ஆண்டுதோறும் அயோத்தி செல்வேன்!

நடிகர் ரஜினிகாந்த் 

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொள்ளுமாறு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனையேற்று தனது குடும்பத்தினருடன் அவர் அயோத்தி சென்று, ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

விவிஐபிக்களுக்கு ஒதுக்கப்பட்ட முதல் வரிசையில் ரஜினிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

ரஜினி அருகே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சீட் அளித்திருந்தனர்.
அந்தப் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, ரஜினிகாந்துக்கு இரு கைகளையும் குவித்து வணக்கம் தெரிவித்தார்.

பதிலுக்கு ரஜினியும் கை கூப்பி வணக்கம் சொன்னார். சைகை மொழியில் இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர்.

அயோத்தியில் ஆங்கிலச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரஜினி,  “இனிமேல் ஆண்டுதோறும் ராமர் கோயிலுக்கு வருவேன்” என்று தெரிவித்திருந்தார்.

நேற்று மாலை அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “சிறப்பான முறையில் தரிசனம் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் திறந்ததும் முதலில் பார்த்த 150 – 200 நபர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு” எனக் குறிப்பிட்டார்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like