வடித்த சிலையை சிற்பியே உடைத்த கதை!

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்.

ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து, பாஜகவை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.

எலியும், பூனையுமாக இருந்த தேசியக் கட்சிகளையும், பிராந்தியக் கட்சிகளை ஒன்று திரட்டினார்.

பல மாநிலங்களில் எதிர் எதிர் அரசியல் நடத்தும் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இந்த கூட்டணியில் இடம் பெற்றனர். திரினாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இணைந்தன.

தனது பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி, பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.எதிர்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டது.

இந்தக் கூட்டணியின் சிற்பி, நிதீஷ்குமார் என சொல்வதில் தவறு இல்லை.
நிதீஷ்குமார் வடித்த சிலையை, அவரே உடைத்து நொறுக்குவார் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

உத்தரபிரதேசத்தில் காங்கிரசை ஒதுக்கிவிட்டு ’இந்தியா’ கூட்டணியில் முதல் பிளவை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

ஆனால் அவர், உ.பி.யில் காங்கிரசுக்கு 11 தொகுதிகளை ஒதுக்கி, ‘இந்தியா’ கூட்டணியில் முதல் ஆளாக தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளார்.

தனது இன்னொரு கூட்டணி கட்சியான ஆர்.எல்.டி. கட்சிக்கு ஏற்கனவே 7 இடங்கள் அளித்துள்ளார், அகிலேஷ் யாதவ்.

ஆனால் , ‘இந்தியா’ கூட்டணியில் ஹீரோவே வில்லனாக மாறியது, யாருமே எதிர்பாராத ‘ட்விஸ்ட்’.

‘இந்தியா’ கூட்டணியை கட்டமைத்த நிதீஷ், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர் பார்த்தார்.

நடக்கவில்லை.

குறைந்த பட்சம், கூட்டணியின் தலைவராக தன்னை நியமிப்பார்கள் என நினைத்தார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயை, தலைவராக நியமித்ததால், அதிருப்தியில் இருந்த நிதீஷ்குமார், கூட்டணியையே உடைத்து விட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து நிதீஷின் ஐக்கியஜனதா தளம் போட்டியிட்டது. நிதீஷ் முதலமைச்சர் ஆனார்.

இரண்டே ஆண்டுகளில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு, லாலுவின் ஆர்.ஜே.டி, மற்றும் காங்கிரசுடன் சேர்ந்து மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

இப்போது அந்த ‘மெகா கூட்டணி’யில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்து ஒன்பதாவது முறையாக முதலமைச்சர் ஆகி இருக்கிறார்.

பாஜகவை சேர்ந்த இரண்டு பேருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது..

மாறி மாறி நகர்வது நிதிஷ் குமாருக்கு புதிய விஷயம் அல்ல.

கடந்த 10 ஆண்டுகளில் நிதீஷ்குமார், ஐந்து முறை கூட்டணியை மாற்றிய தலைவர்.
இதனால் நிதீஷ்குமாரை ‘பல்து ராம்‘ (அடிக்கடி கட்சி மாறுபவர்) என ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் கிண்டல் அடிப்பார்கள்.

மீண்டும் அணி மாறியதன் மூலம், அந்த மோசமான ‘பட்டப்பெயரை’ தக்க வைத்துக் கொண்டுள்ளார், நிதீஷ்குமார்.

அடுத்த மாற்றம் எப்போ ஜி.

– பி.எம்.எம்.

#திரினாமூல்_காங்கிரஸ் #ஆம்_ஆத்மி #காங்கிரசு #அகிலேஷ்_யாதவ் #மல்லிகார்ஜுன்_கார்கே #கம்யூனிஸ்டு #காங்கிரஸ் #பீகார்_முதல்வர் #நிதீஷ்_குமார் #congress #bihar #nithish_kumar #trinamul_congress #aamathmi #akilesh_yathav #maligarjuna_karge #communist

You might also like