மத நல்லிணக்கம் இன்றையத் தேவை…!

“உண்மை ஒன்று தான். ஞானிகள் அதைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்’’
– இது ரிக் வேதத்தில் வரும் ஒளி மின்னும் ஒரு மகத்தான வரி.

மத நல்லிணக்கத்தை வெகு அருமையாக உணர்த்துகிற இந்தப் பழமையான வாக்கியம் இந்தியாவின் சமத்துவமான பார்வையை, சகிப்புத்தன்மையை, நேசிப்புணர்வைத் துல்லியமாக உணர்த்துகிறது.

பல்வேறு மதத்தினர் வாழும் நம் நாட்டில் மதப் பாகுபாடு மேலிட்டு நாட்டின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.

எத்தனையோ உயிர்கள் பலியாகியிருக்கின்றன. மதப்பூசலுக்கான சொற்களைப் பொதுவெளியில் யாரோ விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தாலும் நூறு கோடி மக்களுக்கு மேல் வாழும் நம் நாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று மத நல்லிணக்கம். இறை நம்பிக்கையால் பிரிந்திருந்தாலும், ஒருவரின் நம்பிக்கையை மற்றவர் மதிப்பதுதான் பெரும்பாலான இந்தியரின் அடிப்படைப் பண்பு.

எண்ணற்ற திருவிழாக்களும், அளப்பரிய கலாச்சாரமும் அதைத்தான் உணர்த்துகின்றன.

“பிறப்பால் எவரும் தாழ்வுற்ற மனிதர் இல்லை’’ என்பதைச் சொல்கிற பௌத்தம் துவங்கி, இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும் சக மனிதர்களின் மத வழிபாட்டை மதிக்க வேண்டும் என்பதையே உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அனைத்து மத நூல்களும் இதையே மையமாக முன்வைக்கின்றன.
மதச்சார்பற்ற தன்மை என்பதைச் சாரமாகக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசியல் சட்டம்.

எத்தனையோ ஆன்மிக ஞானிகள் உருவாவதற்கான வளமான சூழ்நிலையோடு இருந்து வந்திருக்கிறது இந்திய மண்.

இங்கிருந்து நறுமணப் பொருட்களும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி இருக்கிறது. மதமும், ஆன்மிகமும் கூட ஏற்றுமதியாகி இருக்கிறது.
இன்னும் உடல் மற்றும் மனநலனுக்காக இந்தியாவைத் தேடி வருகிற பயணிகள் இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்.

சிகாகோவில் சர்வ மத மாநாட்டில் பேசும்போது விவேகானந்தர் இந்திய மனநிலையைப் பிரதிபலிக்கிற விதத்தில் சொன்னார்.

“எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்ற நாங்கள் நம்புவதோடு, ‘எல்லா மதங்களும் உண்மை தான்’ என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்’’.

மத நல்லிணக்கத்திற்குப் பொருத்தமான எவ்வளவு அர்த்தம் பொதிந்த பேச்சு?
அன்றே மத நல்லிணக்க உணர்வை “பிறப்பால் அனைவரும் ஒன்றே’’ என்பதை வலியுறுத்திய திருக்குறள் வேரூன்றிய மண் இது.

தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள சிறு கிராமத்தில் “யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’ என்கிற மத, மொழி, நாடு என்கிற பேதங்களை மீறி நேசமான வரிகளை பல்லாண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்புலவன் ஒருவன் ஓலைச்சுவடியில் எழுத முடிந்திருக்கிறது என்றால் நம்முடைய வேர்களில் எந்தப் பேதங்களும் இல்லை, அன்றும், என்றும்!

You might also like