இலக்கியம் குறித்து முழுமையாக விளக்கும் நூல்!

நூல் அறிமுகம்:

இலக்கியம் மற்றும் அதன் வாசிப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கு ஜெயமோகன் தன் பார்வையில் பதில் அளித்திருக்கிறார்.

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது.

பல கோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. இலக்கியத்தின் கொள்கைகள், செயல்முறைகளைத் தெளிவுபடுத்துகிறது.

வாசகர் கடிதங்கள், நாளிதழ்களில் வெளியானவை, ஜெயமோகன் ஆற்றிய உரைகள் என 20 கட்டுரைகள் உள்ளன.

நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலுமே நுணுக்கங்கள் உண்டு. கொஞ்சம் உற்று நோக்கினாலோ, ஆராய்ந்தாலோ இது தென்படக்கூடும். வாசிப்பிலும் இது உண்டு.

உதாரணத்திற்கு, ஒவ்வொரு முறை ஒரு புத்தகத்தை படித்துவிட்டு பதிவு எழுத வரும்போது அதை எவ்வாறு கட்டமைப்பது என்ற எண்ணம்.

நிறைகுறைகளை மட்டும் அடுக்கிவிட்டு நகர்ந்து விடலாமா? விமர்சகன் வேடம் பூண வேண்டுமா? அப்படி என்றால், எந்த தளத்தில் நின்றுக் கொண்டு விமர்சிப்பது?

விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு அனுபவம் இருக்கிறதா? போன்ற கேள்விகள் (வாசிப்பது என்பது தனிமனித அனுபவம், எல்லா பதிவுமே விமர்சனம் தான் என்ற பொதுப்படை ஒரு புறம் இருக்கட்டும்.) இவ்விமர்சனம் குறித்தான தயக்கத்திற்கு, ஜெயமோகன் இவ்வாறு பதில் அளிக்கிறார்.

1. முதலில் சற்றுகாலம் உங்களைப் பாதித்தவற்றை பற்றி மட்டுமே எழுதுங்கள். மதிப்புரைகள் அல்லாமல் ரசனையுரைகள். (Appreciation not criticism.)

2. பாதிக்காதவை, பிடிக்காதவை பற்றி எழுத வேண்டாம். ஏனென்றால், ஆரம்ப கால கட்டத்தில், போதிய அனுபவின்மை காரணமாக ஒரு படைப்பு பிடிக்காமல் போகலாம்.

3. ஒரு படைப்பு ஏன் பிடித்தது என ஆராய்ந்து எழுதுங்கள். இது கால போக்கில், உங்கள் ரசனையை உங்களுக்கே காட்டும்.

4. ஒரு வாசகன் தன்னை இணை-படைப்பாளியாக கொள்ளாமல், ஒரு படி கீழே நின்று கொள்ள வேண்டும். வாசகன் என்பவன் பெற்றுக் கொள்பவன்.

எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்தது என்று மட்டும் எழுதுங்கள். ஆசிரியனுக்கு வழிகாட்டுதல், திருத்தியமைத்தல் வேண்டா.

5. ஏன் பாதித்தவற்றை எழுத வேண்டும்? இது ஒரு விவாதத்தை உருவாக்கும். உங்கள் எண்ணங்களை சீராக வெளிப்படுத்துவதன் மூலமாக உங்கள் மொழியை பழக்குகிறீர்கள். மொழி சிந்தனையை பழக்கும். எழுதும்போது, சில அக நிகழ்ச்சிகள் கூடும், சில குறையும்.

அவை ஏன் நிகழ்கின்றன என்பதை பார்ப்பது, உங்களை நீங்களே பார்ப்பதற்கு நிகர். இவ்வண்ணம் எழுதி, விவாதித்து முன் செல்லும் பயணத்தில், மெல்ல மெல்ல உங்களுக்கென ஒரு விரிந்த வாசிப்பும், ஆளுமையும், தனித்த பார்வையும் உருவாகி, தேர்ந்த விமர்சகன் என்ற நிலையை அடைந்திருப்பீர்கள்.

இப்புத்தகத்திற்கு பதிவு எழுத அமர்ந்தபோது, எவ்வாறு ஆரம்பிப்பது என்ற எழுந்த கேள்வியை வைத்தே மேற்சொன்ன விமர்சனப் பார்வை குறித்த கட்டுரையை தேர்வு செய்தேன்.

இது மட்டுமல்லாமல், இலக்கிய நடை, இலக்கிய பகுப்புகள், பட்டியல்கள், ரசனை, வணிக எழுத்து, குறியீடுகள், எழுத்தாளர் ஆதரவின் எல்லை என பலவற்றை தெளிவாகவும், சுருக்கமாகவும் அலசுகிறார் ஜெயமோகன்.

வாசிப்பது ஒரு அனுபவம் என்றால், வாசிப்பை பற்றி வாசிப்பதும், வாசிப்பவற்றை பற்றி வாசிப்பதும் இன்னொரு அனுபவம். சுவாரஸ்யம். நாம் பிறந்து வளர்ந்த ஊரிலேயே, நம் கண்ணில் இருந்து தப்பிய புதுப்புது இடங்களை கண்டு கொள்வதைப் போல.

நூல்: இலக்கியத்தின் நுழைவாயிலில்
எழுதியவர்: ஜெயமோகன்
வகை: கட்டுரைத் தொகுப்பு
விஷ்ணுபுரம் பதிப்பகம்
பக்கங்கள்: 136
விலை: ₹152

#ilakkiyaththin_nuzhaivaayilil_book_review #இலக்கியத்தின்_நுழைவாயிலில்_நூல் #ஜெயமோகன் #jayamohan #writer_jayamohan #வாசகர் #கட்டுரை #Literature #இலக்கியம் #Jeyamohan #ஜெயமோகன் #Vishnupuram_Publications #விஷ்ணுபுரம்_பதிப்பகம்

You might also like