யோகாவின் முக்கியத்துவம் குறித்து திரைக்கலைஞர் சிவகுமார் அளித்த நேர்காணலிலிருந்து…
“முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் சினிமாவில் நடித்த காலங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் என் நினைவுகளில் நீங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அன்றாடம் நான் செய்து வரும் யோகா தான்.
65 வயதிற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டு மேடைப் பேச்சுக்களில் கவனம் செலுத்தினேன். 67 வயதில் கம்பராமாயணமும் 75 வயதில் மகாபாரதமும் மேடையில் இடைவிடாது பேசி இருக்கிறேன்.
அதேபோல் என் 81 வயதில் திருக்குறளை தொடர்ந்து 4 மணி நேரம் இடைவிடாது பேசி இருக்கிறேன். இதுபோன்று தொடர்ந்து நான் பேசுவதற்கு காரணமும் இந்த யோகாதான்.
தீய பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ளாமல் உடலுக்கு ஆரோக்யம் தரும் யோகா போன்ற கலைகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் நம் ஆயுட்காலம் நீடிக்கிறது.
நாடாண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்த சிவாஜி கணேசன் அவர்களும் 80 ஆண்டுகளைத் தொட முடியாத நிலையில், இந்த யோகா பயிற்சி என்னை இத்தனை ஆண்டுகள் உயிர்ப்புடன் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எனவே குழந்தைகளே, இளைஞர்களே, நீங்களும் யோகா கற்றுக் கொண்டு நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”.