எனினும், விஜயின் அரசியல் பிரவேசம் பிரதான கட்சிகளுக்கு மட்டுமின்றி, சிறிய கட்சிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பது நிஜம்.
விஜய் வருகையால் எந்தக் கட்சிக்கு பாதிப்பு என்ற கேள்விக்கு, 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் விடை அளிக்கும்.
– பி.எம்.எம்.
#விஜய் #அமைச்சர்_உதயநிதி #கே_எஸ்_அழகிரி #ஓ_பன்னீர்செல்வம் #காங்கிரஸ் #பாஜக #அதிமுக #புரட்சித்தலைவர் #எம்.ஜி.ஆர் #இளையதளபதி #விஜய் #எஸ்_ஏ_சந்திரசேகர் #பூவே_உனக்காக #லவ்டுடே #பகவதி #துள்ளாத_மனமும்_துள்ளும் #கில்லி #திருப்பாச்சி #தெறி #மெர்சல் #கத்தி #துப்பாக்கி #மாஸ்டர் #வாரிசு #லியோ #தொல்_திருமாவளவன் #கமல்ஹாசன் #தமிழகம் #புதுச்சேரி #2026_சட்டசபைத்_தேர்தல் #vijay #uthayanithi #congress #bjp #admk #mgr #s_a_chandrasekar #tamil_nadu #puduchery #2026_assembly_election #தமிழக_வெற்றி_கழகம் #tamizhaga_vettri_kazhagam #tvk