ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாரதி சொல்லிச் சென்று பல ஆண்டுகள் ஆனபின்னும், பாலின சமத்துவம் என்பது இன்றும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்களின் முன்னேற்றம் பெருக்கெடுத்து வந்தாலும், அவர்களைக் குறித்த பொதுப்பார்வையில் இன்னும் சமநிலை வரவில்லை.
அதனை எட்டத்தான், தொடர்ந்து பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை எல்லாம் அந்த பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றனவே தவிர, இலக்கினை அடைந்தபாடில்லை. ஏன் அப்படி?
கடந்த நூற்றாண்டு பெண்கள்!
பெண்கள் நூறாண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்தார்கள்?
அதனை யோசித்துப் பார்ப்பது ரொம்பவே சுலபம்.
இப்போது, பெண்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களோ, என்ன சாதித்திருக்கிறார்களோ, அவற்றில் துளி கூட அந்த காலகட்டத்தில் நாம் கண்டிருக்க முடியாது.
கல்வியறிவு பெறுவது முதல் வெளியுலகைக் காணத் தன்னந்தனியே அடியெடுத்து வைப்பது வரை, ஒவ்வொன்றிலும் பல தளைகள் அப்போதிருந்தன.
அவற்றைக் களைவதற்குப் பெரும்போராட்டம் தேவைப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட நிலை இல்லவே இல்லை என்று சான்றுகள் தேடி அலைய வந்தது.
பிடித்த உணவை உண்ண முடியாமல், விரும்பிய ஆடையை உடுத்த முடியாமல், நினைத்த நேரத்தில் தூங்க இயலாமல், ஓய்வென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமல், வீட்டிலும் பொதுவெளியிலும் ஆண்களின் பார்வை கவிழும் இடத்தில் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.
குழந்தைத் திருமணம் தொடங்கிப் பெண்களை முழுக்க ஆண்களைச் சார்ந்தவர்களாகவே கருத வைக்கும் வாழ்க்கை முறை அப்போதிருந்தது.
மனதாலும் உடலாலும் காயப்பட்டுக் கூனிக் குறுகும் அளவுக்கு, பெண்கள் மீதான வன்முறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.
இப்படிச் சொல்வதனால், இன்று அந்த நிலை முற்றிலும் தலைகீழாகிவிட்டது என்றெண்ண முடியாது.
பெண்களை அடிமைகளாகக் கருதும் மனோபாவம் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அத்தகைய மனிதர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதையே வெற்றியாக நினைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.
தொடரும் முன்னேற்றம்!
பெண்கள் முன்னேற்றம் என்பது அனிச்சையாக உச்சரிக்கும் சொல் போல மாறிவிட்டது. ஓராண்டின் கல்வியறிவு சதவிகிதத்தைச் சொல்லத் தொடங்கினால், அதில் பெண்களின் நிலை மேலேறியிருக்கிறது.
ஆண்களால் மட்டுமே இந்த வேலையை செய்ய முடியும் என்று குறிப்பிட்ட சில திசைகளில் கைகாட்டுவது குறைந்திருக்கிறது.
முப்படைகளில் கூட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. விஞ்ஞானத் துறையில் கீழ்நிலை, நிர்வாகம், கட்டமைப்பு பணிகளில் பணியாற்றிய காலம் மலையேறி, இன்று பெண்கள் ஒரு குழுவுக்குத் தலைமை ஏற்கும் அளவுக்கு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
சமூக அளவிலும் நகரப் பெண்களை விடக் கிராமத்தில் இருப்பவர்களின் மனப்பாங்கும் உடற் செயல்பாடும் பெருமளவில் மேம்பட்டுள்ளது.
உடலுழைப்பு சார்ந்த வேளாண்மை உள்ளிட்ட பணிகள் தவிர்த்து பல்வேறு துறைகளில் விரும்பிக் களமிறங்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
தென்னிந்தியாவில் நிலவும் இந்த நிலைமையைக் கொண்டே, தற்போது வடமாநிலங்களிலும் மத்திய, மாநில அரசுகள் மூலமாகப் பல்வேறு மகளிர் முன்னேற்றத் திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன.
வாக்கு வங்கி ஆதாயத்திற்காகச் சிலர் அவற்றைப் பயன்படுத்தினாலும், அவற்றின் வழியாகச் சில நூற்றாண்டுகளாகப் பெண்களைப் பீடித்திருந்த மாயச் சங்கிலிகள் தற்போது அறுபடுவதையும் காண முடிகிறது.
ஊடகங்களில் ஆணாதிக்கம்!
பொதுவெளியில் ஆண், பெண் நட்பினை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனநிலை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
‘புது வசந்தம்’ திரைப்படம் போலப் பூத்த அப்படியொரு மனநிலையில், 2000-க்குப் பிறகு லேசாகப் பிசகு நிகழ்ந்திருக்கிறது.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளம் என்று அடுத்தடுத்த தளங்களில் ஊடக உலகம் மேலேறினாலும், பொழுதுபோக்கு என்ற பெயரில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கில் பெரிய மாற்றமில்லை.
உண்மையைச் சொன்னால், சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நிலைமை மோசமாகியிருக்கிறது. அப்போதெல்லாம், ‘இரட்டை அர்த்த நகைச்சுவை’ என்பது வெகு அரிதாகவே உதிர்க்கப்படும்.
குழுக்களாக அல்லது கும்பலாக இருக்கும்போதோ, கேளிக்கை என்ற பெயரில் கூடும்பொழுதோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவற்றைக் கேட்க நேரிடலாம். ஆண்கள் பெருக்கெடுத்திருக்கும் இடங்களில் அவற்றைக் கேட்கலாம்.
இன்று, இருபாலரும் இருக்குமிடங்களில் பெண்களைப் பாலியல்ரீதியாகக் கிண்டலடிப்பது சாதாரண விஷயமாக மாறியுள்ளது.
அதுவே, நவீன கலாசாரத்தின் கூறாகவும் முன்வைக்கப்படுகிறது.
பெண் சுதந்திரம் என்ற பெயரில் இவை அரங்கேறும்போது, பெண்ணியம் பேசும் சிலர் மவுனம் காக்கும் சூழலும் உருவாகிறது.
இவற்றை ஆதரிப்பது போலவே, கண்டும் காணாமல் கடந்துபோவதும் கூட இந்த விஷயம் பல்கிப் பெருங்கிளைகள் விரிப்பதற்கு உதவுகிறது.
மேற்கத்திய கலாசாரத்தின் மீதான மோகம்தான் பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று முழங்குவதும் சில இடங்களில் நிகழ்கிறது.
அவற்றை எதிர்ப்பவர்களை, பழமை விரும்பிகள் பயன்படுத்திக்கொள்வதும் நடக்கிறது.
இவ்விரு துருவங்களிலும் ஆட்கள் சேர்வது, பெண் சமத்துவத்தை உண்மையிலேயே நிலைநாட்டத் துடிப்பவர்களைத் துணையின்றித் தவிக்கவிடும் இடத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வீட்டிலிருந்து தொடங்குவோம்..!
ஆண், பெண் இருபாலரும் இருக்கும் வீடுகளில், ‘அவன மாதிரிதானே நானும் இருக்கேன், என்னைய மட்டும் குறை சொல்றீங்க’ என்ற குரலைக் கேட்க முடியும்.
அதீத நுகர்வைப் பெரிதாகக் கருதும் கலாசாரத்தின் வளர்ச்சி, பெண் குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.
’அதிலிருந்து தப்பிக்கிறேன் பேர்வழி’ என்று மீண்டும் ஆணாதிக்கத்தின் கையில் நவீனப் பெண்களை ஒப்படைத்துவிட முடியாது.
அதனைத் தவிர்க்க, ஒரு விலங்கினைப் போல ஆண் குழந்தைகளை வளர்த்தெடுப்பதை முதலில் கைவிட வேண்டும்.
‘ஆணும் பெண்ணும் சமம்’ என்பதை நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஒவ்வொன்றிலும் ஒரேமாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்களை வெற்றி பெறத் தூண்டுவதில் இருந்து, அவர்கள் பெறும் வெற்றிகளை அங்கீகரிப்பது வரை ஒரேமாதிரியான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியன ஆண், பெண் குழந்தைகளுக்கு ஒரேமாதிரியாகக் கிடைக்க முயற்சிக்க வேண்டும்.
பாலின ரீதியிலான மோதல் உருவாகும்போதெல்லாம், ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதைப் போதிக்க வேண்டும்.
அடிப்படைச் சுகாதாரத்தோடு வாழ்வதற்கும், சமூகத்தில் கண்ணியமாக மதிக்கப்படுவதற்குமான மாண்புகளைக் கற்றுத் தந்து, அவ்வாறே எதிர்பாலினத்தவரை நோக்கச் செய்ய வேண்டும்.
முக்கியமாக, பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே இவற்றை அடிக்கோடிட்டு உணர்த்த வேண்டும்.
அதுவே, பெண் குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதற்கும், அவர்களோடு சமத்துவம் பாராட்டுவதற்குமான மனநிலையை இயல்பாகப் பூக்கச் செய்யும்.
இன்றைய பெண்கள் தெளிவானவர்களாக, தைரியமானவர்களாக, வலுமிக்கவர்களாகத் திகழ்கின்றனர். அதிகாரத்தைத் தெரிவு செய்யும் வல்லமை அவர்களிடத்தில் நிறையவே உண்டு.
அதனை ஏற்கும் மனப்பாங்கைப் பெருக்குவதோடு, ஒன்றாகக் கைகோர்த்து பயணிக்கும் மனநிலைதான் இன்றைய சமூகத்தின் முக்கியத் தேவை.
பெண் குழந்தைகளைக் கௌரவப்படுத்தும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்வதன் வழியே அதனை நிகழ்த்திக் காட்ட முடியும்.
அந்த வகையில், ஜனவரி 24- ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்! சமத்துவத்தின் வழியே சாதனைகள் படைப்போம்!
– உதய் பாடகலிங்கம்